என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்தார்.
    சீர்காழி:

    மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 39). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கல்யாணசோழபுரம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

    நமச்சிவாயபுரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அவர் சறுக்கி சாலையில் விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    மழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கருவி, வேட்டங்குடி, ஆச்சாள்புரம், எடமணல், திருக்கருகாவூர், பழையபாளையம், செம்மங்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள், மண்சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக 
    நடைபெற்று வருகிறது.

    இப்பகுதியில் தயார் செய்யப்படும் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு ஆகியவை விற்பனைக்காக வியாபாரிகள் மூலம் பல்வேறு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில் மண் பானை, அடுப்பு, 
    சட்டிகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் 
    தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இதற்காக களிமண்ணை பதப்படுத்தி பானைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்பாண்டத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பானை தயாரிக்கும் பக்குவ நிலைக்கு 
    களிமண்ணை தயார் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் 
    பொங்கல் பண்டிகைக்கு பானைகள் தயார் செய்யும் பணி 
    தடைபட்டுள்ளது.

    வேட்டங்குடி கிராமத்தில் பானை தயாரிக்கும் தொழிலில் 
    பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மாவட்ட மண்பாண்ட தயாரிப்பு சங்கத் தலைவர் மாரிமுத்து தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள 
    கோரிக்கையில், மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது.தொடர் மழையினால் இத்தொழில் செய்வோர் 
    கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

    மழைக்காரணமாக பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளை 
    சுட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாத மழையினால் 
    மண்பாண்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தமிழக முதல்வர் மண்பாண்ட தொழிலாளர்கள் நிலை அறிந்து மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    விடுபட்ட மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் மண்பாண்ட தொழில் நலிந்து வருவதை தடுத்து மாவட்டந்தோறும் மண்பாண்ட தொழிலை இளைஞர் கற்று கொள்ள பயிற்சி கூடங்கள் அமைத்து பாரம்பரியம் மிக்க மண்பாண்ட தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மாரிமுத்துக்கு உதவியாக ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் அவரது மகனும் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    கொள்ளிடம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைத்தது
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான சந்தைப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, நாணல்படுகை, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர் வரையிலான 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக இந்த கரையோர கிராமங்களில் உள்ள சம்பா சாகுபடியானது பாதிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பயிர்களை உரங்களையும், மருந்துகளையும் இட்டு விவசாயிகள் காப்பாற்றி பாதுகாத்து வந்தனர். 

    இன்னும் 10 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தற்போதைய மூன்று நாள் கன மழையில் சாய்ந்து, மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக தண்ணீர் வடியாததால் தொடர்ந்து மழை நீரில் மூழ்கி இருந்த முற்றிய நெற்கதிர்கள் தற்போது முளைக்கத் தொடங்கியது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சந்தைபடுகை முதல் காட்டூர் வரையிலான கொள்ளிடம் கரையோர கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழைநீரில் மூழ்கி தற்போது முளைக்க தொடங்கி இருப்பது அப்பகுதி விவசாயிகளிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இனி அந்த பயிர்களை அறுவடை செய்தாலும் அந்த கூலிக்கு கூட தேறாது என வேதனை தெரிவித்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடும் முழு காப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாலையில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது
    சீர்காழி: 

    சீர்காழி-சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விளந்திட சமுத்திரம் பகுதியிலிருந்து சுமார் 1 கி.மீ தூரம் உள்ள நெடுஞ்சாலை 2020-21 ஒருங்கிணைந்த சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இருவழித் தடத்திலிருந்து பலவழித்தடமாக சில மாதங்களுக்கு முன்னர் மாற்றி அமைக்கப்பட்டது.

    இந்த பணிக்காக சாலையோரம் இடையூறாக உள்ள மரங்கள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ளது. 

    இதில் ஒரு பகுதியாக சேந்தங்குடி நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள பெரிய குளத்தின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் ஒரு பகுதியில் மண் அணைத்து குளத்திற்கு கான்கிரீட் கட்டை அமைக்கப்பட்டது.

    இதனிடையே போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே குளத்தின் பக்கவாட்டு பகுதி நெடுஞ்சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகியுள்ளது. 

    இதனால் அவ்வழியாக வந்து செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சாலை சரிந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்படக்கூடிய ஆபத்தான சூழல் நிலவுகிறது. 

    ஆகையால் நெடுஞ்சாலைத்துறையினர் குளத்திற்கு பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் அமைத்தும், மண் அரிப்பை தடுக்கும் வகையில் தரமான சிமெண்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறையில் கோரைபுல் அழுகியதால் பாய் உற்பத்தி முடக்கம்
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த தைக்கால் கிராமத்தில் பாரம்பரிய கோரை பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    3 தலைமுறைகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட உற்பத்திக் கூடங்களில் கோரைப்புல் கொண்டு படுக்கை பாய், பந்திப்பாய், திருமண வரவேற்பு பாய், குழந்தை பாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாய்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

    தைக்காலில் தயாரிக்கப் படும் பாரம்பரியமிக்க பாய்கள் தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
     
    இந்த பாய் உற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், கொள்ளிடம், பெரம்பலூர், குன்னம், புத்தூர் எருக்கூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் கோரைப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    6 மாத கால பயிரான கோரைப்புல் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கோரைப்புல், பாய் தயாரிப்பதற்கு தேவையான அளவுகளில் கிழிக்கப்பட்டு வயல்வெளிகளில் காய வைக்கப்பட்டு இருந்தது. 

    தற்போது பெய்த 3 நாள் கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களிலும் அறுவடை செய்து பதப்படுத்தப்பட்டிருந்த கோரைப்புற்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

    தண்ணீர் வடிவதற்கு வழியில்லாமல் தொடர்ந்து 3 நாட்களாக மழைநீர் தேங்கியதால் பதப்படுத்தப்பட்ட கோரைப்புற்கள் அழுகி வருகிறது. 

    இதனால் கோரைப்புல் சாகுபடி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மழைநீரை உடனடியாக வெளியேற்ற வடிகால்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி மற்றும் கொள்ளிடத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அகனி, நிம்மேலி, வள்ளுவக்குடி, மருதங்குடி, புங்கனூர், கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புங்கூர், கன்னியாகுடி, கதிராமங்கலம், கற்கோவில், காரைமேடு, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, விளந்திட சமுத்திரம், அத்தியூர், கடவாசல், வடகால், எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

    இதேபோல் பல்வேறு இடங்களில் கதிர் வரும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிர்கள் அடியோடு மழைநீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.

    இதேபோல் சீர்காழி தாலுகாவில் திடல் பகுதியில் பயிரிடப்பட்ட நிலக்கடலை, உளுந்து, பயறு உள்ளிட்ட எண்ணெய்வித்து பயிர்கள் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், புற்றடி மாரியம்மன் கோவில் சாலை, தென்பாதி மெயின்ரோடு, திருவள்ளுவர் நகர் செல்லும் சாலை, மதினா நகர் உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    சீர்காழி நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், தண்டேசநல்லூர், காமராஜர்நகர், ஆலாலசுந்தரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவு செய்த நெற்பயிர் இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதனால் ஆச்சாள்புரம் பகுதியில் மட்டும் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதேபோல் குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் கொள்ளிடம் பகுதியில் மொத்தத்தில் 1,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன.

    இதுகுறித்து ஆச்சாள்புரம் விவசாயிகள் கூறுகையில், சம்பா நெற்பயிர்கள் 15 நாட்களில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்தது. இந்தநிலையில் எதிர்பாராத வகையில் கனமழை பெய்ததால் ஆச்சாள்புரத்தில் மட்டும் 1,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன. கொள்ளிடம் ஒன்றியத்தில் மொத்தத்தில் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து வீணாகி விட்டது. எனவே அரசு அதிகாரிகள் நேரில்வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொைக மற்றும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் கடற்கரையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விட்டு, விட்டு மழை பெய்தது.

    நேற்று அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தொடர்மழை பெய்தது. நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சீர்காழி-44, மயிலாடுதுறை-37, மணல்மேடு-31, தரங்கம்பாடி-11.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உள்ள திருக்கடையூர், சீவகசிந்தாமணி, வளையல் சோழகன், கிள்ளியூர், கண்ணங்குடி, காலாகட்டளை, வெள்ளைதிடல், பிள்ளை பெருமாநல்லூர், டி. மணல்மேடு, கிடங்கல், ஆக்கூர், மடப்புரம், மாமாகுடி, மருதம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக திடீரென பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் மழை பெய்து வருததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதுகுறித்து திருக்கடையூர் விவசாயி ராமமூர்த்தி கூறுகையில், மேற்கண்ட பகுதியில் சமீபத்தில் பெய்த மழையினால் சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டன. எனவே அரசு 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
    கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மயிலாடுதுறை மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக கடந்த 1950-ம் ஆண்டு 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலத்தை கடந்துதான் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனைத்து வாகனங்களும் செல்கின்றன.

    அதேபோல நாகை, மயிலாடுதுறை பகுதி மக்கள் இந்த பாலத்தை கடந்தே கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். 24 மணி நேரமும் போக்குவரத்து கொண்ட இந்த பாலத்தில் நாள் ஒன்றுக்கு இருசக்கர வாகனம் முதல் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.

    இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் இந்த பாலத்தின் நடுவே உள்ள இணைப்பு பகுதியில் கான்கிரீட் தளம் உடைந்து பாலத்தின் நடுவே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் செல்லும் போது தடுமாறுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகுவது தொடர்கிறது. ஏதேனும் உயிரிழப்பு ஏற்படும் முன்பு நவீன தொழி நுட்ப வசதியை பயன்படுத்தி இணைப்பு கம்பிகளை புதுப்பித்து பாலத்தின் விரிசலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பாலத்தின் ஒவ்வொரு இணைப்பு பகுதியையும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே கட்டாய தடுப்பூசி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தடையை மீறி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இயற்கைவழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு, தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளர் இயக்குனர் கவுதமன், சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம், மக்கள் அறிவியல் இயக்கம் மருத்துவர் பிரேமா கோபாலகிருஷ்ணன், திருநங்கை ரோஸ், பூவுலகில் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த புகழேந்தி, இயற்கை வழி வாழ்வியலார் கூட்டமைப்பு மாநில தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்று கொரோனா ஊசி திணிப்புக்கு எதிராக பேசினர்.

    அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால் இதில் கலந்து கொண்ட இயக்குனர் கவுதமன், சுதாகர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவர்கள் மீது சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து சீர்காழியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் மண் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையிடும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் மண்சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் அசோகன், அஞ்சம்மாள், மரகதம், தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகணி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் 15-வது நிதி மானியக்குழு அந்தந்த ஊராட்சிகளுக்கு 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் 15-வது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை இன்றைய மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற செயலர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் புதிய செயலர்கள் பணிநியமனம் பணியிட மாறுதல் செய்யக்கூடாது.

    கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய போதிய சரியான நிதியை சில ஊராட்சிகளுக்கு திட்டமிட்டு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இந்த போக்கை நீக்க வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா மருத்துவ தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பு முகாம் மற்ற செலவுகள் அனைத்தையும் கிராம ஊராட்சி கணக்கு எண் ஒன்றில் இருந்து செய்து வருகிறோம்

    அரசு இதுவரை எந்த நிதியையும் எந்த ஊராட்சிக்கும் வழங்கவில்லை. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையிடும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயன், லதா, வசந்தி, சோமசுந்தரம், சரளா, அலெக்சாண்டர், தட்சிணாமூர்த்தி மாலினி உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரிடம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் வழங்கினர்.
    செம்பனார்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொறையாறு:

    திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 38), விவசாயியான இவர் நேற்று முன்தினம் செம்பனார்கோவில் அருகே பொன்செய் கிராமத்தில் இருந்து தனது வீட்டிற்கு வலத்தான்பட்டினம் மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென அன்புச்செல்வன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்புச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி சென்றது யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும் நாளை முதல் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சீர்காழி:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெப்பதூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம்அகோரமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள், மதியழகன், தாமரைச்செல்வி திருமாறன், தனலட்சுமி அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்மங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலினி முருகன், தட்சிணாமூர்த்தி, விஜயன் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து பேசினர்.

    கூட்டத்தில் மத்திய அரசின் 15-வது நிதி மானிய குழு அந்தந்த ஊராட்சிகளுக்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் 15-வது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஊராட்சி செயலர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.

    ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் புதிய ஊராட்சி மன்ற செயலர்கள் பணிநியமனம், பணியிட மாறுதல் செய்ய கூடாது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களை பணி நிரந்தரமாக்கி அவர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும், அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும் நாளை (29-ம் தேதி) முதல் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் விஜயன், லதா செந்தில் முருகன், துரைராஜ், சோமசுந்தரம், சரளா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருக்கடையூரில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருக்கடையூர்:

    விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்தில் இருந்து பொறையாறு வரை உள்ள நிலம் வீடு கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் மாவட்ட தலைவர் சிம்சன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 6-வது நாளான நேற்று பாடையில் ஒருவரை படுக்கவைத்து ஒப்பாரி வைத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோஷமிட்டனர். மார்கழி மாத பனியையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தொடர்ந்து விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×