என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspect in student's death"

    • வசந்தபுரம் அருகே மேல் சாத்தம்பூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • மாலை சிரஞ்சீவி நண்பர்களுடன் ஜேடர்பாளையம் தடுப்பு அணையில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    தேனி மாவட்டம் மார்க்கேயன்கோட்டை அருகே அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி (வயது 20).

    இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வசந்தபுரம் அருகே மேல் சாத்தம்பூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையத்தில் நண்பர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிரஞ்சீவி நண்பர்களுடன் ஜேடர்பாளையம் தடுப்பு அணையில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, சிரஞ்சீவி தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார், மீனவர் உதவியுடன் சிரஞ்சீவி உடலை மீட்டனர்.

    இந்தநிலையில் நேற்று சவுந்தரபாண்டியன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். மேலும் சிரஞ்சீவியுடன் குளிக்கச் சென்ற மற்ற 4 பேரையும் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இதனிடையே, சிரஞ்சீவி சாவில் சந்தேகம் இருப்பதால், போலீசார் உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் எனக்கூறி சவுந்தர பாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, சிரஞ்சீவி இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஜேடர்பாளையம் போலீசார் உறுதி அளித்ததின் பேரில், நீண்ட நேர போராட்டத்தை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் சிரஞ்சீவி உடல் ஒப்படைக்கப்பட்டது. 

    ×