என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் 2-வது நாளாக மழை பெய்தது. இதனால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அதிகாலை 2 மணி முதல் பெய்ய தொடங்கிய மழையானது காலை 7 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியது.

    வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கோடியக்கரை, கடினல்வயல் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்து நின்றது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பு விலை உயர்ந்துள்ளது.

    மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பள தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் வீட்டில்முடங்கி உள்ளனர். வேதாரண்யம் பகுதியில் மானாவாரி சம்பா சாகுபடி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மராமத்து பணிகளை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தலைஞாயிறு, திட்டச்சேரி, மயிலாடுதுறை, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    இதேபோல கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை 5 மணி நேரம் நீடித்தது. கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளான தேவூர், சாட்டியக்குடி, வலிவலம், கொளப்பாடு. கிள்ளுகுடி, வெண்மணி, இருக்கை, இலுப்பூர், குருக்கத்தி அத்திபுலியூர், கோகூர், ஆழியூர், சிக்கல், சங்கமங்கலம், ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மழை பெய்தது. மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திருமருகல் ஒன்றிய பகுதிகளில் ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருமருகல்,மருங்கூர், ஆலத்தூர் ,போலகம், பொறக்குடி,கணபதிபுரம், இடையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    நாகை 50.70, திருப்பூண்டி 98.40, தலைஞாயிறு 100.60, வேதாரண்யம் 70.40, மயிலாடுதுறை 28.40, சீர்காழி 47, கொள்ளிடம் 24, தரங்கம்பாடி 30, மணல்மேடு 46.

    நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் இளம்பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் இளம்பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். 9 வியாபாரிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டதால் பரவை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 601 ஆக இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் நாகை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டதால், தொற்று எண்ணிக்கை 602 ஆக மாறியது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் பரவை காய்கறி மார்க்கெட்டில் 9 வியாபாரிகளுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. மேலும் ஆயுதப்படையை சேர்ந்த 9 போலீசார், 4 கர்ப்பிணி பெண்கள், 3 செவிலியர்கள் உள்பட 55 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 360 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் சீர்காழி ஆருர் மெயின் ரோட்டை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், திட்டச்சேரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் தலைஞாயிறு தாலுகா திருமுலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது. 
    கீழ்வேளூர் அருகே குருக்கத்தி டாஸ்மாக் கடை எதிரே டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே குருக்கத்தி டாஸ்மாக் கடை எதிரே டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் அம்பேத்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகள் வேலை நேரத்தை மாலை 5 மணியாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடம்பரவாழ்க்கை மெயின்ரோட்டை சேர்ந்த மாரியம்மாள் (வயது55), கொத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த வேலவன்(55), நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த மகாலிங்கம் (40) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைதுசெய்து, அவர்களிடம் இருந்த 330 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டினர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது39). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த பொற்செல்வன் (33), சிறுதலை காட்டை சேர்ந்த ஐயப்பன் (24), ராமச்சந்திரன் (34) ஆகிய நான்கு பேரும் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் தமிழக கடற்கரை பகுதியில் சுமார் 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், படகில் இறங்கி மீனவர் பாரதிதாசனை அரிவாளால் தலை மற்றும் கைகளில் வெட்டினர். மற்ற 3 மீனவர்களையும் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதை தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் படகில் கரைக்கு திரும்பினர். இதையடுத்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுகாட்டுத்துறை மீனவர்களை கடற்கொள்ளையர்கள், தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது. நாகை மாவட்டத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 523 ஆக இருந்தது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது. நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியான நிலையில் 302 பேர் குணமடைந்துள்ளனர். 229 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மீன்பிடி துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். மேலும் படகுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாகை மீன்பிடி துறைமுகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மீனவர்கள் கைகளில் கருப்புக்கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கான வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும். படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்கவேண்டும்.

    மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையில் மத்திய, மாநில அரசுகள் அத்துமீறக்கூடாது. மீனவர்கள் வாழ்வாதாரம், கடல் வளம் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியை அரசுகள் கைவிட வேண்டும். மீன்பிடி தொழிலை முடக்கும் போக்கையும், மீனவர் சமுதாயத்தையும் அழிக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாங்கண்ணியை அடுத்துள்ள செருதூரில் மீனவர்கள் தங்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு செருதூர் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை குறைக்க கோரியும் போராட்டத்தில் கலந்துகொண்ட 80-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை நம்பியார் நகரில் படகுகளில் மீனவர்கள் மற்றும் பெண்கள் நின்று கொண்டு கைகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நம்பியார்நகர் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தியும், படகுகளுக்கு வழங்கப்படும் மானிய டீசலுக்கான வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மயிலாடுதுறையில், தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை: 

    மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாபு(வயது 44). இவர் மீது அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் நீலகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. இதனால் இவரது பெயர், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்று உள்ளது. பாபு, தி.மு.க. நகர செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணி அளவில் பாபு தனது வீட்டின் அருகில் உள்ள துர்க்கையம்மன் கோவில் குளத்திற்கு வாய்க்காலில் இருந்து தண்ணீர் செல்வதை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், திடீரென பாபுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, கை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பாபு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பாபுவின் கூட்டாளிகளான அரியலூர் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தை சேர்ந்த மனோகரன்(33), மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த சேந்தங்குடி மாதவன்(26), திருவழுந்தூர் பாரதிராஜா(28), மாப்படுகை வெங்கடேஷ்(21) ஆகிய 4 பேரும் அரியலூர் மாவட்டம் செந்துறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்கள் 4 பேரையும் 7 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து செந்துறை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பாலையூர் அருகே இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் டிராக்டர் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பாலையூர்:

    நாகை மாவட்டம் குத்தாலம் மீனாங்குளம் மலையன் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் அனுஷா(வயது20). செல்வம் வெளிநாட்டில் இருந்து வருகிறார். இந்தநிலையில் அனுஷாவும், அவரது அம்மாவும் குத்தாலத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு வில்லியநல்லூர் தெற்குதெருவை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சதீஷ்குமார் அடிக்கடி வந்து போவதாக தெரிகிறது. இதனை அனுஷா தட்டி கேட்டுள்ளார். 

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், அனுஷாவுக்கு கொலைமிரட்டல் விடுத்து, அவரை குழவி கல்லால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அனுஷா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அனுஷா கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    காரைக்கால் புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மோட்டார் வாகன ஓட்டுனர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    காரைக்கால்:

    காரைக்கால் புதிய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மோட்டார் வாகன ஓட்டுனர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை தாங்கினார். இதில் திரளானோர் கலந்துகொண்டு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    மணல்மேடு அருகே விஷவண்டுகள் கடித்து சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் மற்றும் அவரது மகள் இன்ஷிகா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
    மணல்மேடு:

    நாகை மாவட்டம் மணல்மேடு அருகே கடலங்குடி தோப்பு செட்டித்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது வீட்டின் எதிரே உள்ள ஒரு பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற 4 பேரை விஷ வண்டுகள் கடித்தன.

    இதில் படுகாயம் அடைந்த கடலங்குடி நாயுடு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார்(வயது 42), அவரது மகள் இன்ஷிகா(3) உள்பட 4 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் மற்றும் அவரது மகள் இன்ஷிகா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த ஆனந்தகுமார் மற்றும் அவரது குழந்தை இன்ஷிகா ஆகியோர் விஷ வண்டுகள் கடித்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. 
    செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவன குழாயில் இருந்து 15 அடி உயரத்திற்கு காற்று வெளியேறியது. குழாயில் இருந்து கியாஸ் வெளியேறியதாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது கெயில் நிறுவனம், சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக எரிவாயு குழாய்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களில் பதித்து வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

    நேற்று மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த குழாயில் இருந்து திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் பயங்கர சத்தம் மற்றும் புழுதியுடன் காற்று வெளியேறியது. இதனை நேரில் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கியாஸ் கசிவு ஏற்பட்டுவிட்டதாக அச்சம் அடைந்தனர். இதனால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து கெயில் நிறுவன அதிகாரி கூறியதாவது:-

    நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய்கள் பதிக்கும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெறாததால் குழாய்களில் இன்னும் கியாஸ் நிரப்பப்படவில்லை. கியாஸ் நிரப்பப்பட்ட பின்னர், மேமாத்தூரில் இருந்து குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரத்தில் உள்ள மின்சார நிலையத்திற்கு கியாஸ் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பூமியில் பதிக்கப்பட்ட குழாய்களை காற்று மூலம் (கம்பரசர்) சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது அழுத்தத்தின் காரணமாக புழுதியுடன் காற்று வெளியேறியது. இதனை பொதுமக்கள் கியாஸ் கசிந்ததாக நினைத்து அச்சம் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அந்தபகுதி பொதுமக்கள் கூறுகையில், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக உள்ள நிலையில் மேமாத்தூரில் கெயில் நிறுவனம் 20 அடி ஆழத்திற்கு எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    இதனை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர். 
    ×