என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் நான்காம்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் உத்திராபதி (வயது25). பெயிண்டர். இவர் பஞ்சநதிக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து
திருமணம் செய்து கொண்டாராம்.
இந்நிலையில உத்திராபதியின் பெற்றோர் இந்த திருமணத்தை
ஆதரித்து இருவரையும் வீட்டுடன் வைத்து கொண்டார்களாம்.
இந்நிலையில் 17 வயது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
அவரது உடல் நலம் சரியில்லாததால் திருவாரூர் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து அங்கு
சிகிச்சை பெற்று வருகிறார்.
இளம்வயது பெண் கர்ப்பம் ஆனது குறித்து சிறுமியை பரிசோதித்த
டாக்டர் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலர்கொடி வழக்குப்பதிவு செய்து
பெயிண்டர் உத்திராபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாகை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 8 பேரை ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பெருங்கடம்பனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் பெருங்கடம்பனூரில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். சங்கமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் ராஜன் மகள் தீபா (27).
இவர் மெடிக்கலுக்கு வந்து ராமசந்திரனிடம், தான் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன். என்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய ராமச்சந்திரன் தனது அண்ணன் சக்திவேல் மகன் சபரிராஜ் என்பவருக்கு வேலை வேண்டி ரூ.3.50 லட்சம் தீபாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நீண்ட நாட்களாக தீபாவிடம் இருந்து அரசு வேலை தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராமச்சந்திரன் அவரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.
இது குறித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் செய்தார். இதற்கிடையே ஏமாந்த மற்றொருவரான காயத்திரி என்பவரும் தீபாவை தேடி வந்தார். இந்நிலையில் தீபாவின் தாயார் மற்றும் சகோதரர் வீட்டை காலி செய்து பொருட்களை வாகனத்தில் ஏற்றுவது தெரிய வந்தது. தகவல் அறிந்த ராமச்சந்திரன் கிராம மக்கள் உதவியோடு பிடித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கடலூர் மாவட்டம் வடலூரில் தீபா பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீபாவை நாகைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ராமச்சந்திரன் தவிர மேலும் 7 பேரிடம் ரூ.15 லட்சம் வரை வேலை மோசடியில் ஈடுபட்டதும், பிறரை நம்ப வைப்பதற்காக போலி அடையாள அட்டை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம் பகுதியில் பனியால் மாம்பூக்கள் கருக தொடங்கியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் இப்பகுதியில் சுமார் 5000 டன் மாங்காய் காய்த்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது மாமரம் பூத்து பிஞ்சு விட ஆரம்பித்திருப்பதால் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மாங்காய் விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடும்பனி பொழிவால் மாபூக்கள் கருக தொடங்கியுள்ளது.
மேலும் தேன்பூச்சி தாக்குதாலும் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளது. எனவே விவசாய துறையினர் மாபூக்கலில் ஏற்படும் கருகால் நோயை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
வேதாரண்யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 312 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் நிலுவையில் இருந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை, நீதிபதி லிசி தலைமையில் லோக் அதாலத் மன்ற உறுப்பினர்களான வக்கீல்கள் குமரவேல், வைரமணி ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
முடிவில் கிரிமினல், சிவில் வழக்குகள் என 312 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 300 அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி வேளாங்கண்ணி பேராலய திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்றதும், கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது,
தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டும், சனிக்கிழமை விடுமுறை என்பதாலும் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்தனர்.
பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும், பழைய மாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கடலில் நீராடியும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர் இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
கோடியக்கரை காட்டுப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூக்கள்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காடு மற்றும் கோடியக்கரை ஊராட்சி பகுதிகளில் சுமார் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் என்றும் பசுமைமாறா காடுகள் என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான காட்டுப்பகுதி உள்ளது.
இந்தக் காட்டுப் பகுதியில் பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் அருகருகே அமைந்துள்ளது. சரணாலயப் பகுதியில் வெளிமான், புள்ளிமான், முயல், நரி, குரங்கு, மயில், பாம்பு வகைகள், காட்டு பன்றி, குதிரை உள்ளிட்ட சாதுவான மிருகங்களும், பறவைகள் சரணாலயத்தில் சீசன் காலத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் பறவைகளும் காணப்படும்.
மேலும் காட்டுப்பகுதி ஆரம்பமாகும் ராமர் பாதம் முதல் துவங்கும் காட்டுப்பகுதியில் மூலிகை வனப்பகுதியும் உள்ளது.
இந்த மூலிகை வனத்தில் வயிற்று வலி, சளி, ஜூரம் மூக்கடைப்பு முதல் புற்றுநோய் உள்ளிட்ட பெரும் நோய்களுக்கு தேவையான அனைத்து வகையான மூலிகை மருந்துகள் செடி, கொடி, மரங்களாகவும் வளர்ந்துள்ளது.
இதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக உதவும் ஆவாரம்பூவும் பெருமளவில் உள்ளது. தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு அரு மருந்தாக உதவும் ஆவாரம் பூ காட்டுப் பகுதி முழுவதும் மட்டுமின்றி சாலைகளின் இருபுறமும் செல்வோர் கண்களை கவரும் வகையில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் போர்வை போர்த்தியது போல ஆவரம் பூ பூத்து குலுங்குகிறது.
இந்த மரத்தின் இலை, பட்டை, பூக்கள், காய் உள்ளிட்டவைகள் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக உதவுமென சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோடியக்கரை பொறிப்பகத்தில் பொறித்த313 ஆலிவர் ரெட்லி ஆமைகள் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமாகஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லுவது வழக்கம்.
இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டை வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள். அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வருவது வழக்கம்.
1982 ஆம் ஆண்டு முதல் கோடியக்கரை வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சுமார் 3 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையின் மூலம் கடலில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 14 ஆயிரம் ஆமை மூட்டைகள் சேகரிக்கபட்டு ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைக்கபட்டு உள்ளது. இதில் 3 ஆமைகளில் இருந்து எடுக்கபட்ட 313 ஆமை குஞ்சுகள் வெளிவந்தன.
இதை வனத்துறையினர் கோடியக்கரை கடல் பகுதியில் விட்டனர். மேலும் உள்ள ஆமை மூட்டைகள் குஞ்சு பொறித்தவுடன் படிப்படியாக கடலில் விடப்படும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் சரக காவல்துறை கண்காணிப்பாளர் முருகவேல், குஜராத் கெமிக்கல் நிறுவன மேலாளர் சுந்தர்ராஜ், கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் மற்றும் வனவர்கள், வனக்காவலர்கள் கலந்து கொண்டனர்.
நாகை வடக்கு பொய்கைநல்லூரில் கார் மோதி குழந்தை பலியானது
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த மணிமாறன்&சிவகங்கா தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு சர்வின் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 19.10.22 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மணிமாறன் இறந்தார்.
இதனால் சிவகங்கா குழந்தையுடன் தனது தாய் வீடான வேளாங்கண்ணி மாத்தாங்காடு சக்தி விநாயகர்கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தார்
சம்பவத்தன்று சர்வின் தனது பாட்டி மகேஸ்வரிடம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சாலையை கடக்க ஓடியபோது அவ்வழியே சென்ற கார் சர்வின் மீது மோதியது.
இதில் குழந்தை படுகாயமடைந்தது. உடன் சர்வீனை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்து5 மாதங்களில் ஒன்றரை வயது மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.பி. கண்டன உரை நிகழ்த்தினார். நாகை மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.
வேதாரண்யம் ஒன்றியத்தில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக வந்த நெல் கதிர்கள் தண்ணீரில் பெருத்த சேதம் அடைந்ததற்கு விவசாயிகள் இழப்பீடு கிடைத்திடும் வகையில் பயிர் காப்பீட்டுத் தொகை உடன் கிடைத்திடவும், 100 நாள் வேலை பணியை காலை 8 என்பதை மாற்றி 10 மணிக்கு வேலை துவங்கிடவும், தொடர்ந்து கூட்டு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள்.
எனவே உடன் கூட்டு குடிநீர் கிடைத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ராஜாஜி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாகூர் கீழப்பட்டினச்சேரி சிராமத்தில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனிடம் முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
நாகப்பட்டினம்:
மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை சந்தித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
குறிப்பாக, நாகப்பட்டினம் நாகூர் கீழப்பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்து மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதால், கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, நம்பியார் நகர் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியினையும், சாமந்தான் பேட்டை தூண்டில் வளைவுடன் கூடிய சிறு துறைமுகப் பணியினையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
திருமருகல், அம்பல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்திட வேண்டும், திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி மற்றும் பாக்கம் கோட்டூர் ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்கால சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 2&ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது. தவக்காலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.
நேற்று 2-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோடியக்காட்டில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கோடியக்கரையில் சுமார் 2250 எக்டரில் காடு அமைந்துள்ளது.
இந்த காடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இதில் புள்ளிமான், வெளிமான், முயல், காட்டுபன்றி, நரி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த காட்டில் இயற்கை யாகவே விடத்துவரை, பாலா, நாவல், அரசு, ஆலமரம் பூவரசு, உதியன், புங்கன் போன்ற ஏராளமான மர வகைகள் உள்ளன.
மேலும் 156 வகையான மூலிகைச் செடிகளும் மற்றும் பல்வேறுபட்ட முள் செடிகளும் வளர்ந்துள்ளன.
இந்த காட்டில் மான்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து புல்வெளியில் மேய்வதற்கு அதிகமான இடங்கள் இருந்தும் கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் நரிகள், நாய்கள் போன்ற விலங்குகள் அந்தக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்து மேய வரும் மான்களை வேட்டையாடுகிறது.
இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் காட்டில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடிவெடுத்தது. அதன்படி எந்திரங்கள் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த கருவேல மரங்களை அகற்றி விட்டால் வனவிலங்குகள் பாதுகாப்பாகவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமலும் சுதந்திரமாக சுற்றித் திரிய வாய்ப்புண்டு. சுற்றுலாப் பயணிகளும் காட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு செல்லும்போது இயற்கையாக சுற்றி திரியும் மான்களை கண்டு ரசிக்க முடியும்.
இதற்கான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா உத்தரவின்படி வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் மேற்பார்வை யிட்டு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.






