என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருத்தி எடையை நாகை மாவட்ட விற்பனை குழு செயலாளர் வித்யா பார்வையிட்ட போது எடுத்தபடம்.
    X
    பருத்தி எடையை நாகை மாவட்ட விற்பனை குழு செயலாளர் வித்யா பார்வையிட்ட போது எடுத்தபடம்.

    இந்திய பருத்தி கழகத்தால் 95 சதவீதம் பருத்தி கொள்முதல் - அதிகாரி தகவல்

    செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்திய பருத்தி கழகத்தால் 95 சதவீதம் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த விற்பனை கூடத்தில் தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருப்பதால், வாரந்தோறும் அதிக அளவில் பருத்தியை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நாகை மாவட்ட விற்பனை குழு செயலாளர் வித்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருப்பு வைக்கப்பட்டு இருந்த பருத்தி மற்றும் அதன் எடை குறித்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இங்கு 700 குவிண்டால் பருத்தி இருப்பு வைக்க மட்டுமே இடவசதி உள்ளது. அதிகமாக விவசாயிகள் கொண்டு வருவதால் இடபற்றாக்குறையால் திறந்தவெளியில் பருத்தியை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென மழை பெய்தால் பருத்தி வீணாகும். இதனால் விவசாயிகளின் நலன் கருதி அருகில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் 3 ஆயிரம் குவிண்டால் பருத்தியை வைத்துள்ளோம். இடநெருக்கடியை கருத்தில் கொண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பின்புறம் கட்டிட விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந் தேதி நடந்த ஏலத்தின்போது எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்திய பருத்தி கழகத்தால் 95 சதவீதம் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு உடனிருந்தார்.
    Next Story
    ×