என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை அருகே லோடு வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தை சேர்ந்த கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளை சேர்ந்த பெண்கள் கும்பகோணத்திற்கு லோடு வாகனத்தில் சென்று வீடு வீடாக மீன்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வழக்கம்போல மீன்களை விற்ற மீனவ பெண்கள் லோடு வாகனத்தில் நாகைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது நாகை மாவட்டம் ஒக்கூர் பவர் பிளாண்ட் அருகே திடீரென லோடு வாகனம் விபத்துக் குள்ளாகி கவிழ்ந்தது. லோடு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் பயணித்த 8 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
    திட்டச்சேரி பகுதிகளில் அதிகளவில் விற்பனையாகும் புகையிலை, குட்கா பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை பகுதிகளிலும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் புகையிலை குட்கா பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

    இதனால் இளம் வயதில் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உரிமையாளர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திட்டச்சேரி, நடுக்கடை பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் சர்வ சாதாரணமாக புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையாகி வருகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் படுத்தி வருவதால் இதுபோன்ற குற்றச்செயல்களில் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட எஸ்.பி. ஜவஹர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
    திருமருகல் அருகே அரசலாற்றில் மிதந்த மூதாட்டி பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பரமநல்லூர், அகலங்கன்
    பாலம் இடையே அரசலாற்று படுகையில் புதுச்சேரி மாநிலம் எல்லை
    அருகில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க நீலம் சிவப்பு நிறம் கலந்த புடவை மற்றும் ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருந்த மூதாட்டி
    பிணம் கிடப்பதாக திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் சென்று திருமருகல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றி
    நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து
    இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், கொலையா? என பல
    கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூரில் உள்ள அஞ்சு வட்டத்து அம்மன் கோவிலில் வீதியுலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தரகுசாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 29-ம்தேதி காப்பு கட்டுதலுடன்
     துவங்கி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான யானை வாகனத்தில் அஞ்சுவட்டத்தம்மன்
    சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி
    தேசமங்கைகரசி சொற்பொழிவு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த சென்னை ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவர் தனது நண்பர்களுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக, சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு அங்கு பதுங்கி இருந்த விக்னேஷ், அவரது நண்பர்களான சென்னை செனாய் நகரை சேர்ந்த தேவசகாயம் (36), திருவேற்காடு பால்வீதி தெருவை சேர்ந்த எழிலரசன் (24), திருவண்ணாமலை மாவட்டம் கீழபென்னாத்தூர் பகுதியை சேர்ந்த தினகரன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

    விக்னேஷ் மீது சென்னை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதும், இவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும், தேவசகாயம் மீது சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவரது பெயரும் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரியவந்தது.

    இவர்கள் எதற்காக வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி தற்கொலையில் தாளாளர் உள்பட 3 பேரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:
     
    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் வண்ணான் குளம் மேற்கரையில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் 3வது மகள் சுபாஷினி. சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார்.
    முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக பணம் கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளது.மேலும் பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வெளியே நிற்க வைத்து அவமான படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு பயிலும் சுபாஷினி கடந்த 30&ந்தேதி தாய் தந்தையர் வேலைக்கு வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் இதைத்தொடர்ந்து நாகூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு வழக்குப் பதிவு செய்து நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுசெய்து அங்கு பிணவறையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது நேற்று வரை தொடர்ந்து மூன்றாவது நாளாக சாலை மறியல் மற்றும் காத்திருப்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மாணவி சுபாஷினி உயிரிழப்பு குறித்து நாகூரில் அவர்களது இல்லத்தில் ஏடி.எஸ்.பி, ராமு, சுகுமாரன், டி.எஸ்.பி சரவணன், ரமேஷ் பாபு உள்ளிட்டோர் தாய் தந்தை மற்றும் உறவினர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது உயிரிழந்த மாணவியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கதறி என் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்படக்கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதனர்.

    அவர்களிடம் உயிரிழந்த மாணவியின் தந்தை சுப்பிரமணியத்திடம் வரும் 4ம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.நீதிபதி விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தாளாளர் உள்பட 3 பேரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளதால் மாணவியின் உடல் 4வது நாளாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை பிணவறையில் வைக்கப் பட்டுள்ளது.
    ரமலான் நோன்பு தொடக்கத்தையொட்டி நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

    பிறை தென்பட்டு வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு முஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.
    நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா மட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.
    வேதாரண்யம் சன்னதி கடல் திடீரென உள்வாங்கியது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சன்னதி கடல் திடீரென உள்வாங்கியது. கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி உள்ளது.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது,

    கடல் உள்வாங்குவது இயல்பான ஒன்றுதான். இருந்தாலும் தற்போது அதிக தூரத்துக்கு உள் வாங்கி உள்ளது. இதனால் கடல் அலை சத்தம் ஏதும் இல்லாமல் அமைதியாக ஏரி போல் காட்சியளிக்கிறது.

    மேலும் கடலில் இருந்து கரைக்கு தள்ளப்பட்ட சேர் அலை இல்லாததால் அப்படியே படிந்து காணப்படுகிறது. மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு வந்த உடன் சேறு அலையால் அடித்து செல்லப்பட்டு விடும் என்றனர்.

    நாகை தெத்தி புதுரோட்டில் வீட்டின் வாசலில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்-.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி புதுரோடு அருகாமையில் தொழில் பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு சோப்பு கம்பெனிக்காக அமைக்கப்பட்ட மின்மாற்றி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

    5 ஆண்டுகளுக்கு காலமாக சோப்பு கம்பெனி இயங்காமல் உள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகள் பழமையான மின்மாற்றியின் சிமெண்ட் மின்கம்பங்கள் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

    இப்பகுதி வழியாக தினந்தோறும் ஆயிரக் கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அச்சத்தோடு கடந்து செல்கின்றனர்.

    மேலும் காற்றுடன் மழை பெய்யும் நேரத்தில் விழும் அபாயத்தில் உள்ளதால் வீட்டு வாசலில் உள்ள மின்மாற்றியை பழுது நீக்கம் செய்வதோடு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேளாங்கண்ணி லாட்ஜில் சென்னையை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வேளாங்கண்ணி பகுதிகளில் அதிகாலை ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு தனியார் லாட்ஜில் ஒரே அறையில் 4 வாலிபர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. சங்தேகத்தின் பேரில் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் நாகூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் 4 பேரும் சென்னையை சேர்ந்த எழிலரசன்(வயது29), திவாகரன்(28), விக்னேஷ்(20), தேவசகாயம்(35) என்பதும், இவர்கள் மீது சென்னையை சுற்றியுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் கொலை முயற்சி வழக்கில் 4 பேர் தலைமறைவாகி வேளாங்கண்ணி வந்து தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நாகூர் போலீசார் பிடிபட்ட 4 வாலிபர்கள் குறித்த தகவல்களை சென்னை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்களிடம் நாகூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் எதற்காக இங்கு வந்து 4 பேரும் தங்கினர். அறையில் தங்கி இருந்து ஏதாவது கொலைக்கான சதி திட்டம் தீட்டினரா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    கீழ்வேளூர் அருகே தேவூர் தேவதுர்கை அம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூர் தேவதுர்கையம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. உலக அமைதி, விவசாயம் செழிக்க, தோஷங்கள் நீங்க வேண்டி வேதவிற்பனர்கள் வேத மந்திரங்களை ஓதி யாககுண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள் மற்றும் காய்கள், பழங்கள், கொண்டு ஹோமம் நடைபெற்றது.

    நிறைவாக யாகம் பூர்ணாஹீதியுடன் முடிவடைந்தது. பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார் வலம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.
    வேதாரண்யம் அருகே பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 6 மணி நேரம் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியில் சென்ற ஆண்டு இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 519 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்

    இவர்களில் 449 விவசாயிகள் வங்கியில் கடன் பெற்றவர்களும், 75 பேர் கடன்பெறத விவசாயிகளும் உள்ளனர். இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்த 75 பேருக்கு இன்றுவரை பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் போராட்டம் அறிவித்து இருந்தனர். வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் விவசாயிகளை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். ஆனால் நேற்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உம்பளச்சேரி ரவி, துளாசபுரம் வெங்கடாசலம் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு வங்கியை காலை முதல் முற்றுகையில் ஈடுபட்டனர்.

    தகவலரிந்து வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் சமாதானத்தை ஏற்க மறுத்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு துறையில் இருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வலியுறுத்தினர். சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு பிறகு வேளாண்மைத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் சொன்ன கருத்தை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனால் வங்கியில் இருந்து விவசாயிகள் கூச்சலிட்டனர்.

    போலீசார் விவசாயிகளை சமாதானம் செய்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தனர். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். வங்கியை 6 மணி நேரம் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ×