search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ள நெற்பயிர்கள்.
    X
    மழைநீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ள நெற்பயிர்கள்.

    கொள்ளிடத்தில் மழையில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைத்து சேதம்

    கொள்ளிடம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைத்தது
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான சந்தைப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, நாணல்படுகை, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர் வரையிலான 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக இந்த கரையோர கிராமங்களில் உள்ள சம்பா சாகுபடியானது பாதிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பயிர்களை உரங்களையும், மருந்துகளையும் இட்டு விவசாயிகள் காப்பாற்றி பாதுகாத்து வந்தனர். 

    இன்னும் 10 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தற்போதைய மூன்று நாள் கன மழையில் சாய்ந்து, மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக தண்ணீர் வடியாததால் தொடர்ந்து மழை நீரில் மூழ்கி இருந்த முற்றிய நெற்கதிர்கள் தற்போது முளைக்கத் தொடங்கியது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சந்தைபடுகை முதல் காட்டூர் வரையிலான கொள்ளிடம் கரையோர கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழைநீரில் மூழ்கி தற்போது முளைக்க தொடங்கி இருப்பது அப்பகுதி விவசாயிகளிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இனி அந்த பயிர்களை அறுவடை செய்தாலும் அந்த கூலிக்கு கூட தேறாது என வேதனை தெரிவித்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடும் முழு காப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×