என் மலர்
நாகப்பட்டினம்
குத்தாலம் பள்ளியில் தேசிய பசுமைப் படையில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே உள்ள குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படையில் 2021-22 கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலுப்பை மரக்கன்றுகள் நூறு வளர்த்தமைக்காக ஜெய் ஆகாஷ், ஜீவன் ஆகிய மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காரணத்திற்காக ஜித்தா, தர்ஷினி ஆகியோருக்கும் தூய்மை பராமரித்த லுக்காக பிரியதர்ஷினி என்ற மாணவிக்கும் பசுமை வீரர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மாணவர்களுக்கு விருது வழங்கினார். முன்னதாக கணித ஆசிரியர் சிவ சண்முகநாதன் வரவேற்றார்.
தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.
திட்டச்சேரியில் உள்ள மின்வாரியத்துறை அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்த மான இடத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் மின்வாரி யத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. திட்டச்சேரியில் வீடுகள், கடைகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருமுனை, மும்முனை மின் இணைப்புகள் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் மின் வருவாய் ஈட்டக்கூடிய வருவாய் கிராமமாக திட்டச்சேரி உள்ளது.
இந்த நிலையில் பகல், இரவு என 24 மணி நேரமும் மின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மின் ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அறையாகவும், மின் உபகரணங்களை வைக்கும் அறையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதம் அடைந்து உள்ளது. இந்த சேதம் அடைந்த கட்டிடத்திலேயே தற்போது வரை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து உண்டாக்கும் நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழை நீர் கசிவதால் கணினி மற்றும் உபகரணங்கள் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்து வதற்கு தனியார் கணினி மையங்களை நோக்கி செல்வதாகவும் அங்கு ரூ.10 முதல் 50 வரை பில் செலுத்த கமிஷனாக பெறப்படுகிறது எனவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் தேன் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5000 ஏக்கரில் மா சாகுபடி உள்ளது. ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5,000 டன் மாங்காய் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 2018 ம் ஆண்டு வீசிய கஜா புயலால் இந்த பகுதியில் உள்ள மாந்தோப்புகள் முற்றிலும் சேதமடைந்து.
இந்த நிலையில் சேதமடைந்த மாமரங்களை விவசாயிகள் பராமரித்து தற்போது துளிர்விட்டு மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் பூத்து குலுங்குகிறது. தற்போது மாமரம் பூத்து பிஞ்சு விட ஆரம்பித்திருப்பதால் காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது மா பூக்கள் கருக துவங்கியுள்ளது.
தேன்பூச்சி தாக்குதலாலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு பூக்கள் கருகி வருகிறது. பூத்த மரங்களும் அதிகளவில் காய்க்கவில்லை இந்த ஆண்டு மா விளைச்சல் நன்றாக என நினைத்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் போதிய விளைச்சல் இல்லதா நிலையில் சரியான விலையும் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே வேளாண்மை துறையினர் மா பூக்களாலில் ஏற்படும் கருகல் நோயை கட்டுபடுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என மா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடைக்கால நிவாரணத்வேதை உயர்த்தி வழங்க மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேதாரண்யம்:
ஒவ்வொரு ஆண்டும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைகாலமாக அரசு அறிவித்து உள்ளது இந்த 60 நாட்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் விசைபடகுகள், பைபர் படகுகளை சீரமைப்பது, என்ஜூன் சர்வீஸ் செய்வது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கான செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகமாக உயர்ந்து வருகிறது. அனைத்து பொருட்களும் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. ஆனால் அரசு அறிவித்த தடைகால நிவராணம் தொகை ரூ.5 ஆயிரம் இதுவரை மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.
தடை காலத்தின்போதே நிவராண தொகை கிடைத்தால் மீனவர்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் புதுச்சேரி அரசு தடை காலத்தில் ஆண்டுதோறு ம் விசை படகுகள் சீரமைப்பு பணிக்கு ரூ.20 ஆயிரம், பைபர் படகுக்கு ரூ.3 ஆயிரம், ரேசன் கார்டுக்கு ரூ. 2500 வழங்கி வருகிறது.
இதேபோல் தமிழக அரசு தமிழக மீனவர்களுக்கு தடை கால நிவராணம் வழங்க வேண்டும். தற்போது தடை கால நிவராணமாக தமிழக அரசு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேதாரண்யம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கத்தரிப்புலம், செட்டிபுலம், ஆயக்காரன்புலம், தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகளையும், நாகக்குடையான், கத்தரிப்புலம் ஊராட்சியில் 'நடைபெற்று வரும் வீடு கட்டும் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்னம்புலம், கருப்பன்காடு பகுதி வரை பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.596.43 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும் தகட்டூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், கத்தரிப்புலம், தகட்டூர் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினையும்ெசட்டிப்புலம், ஆயக்காரன்புலம்-4 ஊராட்சிகளில் தலா ரூ.1.76 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் புனரமைக்கும் பணியினையும்,
ஆயக்காரன்புலம்-4ம் சேத்தியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அப்பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, கொய்யாசெடி நடவுவயல், தென்னை முந்திரி ஒட்டுக்கன்றுகள், முருங்கை கன்றுகள் போன்றவைகள் உற்பத்தி செய்வதை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் ஜான்பிரிட்டோ, இளநிலை பொறியாளர் அருண்ராஜ், ஒன்றிய பொறியாளர்கள் வேல்கண்ணன், ஜான்பிரிட்டோ, அருள்ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் .வீரமணி, ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேதாரண்யம் தொடக்கப்பள்ளியில் கேக் வெட்டி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவை ஆசிரியர்கள் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வடமழை ரஸ்தா தொடக்கப்பள்ளி 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பள்ளிகளில் வழக்கமாக ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றால் மற்றும் பணி ஓய்வு பெற்றால் பாராட்டு விழா நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இணைந்து பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பள்ளியை விட்டு பிரிந்து செல்லும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் விருந்தும் வைத்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் கருணாநிதி, அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பரிசுகளும் ஆசிரியர்கள் வழங்கி மகிழ்ந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து புகைப்படமும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். ஐந்து ஆண்டுகளில் பள்ளியில் ஆசிரியர்களுடன் ஒன்றாக இருந்து பழகிய மாணவ- மாணவியர்கள் கண்ணீர் மல்க விடை பெற்றனர்.
பள்ளி தொடங்கிய 64 ஆண்டுகளில் இப்பள்ளியில் இது போன்ற ஒரு விழா நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி டெல்டாவில் கூடுதல் நிதி ஒதுக்கி தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை ஏற்றார்.அமைப்பு செயலாளர் நாகை ஸ்ரீதர் மதுரை மண்டல கவுரவத் தலைவர் திருபுவன ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பி.ஆர். பாண்டியன் தெரிவித்ததாவது: நாகை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் வரும் ஜனவரி ஜூன் 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ள அக்ரி எக்ஸ்போ 2022-ல் பங்குகொள்ள உள்ளார்கள். தற்போது காவிரி டெல்டாவில் ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறைவாக தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இருக்கு மேயானால் தேவைக்கேற்ப நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண் பொறியியல் துறை சி.டி வகுப்பு வாய்க்கால் தூர் வாருவதற்கு தமிழக வேளாண் துறை அனுமதி அளித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பி வகுப்பு பாசன வாய்க்காலை தூர்வாரினால் தான் பயனடைய முடியும். எனவே விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பி சி டி வாய்க்கால்களை இணைத்து தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது என முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு.சரவணத்தேவர் வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, அந்த நாட்டின் பூர்வகுடி மக்களான ஈழத்தமிழர்களின் மீது குண்டுகள் வீசியும், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், தமிழ் மக்களை படுகொலை செய்த ராஜபக்சே, இப்போது இலங்கையில் பெரும் கலவரம் வெடித்து உயிருக்கு பயந்து குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிக்கும் சூழலுக்கு ஆளாகி உள்ளார்.
அவருக்கு இந்திய அரசு எந்த வித உதவியும் செய்யக்கூடாது. இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, மறைமுகமாக உதவி செய்யவோ கூடாது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்கி உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாகை அருகே கீழ்வேளூர் அரசு பள்ளி மாணவர்கள் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாட நூல்களில் உள்ள ஏட்டுக் கல்வியை மட்டும் கற்பிப்பதோடு நிறுத்திவிடாமல், மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கான ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாணவர்களின் தனித் திறமையை கண்டறிந்து கொடுக்கப்பட்ட தொடர் பயிற்சியின் காரணமாக சாதனையாளர்களாக 10 மாணவர்கள் தற்போது உருவாகி உள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
இப்பள்ளியை சேர்ந்த பிரதீபா, அபிநயஸ்ரீ, ஜாஸ்னி, லோகேஷ், நக்ஷத்திரா, வனிதா, அன்னபூரணி, சரண்யா, கனிஷ்கா, நிஷாலினி ஆகியோர் 2.20 நிமிடங்களில் 360 மாவட்டங்களை சரளமாக கூறுதல், வாய்ப்பாடுகளை தலைகீழாக எழுதுதல், 1330 பொட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை வரைவது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மிகக் குறுகிய நேரத்தில் நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.
இம்மாணவர்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இளம் வயதிலேயே 10 அரசு பள்ளி மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாகி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாகை சட்டையப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை சட்டையப்பர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 4 ம் தேதி தொடங்கியது. நேற்றைய தினம் ரிஷப வாகனத்தில் சட்டையப்பர் வீதியுலா நடந்து முடிந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். நான்கு மாட வீதிகள் வழியாக வந்த தேரினை ஆரூரா தியாகேசா என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்து வந்தனர்.
நாகூர் தேசிய பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் நலனுக்காக நடைபயண பிரார்த்தனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய துவக்கப்பள்ளி ஆசிரியைகள் நாகூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மாணவர்கள் நலனுக்காக நடைபயணம் மேற்கொண்டனர்.
பள்ளி இறுதி நாள் முடிந்த மறுநாளே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற நடை பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பி சிறப்பாக தேர்வு எழுதினால் பள்ளி ஆசிரியைகள் 8 பேர் வேளாங்கண்ணிக்கு நடந்து வருவதாக வேண்டி இருந்தனர்.
மாணவர்கள் நோய் பாதிப்பு இல்லாமல் மீண்டும் சிறப்பாக தேர்வு எழுதியதால் நடைபயணம் மேற்கொண்டனர்.
நாகையில் சிபிசிஎல் நிறுவன நில எடுப்பு திட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பால்பண்ணைச்சேரி பகுதியில் இருந்து நாகை மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய நில எடுப்பு சட்டம் 30/2013 படி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடியே 50 லட்சம் தொகையுடன் கூடுதலாக 30 சதவீதம் உயர்த்தி நிர்ணயித்து உத்தரவிட்ட பின்பு நிலம் எடுப்பு பணிகள் தொடங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் சகிலாவிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
சிபிசிஎல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்து தனியாரிடம் தாரை வார்க்க போவதாக மத்திய அரசின் மீது விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.






