என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வாய்மேடு அருகே டீக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி மலையான் குத்தகை பகுதியை சேர்ந்தவர் தாயுமானவன். இவருடைய மகன் வீரையன் (வயது31). இவர் ஆயக்காரன்புலம் கடைத்தெரு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு அருகிலுள்ள முருகானந்தம் என்பவரை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

    அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெட்ரோல் வேண்டும் என வீரையனிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோலை எடுக்க முயன்ற போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரையனை வெட்டியும், உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் ஒரு கையில் உள்ள விரல் துண்டாகி கீழே விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டீக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நாகூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நாகூர் நகர செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பாலாஜி, நகர தொண்டர் அணி அமைப்பாளர் நாகராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 32 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 32 பேரையும் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். இதையடுத்து 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகை மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 433 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து 8 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 425 ஆக மாறியது.

    இந்தநிலையில் நேற்று கீழ்வேளூர் அருகே வடுகச்சேரியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை, கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் இருந்து நாகைக்கு காய்கறி ஏற்றிவரும் சிக்கலை சேர்ந்த 54 வயதுடைய வேன் டிரைவர் உள்பட 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 280 பேர் குணமடைந்துள்ளனர். 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்ததில் ஈடுபடுவது என்று நியாய விலைக்கடை பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்செழியன், இணைச்செயலாளர் ஆடியபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா வரவேற்றார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

    புதுகை மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்த போது ரேசன் கடையில் பணியாற்றிய பெண் பணியாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிப்பது.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் தரமானதாக வழங்க வேண்டும். மத்திய அரசு தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியின் அளவு மாதந்தோறும் சரியாக வருவது போல் மாநில அரசின் தொகுப்பில் இருந்தும் சரியான அளவில் அரிசி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் கடைகளை அடைத்து வேலைநிறுத்ததில் ஈடுபடுவது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 3-ந் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் கஜபதி நன்றி கூறினார்.
    நாகூர் அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று திட்டச்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். பின்னர் மோட்டார்சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த வீரபாண்டி (வயது36) என்பதும், 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    ஆடி அமாவாசையன்று வேதாரண்யம், கோடியக்கரை கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம், கோடியக்கரை கடலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளாய அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்தநிலையில் வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலில் புனித நீராடுவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் முருகு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடலோர காவல் குழும போலீசார், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் கூறுகையில்,

    நாளை(திங்கட்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வர வாய்ப்புள்ளது. எனவே ஆடி அமாவாசையன்று கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்படும். மேலும் கோவில்களும் திறக்கப்படாது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளி மாவட்டம், வெளியூர் மற்றும் உள் கிராமங்களிலிருந்து யாரும் கடலில் புனித நீராட வரவேண்டாம் என்றார்.
    மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் 5 பேரை எந்தவித காரணமுமின்றி, அந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நிர்ணயித்துள்ள தினக்கூலி ரூ.310-க்கு பதிலாக ரூ.250 மட்டுமே வழங்குவதாகவும், அவர்களுக்கு சம்பள பில் கூட வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் ஒப்பந்த தொழிலாளர்களின் குறைகளை தீர்க்கக்கோரி மனு கொடுத்தனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ரவீந்திரன், துரைக்கண்ணு, சீனிவாசன், ஸ்டாலின், மேகநாதன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    திருமருகல் பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    திட்டச்சேரி:

    திருமருகல் பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திராவிடர் கழக நாகை மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நெப்போலியன், மாவட்ட அமைப்பாளர் ராசமுருகையன், மாநில மாணவரணி துணை செயலாளர் பொன்முடி, மண்டல இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோவையில் பெரியாரின் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலைமறியலால் நாகூர்-நன்னிலம் சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்திய பருத்தி கழகத்தால் 95 சதவீதம் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த விற்பனை கூடத்தில் தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருப்பதால், வாரந்தோறும் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நாகை மாவட்ட விற்பனை குழு செயலாளர் வித்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருப்பு வைக்கப்பட்டு இருந்த பருத்தி மற்றும் அதன் எடை குறித்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இங்கு 700 குவிண்டால் பருத்தி இருப்பு வைக்க மட்டுமே இடவசதி உள்ளது. அதிகமாக விவசாயிகள் கொண்டு வருவதால் இடபற்றாக்குறையால் திறந்தவெளியில் பருத்தியை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென மழை பெய்தால் பருத்தி வீணாகும். இதனால் விவசாயிகளின் நலன் கருதி அருகில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் 3 ஆயிரம் குவிண்டால் பருத்தியை வைத்துள்ளோம். இடநெருக்கடியை கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பின்புறம் கட்டிட விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந் தேதி நடந்த ஏலத்தின்போது எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்திய பருத்தி கழகத்தால் 95 சதவீதம் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு உடனிருந்தார்.
    வேதாரண்யம் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள செட்டிப்புலத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது30). இவர் கரியாப்பட்டினம் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.16 ஆயிரம் மற்றும் செல்போன், மடிக்கணினி, சார்ஜர் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து முத்துக்குமரன் கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    காரைக்கால் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே உள்ள வரிச்சிக்குடி சோனியா காந்திநகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் மணிகண்டன்(வயது21). டிரைவர். இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டு தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெட்சின ரெயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு யூனியனின் திருவாரூர் கிளை செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மணி, சுமை பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ரெயில்வே துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×