என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் பாலம்
கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் விரிசல்- சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மயிலாடுதுறை மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக கடந்த 1950-ம் ஆண்டு 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலத்தை கடந்துதான் நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனைத்து வாகனங்களும் செல்கின்றன.
அதேபோல நாகை, மயிலாடுதுறை பகுதி மக்கள் இந்த பாலத்தை கடந்தே கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். 24 மணி நேரமும் போக்குவரத்து கொண்ட இந்த பாலத்தில் நாள் ஒன்றுக்கு இருசக்கர வாகனம் முதல் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.
இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் இந்த பாலத்தின் நடுவே உள்ள இணைப்பு பகுதியில் கான்கிரீட் தளம் உடைந்து பாலத்தின் நடுவே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் செல்லும் போது தடுமாறுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகுவது தொடர்கிறது. ஏதேனும் உயிரிழப்பு ஏற்படும் முன்பு நவீன தொழி நுட்ப வசதியை பயன்படுத்தி இணைப்பு கம்பிகளை புதுப்பித்து பாலத்தின் விரிசலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பாலத்தின் ஒவ்வொரு இணைப்பு பகுதியையும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






