என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    தருமை ஆதீன கோவில்களில் கும்பாபிஷேக விழாவையொட்டி சூரியனார்கோவில், வேளாக்குறிச்சி ஆதீனங்களுக்கு பத்திரிக்கை வழங்கப்பட்டது.
    சீர்காழி:

    திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி 
    தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்படி 
    தருமையாதீன தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்ததம்பிரான் சுவாமிகள், சூரியனார் கோயில் 
    ஆதீனம் சென்று குருமுதல்வர் சிவக்கிர யோகிகள் தரிசனம் செய்தார். 

    பின்னர் 28-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்திடம், தருமையாதீன திருநன்றியூர் தேவஸ்தானம் மற்றும் தென்திருமுல்லைவாயில் 
    கோவில்களின் மகா கும்பாபிஷேக பத்திரிக் கைகளை வழங்கினார்.

    திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம்  குருமகாசந்நிதானம் அவர்களிடத்தில் திருக்கயிலாய பம்பரை தருமை ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் திருநன்றியூர் தேவஸ்தானம் மற்றும் தென் திருமுல்லைவாயில் கோவில்களின் மகா கும்பாபிஷேக பத்திரிகை பார்க்கப்பட்டது.

    இதேபோல் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம்  
    குருமகா சந்நிதானத்திடம், திருக்கயிலாய பம்பரை தருமை ஆதீனம் 
    27-வது குருமகாசந்நிதானம் அருளாணையின்படி, சீர்காழி சட்டைநாத தேவஸ்தானம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் திருநன்றியூர் தேவஸ்தானம் மற்றும் தென் திருமுல்லைவாயில் கோவில்களின் மகா கும்பாபிஷேக பத்திரிகைகளை வழங்கினார்.
    சீர்காழி பகுதியில் ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை வாங்க மறுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    சீர்காழி:

    சீர்காழி பகுதி ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதை 
    கண்டித்து புதன்கிழமை கடைக்கு அரிசி கொண்டுவந்த லாரியை 
    மடக்கி தரமான அரிசி வழங்கவேண்டும் என கோரியும், தரமற்ற 
    அரிசியை வாங்கமறுத்தும் பொதுமக்கள் கடையின் முன்பு திரண்டு முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் கடந்த சில மாதங்களாக 
    குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

    இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், விவசாய தொழிலாளர் 
    சங்கத்தினர் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி பல்வேறு 
    நூதன போராட்டங்களை நடத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் 
    கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

    இதனிடையே சீர்காழி நகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான எம்.எஸ்.கே. நகரில் உள்ள ரேசன் கடையில் 
    குடும்ப அட்டைக்கு அரிசி வாங்க பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.
    அப்போது தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டது.

    இதனை பார்த்து அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள 
    தரமற்ற அரிசியை வாங்க மறுத்து விற்பனையாளர்களிடம் 
    வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது எருக்கூர் நவீன அரிசி ஆலையிலிருந்து, ரேசன்கடைக்கு 
    அரிசி மூட்டைகள் வந்து இறங்கின. 

    அதனை பார்த்த பொதுமக்கள் தரமான அரிசியை வழங்கவேண்டும், 
    தரமற்ற அரிசியை திருப்பி எடுத்து செல்லவேண்டும் என லாரி முன்பு 
    நின்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து வரும் நாட்களில் 
    தரமான அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் 
    அரிசி வாங்காமல் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
    செம்பனார்கோவில் குமரன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் தீர்த்தவாரி நடந்தது.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தொடர்ந்து தினமும் மயில் வாகனத்தில் சண்முக சுப்பிரமணிய சாமி வீதியுலா நடந்தது.கடந்த 16ம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரசம்ஹாரம், நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. 

    தைப்பூச திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தங்க கவசம் மற்றும் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக சிறப்பு யாகம், சண்முகா அர்ச்சனை நடந்தது. விழாவையொட்டி சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சாமி, அம்பாள் புறப்பாடாகி, வள்ளி தெய்வானையுடன் சண்முக சுப்பிரமணியசாமி, இடும்பர் ஆகிய சாமிகளின் வீதியுலா நடந்தது. 

    பின்னர் காவிரி ஆற்றங்கரையில் பஞ்ச மூர்த்திகளையும் எழுந்தருளச் 
    செய்து தீர்த்தவாரி நடந்தது. அப்போது புனித நீராடினர்.
    விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். 

    ஏற்பாடுகளை குமரன் கோவில் பகுதி குடியிருப்போர் பொது நலச்சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் 
    குணசேகரன் ஆகியோர் செய்தனர்.
    சீர்காழி அருகே தைப்பூச விழாவில் பொது இடத்தில் கொடியேற்ற முயன்ற நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வடரெங்கம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா நடத்தப்பட்டது.

    வடரெங்கத்தில் திருமுருகப்பெருவிழா என்ற பெயரில் தென்னை 
    ஓலையால் பந்தல் அமைத்து அதில் முருகப்பெருமானின் படத்தை 
    வைத்து பூஜை செய்தனர். 

    இதில் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர் காசிராமன், 
    மாவட்ட செயலாளர் காளிதாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

    மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான நாம் தமிழர் கட்சியினர் 
    பங்கேற்றனர். 

    முன்னதாக அவர்கள் பொது இடத்தில் நாம் தமிழர் கட்சி கொடியினை ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்த நிலையில் திருந்தனர். 

    இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு வந்த கொள்ளிடம் போலீசார் அரசு அனுமதியின்றி பொது இடத்தில் கட்சிக்கொடி 
    ஏற்றக்கூடாது என அறிவுறுத்தினர். 

    இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் அங்கு வைத்திருந்த 
    கொடிமரத்தை எடுத்துச் சென்று நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய 
    நிர்வாகி சிவக்குமார் என்பவரது இடத்தில் வைத்து அதில் கொடி ஏற்றினர். 

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வடரங்கம் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகம் தற்காலிக கலெக்டர் அலுவலமாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கனவாக இருந்த தனிமாவட்டம் கோரிக்கையை 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார்.

    தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று மார்ச் மாதம் 2020-ம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா அதே ஆண்டு ஜூலை 15-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

    பின்னர், 2020 டிசம்பர் 28-ம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட கலெக்டராக லலிதா நியமனம் செய்யப்பட்டார். மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகம் தற்காலிக கலெக்டர் அலுவலமாக மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார்.

    அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 19-ந்தேதி புதிய நிரந்தர கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா காணொலிகாட்சி மூலம் நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜ்குமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ஒருங்கிணைந்த நாகை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை தாசில்தார் ராகவன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தி.மு.க பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறையில் ரெயிலில் அடிப்பட்டு என்ஜினீயர் இறந்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதி சாந்துகாப்பு 
    தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 27). என்ஜினீயரான இவர் 
    சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை 
    பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு கொரோனா பரவலால் சென்னையில் இருந்து 
    சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் சென்னைக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் அவர் மாப்படுகை ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கால் வைத்தப்படி மயங்கி கிடந்துள்ளார்.

    அப்போது மயிலாடுதுறை நோக்கி வந்த ரெயில் ஒன்றின் சக்கரத்தில் 
    சிக்கி சிவாவின் கால்கள் சிதைந்தன.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு 
    கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு 
    மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 
    அங்கு சிகிச்சை பலனின்றி சிவா இறந்தார்.

    இது குறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா, எதன் காரணமாக தண்டவாளத்தில் 
    மயங்கி கிடந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் 
    விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம் பகுதியில் பெய்த கனமழையால் வயலில் ஈரப்பதம் அதிகம் உள்ள காரணத்தால் எந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் ஆட்களை வைத்து நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் பாதிக்கப்பட்டிருந்தது.

    கொள்ளிடம் பகுதியில் மட்டும் சுமார் 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கன மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்து வரும் நிலையில் தற்போது மீதமுள்ள நெற்பயிர் அறுவடைக்கு தயார்ஆன நிலையில் அறுவடை நடந்து வருகிறது.
     
    கொள்ளிடம் பகுதியில் ஒரே நேரத்தில் அறுவடை பல இடங்களில் தொடங்கி உள்ளதால் அறுவடை எந்திரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வயலில் அதிக ஈரம் மற்றும் சேரும் சகதியுமாக இருப்பதால் அறுவடை எந்திரம் வயலில் இறங்கி அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதனால் விவசாயிகள் ஆட்களை வைத்து அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
    இதில் காலதாமதம் ஆனாலும் பெரும்பாலான வயல்களில் ஆட்களை வைத்தே அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. 

    இதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்தும் அறுவடை செய்யும் பணி மந்தமாக நடைபெற்று வரும் நிலையில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்கள் கற்றைகளாக கட்டி வைக்கோலுடன் தலையில் சுமந்து களத்துமேடு மற்றும் சாலையோரம் உள்ள இடங்களுக்கு கொண்டுவரப்பட்டு,  கையால் அடித்து நெல்மணிகள் மட்டும் பிரிக்கப்பட்டு பின்னர் இயற்கை முறையில் முறம் கொண்டு நன்கு காற்றில் தூற்றப்பட்டு நெல்மணிகள் மூட்டையாகக் கட்டப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். 

    இதுகுறித்து ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருணாகரன் கூறுகையில், இந்த வருடம் சம்பா நெற்பயிர் சாகுபடி தீவிரமாக செய்து கொண்டிருந்தபோது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர் ஒரு பகுதி சேதமாகி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. 

    ஆனால் மீதமிருந்த நெற்கதிர்களை அறுவடை செய்து சிரமத்துக்கு இடையே உணவுக்காகவும் கால்நடைகளுக்கு உணவுக்காக வைக்கோலையும் மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    செலவு மற்றும் கூலியை ஒப்பிட்டு பார்க்கும்போது விவசாயிகளுக்கு இந்த வருடம் சிறிதுகூட லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றார்.
    சீர்காழி தாலுகா கருக்குடியில் இந்து சமுதாய ஒருங்கிணைப்பு & பொங்கல் விழா இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, கருக்குடியில் 
    வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை இந்து சமுதாய 
    ஒருங்கிணைப்பு விழாவாக கொண்டாடப்பட்டது.

    இந்து மக்கள் கட்சி நடத்திய இவ்விழாவில் திருவாவடுதுறை ஆதீன 
    கட்டளை விசாரணை திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் ஆசி 
    வழங்கி பொங்கல் பரிசளித்தார். 

    இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் 
    ஜெ.சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன் 
    முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மயிலக்கோயில் பெருநிலக்கிழார் வரதராஜன் கலந்துகொண்டார். கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, தேங்காய்.

    வாழைப்பழம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், சூடம், 
    சாம்பிராணி, பத்தி, விபூதி, குங்குமம் அடங்கிய பொங்கல் பரிசு 
    பைகள் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கிராம 
    நாட்டாமை, பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் வழக்கு செய்தனர்.
    தரங்கம்பாடி:

    கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழக 
    அரசு கடந்த 6ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 
    மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் 
    முழு ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு  
    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் 
    வெறிச்சோடி காணப்பட்டது. 

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் 2 டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட 
    காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 350-க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுக்கா பகுதிகளில் பாதுகாப்பு பணியில் 6 நிரந்தர சோதனை சாவடிகள், 
    30 தற்காலிக சோதனைசாவடிகள், அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

    அத்தியாவசிய தேவையின்றி ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது 360 வழக்குகள் 
    போடப்பட்டுள்ளது.

     இசெல்லான் முறையில் ரூ.500 அபராதமும் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மயிலாடுதுறை நகரில் பழைய பேருந்து நிலையம், கால்டாக்ஸ், கூறைநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர 
    கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் படகு பொங்கல் கொண்டாடப்பட்டது.
    சீர்காழி:

    தமிழகம் முழுவதும் தை 2-ம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

    மாட்டு பொங்கலன்று தங்களது வீடுகளில் வளர்க்கும் மாடுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் அணிவித்தும், கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசியும் வீதிகளில் உலா வருவது அன்றைய தினத்தில் நடைபெறும்.

    அதேபோல் மீனவர்கள் மாட்டு பொங்கல் தினத்தில் தங்களது வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாமல் விளங்கும் படகுகளுக்கு 
    சிறப்பு பூஜைகள் செய்து படையல் இடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உழவர்கள் எப்படி மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து படைத்து மாடுகளை விரட்டி மாட்டு பொங்கலை கொண்டாடுகின்றனரோ அதேபோல் திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் தங்களிடம் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகுள் பைபர் படகுகளை பழுதுகள் 
    நீக்கி, சுத்தம் செய்தனர்.

    படகுகளில் வாழைகன்றுகள், கரும்புகள், தோரணங்கள் கட்டியும், 
    சந்தனம், குங்குமம் வைத்து, மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர். 

    தொடர்ந்து அவல், பொரி, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வைத்து 
    சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்த மீனவர்கள், அதன்பின்னர்
    தங்களது குடும்பத்தினருடன் படகுகளில் கடலில் உலா வந்து 
    மீண்டும் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.
    சீர்காழியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு 
    கிராமத்தில் மறைந்த நாடி ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த 
    ஒளிலாயம் அமைந்துள்ளது.

    இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர் 
    பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் கோசாலை
    27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் ஆகியவை வைத்து 
    பராமரிக்கப்பட்டு வருகிறது. 

    ஸ்ரீ சத்குரு 18 சித்தர்கள் ஒளிலாயம் ஆலயத்தில் வருடந்தோறும் 
    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மதத்தினரும் 
    ஒன்று சேர்ந்து மத நல்லிணக்கத்தோடு பொங்கல் பானை வைத்து 
    வழிபாடு செய்வது வழக்கம்.

    அதே போல இந்த ஆண்டும் 18 சித்தர் ஆலயத்தில் காரைமேடு, 
    தென்னலக்குடி, சூரக்காடு, அண்ணங்கோவில் உள்ளிட்ட 
    கிராமங்களை சேர்ந்த கிராம பொதுமக்கள் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து 
    சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடினர்.

    ஏற்பாடுகளை நாடி.செல்வ முத்துக்குமரன், நாடி. செந்தமிழன், 
    நாடி. மாமல்லன், நாடி. பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.
    சீர்காழியில் வேன் மோதியதில் வாலிபர் பலியானார்
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து காரைக்கால் 
    நோக்கி மினி லோடு வேன் சென்றது. அதனை காரைக்கால் 
    டி.ஆர்.பட்டினம் அல்லிகுளம் தெருவை சேர்ந்த சவுரிராஜன் (58) 
    என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

    சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அண்ணன் 
    பெருமாள் கோவில் ஆர்ச் அருகே சென்றபோது எதிரே 
    வந்த டூவீலர் மீது மினி லோடு வேன் மோதியுள்ளது.

    இந்த விபத்தில் டூவீலரை ஓட்டிவந்த வெள்ளப்பள்ளம் ஐயப்பன் (25) 
    என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து 
    வந்த அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (27) என்பவர் 
    படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் 
    சேர்க்கப்பட்டுள்ளார். 

    விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் 
    வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சவுரிராஜனை கைது 
    செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×