என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் எதிரே சாலையோரம் வசிப்பவர்களுக்கு பொங்கல் பொருட்களை போலீசார் வழங்கினர்.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் எதிரே சாலையோரம் வீடுகளின்றி 20&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு ரேஷன் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடையாது என்பதால் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கவில்லை. 

    இந்நிலையில் அந்த குடும்பங்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம், கரும்பு ஆகிய பொருட்களை இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் தங்கள் சொந்த செலவில் வழங்கினர்.

    கடந்த தீபாவளி அன்று இனிப்பு மற்றும் பட்டாசுகளை இவர்களுக்கு இதுபோல் போலீசார் வழங்கியது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.
    பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த திருப்பார்த்தன்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். அர்ஜுனன் விரதமிருந்து 
    இந்தப் பெருமாளை வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. 

    இந்த கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனையொட்டி பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சாத்துமுறை நடந்தது. 

    மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடத்தி வைக்கப்பட்டது. 

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

    செம்பனார்கோவிலில் நெகிழி கழிவு மேலாண்மை திட்ட ஒப்படைப்பு விழா நடந்தது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் ஊராட்சியில் திடக்கழிவு கழிவு மேலாண்மை அலகு உள்ளது. 

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தூக்கி வீசப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.

    செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் கவிதாபிரியா, ஊரக வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர் முருகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்ரீதர் வவேற்றார். 

    ஊரக வளர்ச்சித்துறை, தூய்மை பாரத இயக்கம் சார்பாக திடக்கழிவு கழிவு மேலாண்மை அலகு கடந்த 2020-ம்ஆண்டு துவங்கப்பட்டது.

    இந்த நெகிழி கழிவு மேலாண்மை அலகில் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் இருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கபட்டு பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு தார்சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    1 மாதத்தில் 1 டன் பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த நெகிழி கழிவு மேலாண்மை அலகு மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ ஒப்படைத்தார். 

    தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக 1 கிலோ நெகிழியை தரம் பிரித்து கொடுப்பவர்களுக்கு 10 ருபாய் வழங்கும் 
    திட்டத்தை துவக்கி வைத்தார்.

    நெகிழிப்பை, எண்ணெய் கவர், பால்கவர், பிஸ்கட்கவர் மசாலா கவர் ஆகிய 
    3 கிலோ நெகிழிகளை ஒப்படைத்த பெண்ணிற்கு ரூ.30 வழங்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தி 
    நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை கண்காணிப்பாளர் தியாகராஜன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவாலர் விஜயலெட்சுமி, உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம்.

    தி.மு.க மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், இளைஞர் அணி அமைப்பாளர் பாரதி, மற்றும் அரசு அதிகாரிகள், சுயஉதவிக் குழுவினர் என ஏராளமானவர்கள் கலந்து கொன்டனர். முடிவில் வட்டார இயக்க 
    மேலாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    சீர்காழி தாடாளன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திரிவிக்கிரம நாராயணப் பெருமாள் என்னும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

    இக்கோவிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாறு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். உற்சவர் தாடாளன்பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார்.

    108 திவ்ய தேசங்களில் 26-வது திவ்ய தேசமான இக்கோயிலில் மூலவர் திரு விக்ரம நாராயண பெருமாள் எனும் உலகளந்த பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுதோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே பொதுமக்கள் தரிசனம் செய்ய முடியும்.

    பெருமாளின் வலது பாதத்தின் அருகே ஓர் அடி உயரத்தில் தவிட்டு தாடாளன் எனும் விக்கிரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

    மூலவர் வலது பாதம் மற்றும் தவிட்டு தாடாளன் பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிறவிப்பிணி நீங்கும் என்பது ஐதீகம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. 

    முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் தாடாளன் பெருமாளுக்கு 
    சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு, சாத்துமுறை நடந்தது.

    பின்னர் மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெருமாள் சொர்க்க வாசல் அருகே எழுந்தருளினார் அங்கு சொர்க்க வாசலுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யப்பட்டு 
    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. 

    சொர்க்க வாசலின் வழியாக எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் பெருமாள் கோவிலை வலம் வந்து வசந்தமண்டபம் எழுந்து அருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் உலகளந்த பெருமாளின் வலது பாத தரிசனம் கண்டு பிரார்த்தனை செய்தனர். 

    பூஜைகளை பட்டாச்சாரியார்கள் பத்ரிநாத், பிரபு செய்திருந்தனர்.
    ஏற்பாடுகளை கோயில் ஆதீனம் கேகேசி சீனுவாச சுவாமி செய்திருந்தார். 

    பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி லாமெக் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
    குத்தாலம் அருகே மியாவாக்கி முறையில் பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கப்பட்டது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரிவளூர் கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் மூலம் 12,000 சதுரடியில் 35 வகையான 1200 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் பறவைகளுக்காக குறுங்காடு அமைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கலந்துகொண்டு மரகன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை துவக்கி வைத்து மரம் வளர்ப்பின் அவசியம் குறித்தும். பறவைகளுக்கான குறுங்காடுகளின் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

    இதில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், சுமதி, ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர் ஜெகன்மோகன், ஐசிஐசிஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால், ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    இக்குறுங்காட்டினை வனம் கலைமணி தலைமையிலான தன்னார்வ குழுவினர் வடிவமைத்தனர்.
    மயிலாடுதுறை அருகே கூறைநாடு தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை, கூறைநாடு தனியார் பள்ளியில் செயல் ஆராய்ச்சி பரவலாக்கும் பணிமனை பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. 

    பயிற்சிக்கு மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்லூரி முதல்வர் காமராசன் தலைமை தாங்கினார். 

    துணை முதல்வர் பழனிச்சாமி, பேராசிரியர் ராணி முன்னிலை வகித்தனர். ஆதீஸ்வரன் வரவேற்றார்.

    இதில் 21, 22-ம் ஆண்டுக்கான செயல் ஆராய்ச்சியை பரவலாக்கும் பணிமனை பயிற்சிக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தால ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    செயல் ஆய்வுகளை சமர்ப்பித்த பட்டதாரி ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் தங்களது ஆராய்ச்சியை கட்டுரையாக சமர்ப்பித்தனர். 

    இந்த ஆய்வின் பயனை மாணவர்களிடம் சேர்க்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

    தமிழரசி உள்ளிட்ட ஆசிரியைகள் கலந்துக் கொண்டனர். முடிவில் ஆய்வு பட்டதாரி ஆசிரியர் மனோகர் நன்றி கூறினார்.
    ஒருநாள் விடுப்பு போராட்டத்தால் சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடியது.
    சீர்காழி:

    கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை நடந்த ஒருநாள் 
    விடுப்பு போராட்டத்தினால் சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிசோடி காணப்பட்டத்துடன், அன்றாட மக்கள் 
    பணிகள் பாதிப்படைந்தன.

    தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாநில 
    தலைவர் சுப்பிரமணியத்தின் பணி நீக்கத்தை ரத்து செய்து 
    ஆணை வழங்கவும், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 
    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில்தமிழகம் 
    முழுவதும் 1நாள் விடுப்பு போராட்டம் நடந்தது.

    அதன்படி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இப்போராட்டத்தில் பங்கேற்று ஒன்றிய ஆணையர், வட்டாரவளர்ச்சி அலுவலர், 9 துணை 
    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 5 ஓவர்சியர்கள், செயலர்கள்17, 
    கணினி பணியாளர் 4, உதவியாளர்கள் 10 பேர் உள்ளிட்ட மொத்தம் 
    47 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று விடுப்பு எடுத்தனர்.

    இதனால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் 
    யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் 
    ஊராட்சிகளில் நடைபெறும் அன்றாட மக்கள் நல பணிகள் 
    பெரிதும் பாதிக்கப்பட்டன. 

    இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் 
    ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொள்ளிடம் ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார 
    வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 
    பணி மேற்பார்வையாளர்கள் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் 42 ஊராட்சிகளை சேர்ந்த 
    ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட 83 பேர் பணிக்கு வராமல் 
    ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற 
    வேண்டிய அனைத்து பணிகளும் நடைபெறவில்லை. மகாத்மா 
    காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைக்கு 
    செல்லும் பணியாளர்களும் வேலைக்கு செல்லவில்லை.
    வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று 
    காரணமாக தமிழக அரசு சார்பில் ஊரடங்கு உள்ளிட்ட 
    பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 
    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா 
    தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வகைப்படுத்தும் 
    மையம் அமைக்கப்பட்டு வருகிறது. 

    அதன்படி சீர்காழி வட்டத்தில் கோபாலசமுத்திரம் கிராமத்தில் சமுதாயக்கூடம் ,சீர்காழி நகரில் உள்ள டி.எஸ்.எம்.துவக்கப்பள்ளி, வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை 
    செய்து வகைப்படுத்தி சரியான சிகிச்சை மையத்திற்கு 
    தொற்றாளர்களை அனுப்பி வைக்கும் பொருட்டு இந்த 
    மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
     
    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வைத்தீஸ்வரன்கோவில் 
    அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு அடிப்படை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் 
    தேவை மற்றும் படுக்கை வசதிகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
     
    இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் 
    பிரதாப்குமார், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன்,
    வட்டாட்சியர் சண்முகம்,வைதீஸ்வரன் கோவில் தலைமை 
    மருத்துவர் காசி விஸ்வநாதன், வைத்தீஸ்வரன் கோவில் 
    கொரோனா வார்டு சிறப்பு மருத்துவர் ராஜ்பாபு, திருவெண்காடு 
    வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் உள்ளிட்ட 
    அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    சீர்காழியில் விவசாய மின் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழி தென்பாதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான மின் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவது தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. 

    முகாமிற்கு செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1.4.2003 முதல் 31.3.13 வரை மின் இணைப்பு வேண்டி பதிவு செய்துள்ள விவசாயிகளின் பட்டா, சிட்டா, வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து தகுதி உள்ள 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான ஆணையை விசுவநாதன் வழங்கி பேசுகையில், நாளை மயிலாடுதுறை தாலுக்காவிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
     
    இதில் அந்தந்த பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றார். முகாமில் பொறியாளர்கள் ரமேஷ்குமார், ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சீர்காழி அருகே சாராயம் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சீர்காழி:

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன்,
    சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணி சென்றனர். 

    அப்போது சீர்காழி அருகே மன்னங்கோவில் பகுதியைச் சேர்ந்த அய்யர் என்கிற செல்வம் (வயது 23) என்பவர் புதுவை மாநில சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின்படி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையில் அவர் தனது மைத்துனர் அகணிபகுதியில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டில் 120 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தை பதுக்கி விற்பனைக்காக  வைத்திருந்தது தெரியவந்தது. 

    இதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.

    சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் கூடாரவல்லி விழா நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்கிரம நாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த கோவில் மூலவர் உலகளந்த பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இக்கோவிலில் கூடாரவல்லி விழா நடைபெற்றது. 

    பெருமாள் சன்னதியில் லோகநாயகி தாயார், பெருமாள், ஆண்டாள் ஆகிய சுவாமிகள் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

    முன்னதாக தாயார், பெருமாள், ஆண்டாள் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், செய்விக்கப்பட்டு, சாத்துமுறை மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. 

    சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை பட்டாச்சாரியார்கள் பத்திநாதன், பிரபு செய்திருந்தனர். ஏற்பாடுகளை பரம்பரை ஆதீனம் கேகேசி சீனுவாஸ் சுவாமிகள் செய்திருந்தார்.
    சீர்காழியில் தேவாலயம் அடிக்கல் நாட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் அமைந்துள்ள பணமங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    அக்கிராமத்தில் திருச்சபை ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

    கிறிஸ்தவர்களே இல்லாத கிராமத்தில் தேவாலயம் அமைக்கப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து முன்னறிவிப்பின்றி தேவாலயம் அமைக்கும் பணியை தொடங்குவதாக கூறியும், பணியை உடனே நிறுத்த வலியுறுத்தியும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி பணமங்கலம் கிராம மக்கள், இந்து முன்னணி மற்றும் பா.ஜனதாவினர், ஊர்வலமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். 

    அங்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
     
    துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் கிராமமக்கள், இந்து அமைப்பினரிடம், தனியார் இடத்தில் நடைபெறும் தேவாலய பணியை தடுக்கவோ, போராட்டம் நடத்தவோ, அனுமதி இல்லை என்றும் சட்ட ரீதியாக தீர்வு காணவும் அறிவுறுத்தினார். 

    அதனை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×