என் மலர்
மயிலாடுதுறை
நிலத்துக்கு குறைந்த சந்தை மதிப்பு கொடுப்பதால் 4 வழிச்சாலை விரிவாக்க பணியைவிவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடுக்காய்மரம்
கிராமத்தில் விழுப்புரத்திலிருந்து&நாகப்பட்டினம் செல்ல
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெறத் தொடங்கியது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதிகாரிகள் ஊழியர்கள்
சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரத்துடன் சாலை
அமைக்கும் பணியை தொடங்கினர்.
விவசாய நிலங்கள் தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ள
நிலையில் இந்த பணி தொடங்கியதால் அப்பகுதியைச் சேர்ந்த
கடுக்காய் மரம், புத்தூர், குமிளங்காடு ஆகிய கிராமங்களைச்
சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரண்டு
வந்து சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன்
எந்திரத்தை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள்
கூறுகையில், சாலை அமைக்கும் பணிக்காக உரிய உத்தரவு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு அதிகாரிகள் விவசாயிகளிடம் சாதாரணமாக விளைநிலங்களின் விற்பனை
மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு தருவதாக உறுதி அளித்ததனர்.
ஆனால் அதனை செய்யாமலும், உரிய உத்தரவு விவசாயிகளுக்கு வழங்காமலும் சாலை அமைக்கும் பணியை பொக்லைன் எந்திரம் மூலம் துவங்கியுள்ளனர். இதற்கான உத்தரவை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்தால்தான் சாலை அமைக்கும் பணியை தொடரலாம் என்றனர்.
பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் மட்டுமே சாலை அமைக்கும்
பணி தொடங்கியுள்ளது. விவசாய நிலங்களில் சாலை அமைக்கும்
பணி உரிய உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே தொடரும் என்றனர்.
அதனைத் தொடர்ந்து அரசுக்குச் சொந்தமான இடத்தில் மட்டும் சாலை அமைக்கும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யும்
பணி நடைபெற்றது.
சாலை அமைக்கும் பணியை விவசாயிகள் திரண்டு வந்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருநின்றியூர் லட்சுமிபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி தாலுகா, திருநின்றியூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு
உட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி தேவஸ்தானத்துடன்
இணைந்த உலக நாயகி அம்பாள் சமேத லட்சுமி புரீஸ்வரர் சுவாமி
கோவில் அமைந்துள்ளது.
தேவாரபதிகம் பெற்ற, செங்கோட்சோழன் கட்டிய மாடக்கோவில்
ஒன்றாகும். மூலவர் சுயம்பு பிரசித்திப்பெற்ற இக்கோவிலுக்கு
கும்பாபிஷேகம் செய்திட முடிவுசெய்யப்பட்டு பணிகள்
தொடங்கி நடந்து முடிந்தது.
இதனையடுத்து கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஏற்பாட்டின்படி கடந்த 20-ந்தேதி யாகசாலை
பூஜைகள் தொடங்கப்பட்டது. இதனைமுன்னிட்டு சொக்க நாதர் பெருமானுடன், தருமபுரத்திலிருந்து பாதயாத்திரையாக
குருமகா சந்நிதானம் புறப்பட்டு திருநின்றியூர் வந்தடைந்தார்.
விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப் பெற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து
யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீரால் அடங்கிய கடங்கள்
புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான
கலசங்களை அடைந்தன.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,
சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குருமகா சன்னிதானம் மகாலிங்க
தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் அர்ச்சகர்
சேதுராம குருக்கள் தலைமையில், வைத்தீஸ்வரன் கோவில் ரமேஷ், திருக்கடையூர் மகேஷ் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கோபுர
கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் மவுனகுரு சாமி,
தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் திருமடங்களின்
தம்பிரான் சுவாமிகள், உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், வழக்குரைஞர் ராம. சேயோன், முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீர பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு சுவாமிகள் தலைமையில் கோவில் சிப்பந்திகள், பக்தர்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சீர்காழியில் இன்று புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்களின்றி நடந்தது
சீர்காழி:
சீர்காழியில் பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தை 1-ந்தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இரவு வீதி உலா நடந்து வந்தது.
விழாவில் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை
நடந்து முடிந்தது.
இதனிடையே பத்தாம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேர் புறப்பாடு நடந்தது. முன்னதாக
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார்.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் அனுமதி இன்றி டிராக்டர் வாகனம் மூலம் கட்டி இழுக்கப் பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.
சீர்காழியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சீர்காழி:
சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி தலைமை வகித்தார். நகர செயலாளர் வினோத் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், பேரவை செயலாளர் மணி, பேரூர் செயலாளர் போகர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், வக்கீல்கள் நெடுஞ்செழியன், தியாகராஜன், பாலாஜி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காத தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், வி.ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும், டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பேரூராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன் ஆகியோர் கலந்துக்கொன்டனர்.
அதைபோல் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.
ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சந்தோஷ்குமார், முன்னாள் நகர செயலாளர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் கடந்த வருடத்தில் காலம் தவறி பெய்த பருவமழையால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள் பல்வேறு இடங்களில் நிர்வாணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தினர்.
தமிழக அரசு நிபுணர் குழுக்களை அனுப்பி விவசாயம் பாதிக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் அதிகாரிகளை வைத்து கணக்கு எடுத்தனர்.
கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரத்து 38 வழங்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் மயிலாடுதுறை தாலுக்காவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை மூலம்
ஏராளமான விவசாயிகளுக்கு ரூ.53 லட்சம் அவரவர் வங்கி கணக்கில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் வருவாய்த்துறையினர் வரவு வைத்துள்ளனர்.
சீர்காழி புதிய பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்களால் பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
சீர்காழி:
சீர்காழியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம், கடலூர்,
புதுச்சேரி, சென்னை, காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களிலிருந்து தனியார் மற்றும் அரசு
பஸ் வந்து செல்கின்றன.
நவகிரக தலமான வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு மற்றும்
நாங்கூர் திவ்யதேசங்கள், பஞ்சநரசிம்மர் தலங்கள் ஆகியவை சீர்காழி அருகே அமைந்துள்ளதால் வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்து பஸ்கள் மூலம் வரும் பக்தர்கள் சீர்காழி புதிய பஸ் நிலையம் வந்து இறங்கி அங்கிருந்து தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு நகர பஸ்கள் அல்லது ஆட்டோக்களில் செல்கின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை, நாகை, சிதம்பரம் உள்ளிட்ட
பகுதிகளிலிருந்து சீர்காழி வழியாக செல்லும் சில தனியார் மற்றும்
அரசு பஸ்கள் சீர்காழி நகருக்குள் உள்ள புதிய பஸ் நிலையம் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றன.
புறவழிச்சாலையிலேயே பயணிகளையும் இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
அதேபோல் இரவு நேரங்களில் சீர்காழி நகருக்குள் பெரும்பாலான பஸ்கள் வருவதில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து புறவழிச்சாலை வழியாக செல்லும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் திட்டபணிகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
சீர்காழி:
சீர்காழி நகர பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர்
ஜி.என்.ரவி, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ஆர்.கலைவாணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்டாண்டர், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், டாக்டர்.பன்னீர்செல்வம், நகர துணை
செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினரும், சீர்காழி எம்.எல்.ஏ.வுமான எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், சீர்காழி நகராட்சி
24 வார்டுகளிலும் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும்
வேட்பாளருக்கு போட்டியாக தி.மு.கவை சேர்ந்தவர்கள்
சுயேட்சையாகவோ வேறு எந்தவகையிலும் கட்சி வேட்பாளர்
வெற்றிக்கு எதிராக செயல்படக்கூடாது.
போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரவுள்ள கூட்டுறவு
சங்க பொறுப்புகள் வழங்கிட பரிசீலிக்கப்படும் என்றார்.
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், பூம்புகார்
எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் பேசுகையில், சீர்காழி நகராட்சியில்
உள்ள 24 வார்டுகளிலும் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களின்
வெற்றிக்கு பாகுபாடின்றி கட்சியினர் ஒன்றிணைந்து களபணியாற்றி
வெற்றி பெறசெய்யவேண்டும்.
அரசின் திட்டபணிகள் தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவும் என்றார்.
இதில் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை
அமைப்பாளர் செல்வமுத்துக்குமார், முன்னாள் நகர செயலாளர்
பொன்முடி, பொருளாளர் பந்தல் முத்து, முன்னாள் பொருளாளர் துரை,
திட்டை ஊராட்சிமன்ற தலைவர் பெரியசாமி, நிர்வாகிகள் திருச்செல்வம், ஆனந்த், சரவணன், இளைஞரணி நிர்வாகி தனராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் சுபநிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை கே.ஆர். பிரிண்டர்ஸ்&கார்ட்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
மயிலாடுதுறையில் தேசிய தமிழர் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தமிழர் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில செயலாளர் ஹாஜி முகமது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் கணேசன் மனித உரிமைக் கட்சி
நிறுவன தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கும், இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்வதற்கும் லஞ்சம் கேட்கும் மருத்துவமனை ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.
மயிலாடுதுறை நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாள சாக்கடையை சீர் செய்து பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானம் முன்பு தருமபுரம் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதனை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வீதிகளில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்ற தற்காலிக நடவடிக்கை கூட எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்
3 ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில துணை தலைவர் அய்யாசாமி, நகர செயலாளர் கமல்ராஜா, வன்னியர் சங்க துணைத் தலைவர் சக்திவேல், பூம்புகார் தொகுதி அமைப்பு செயலாளர் தமிழ்துரை, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் காமராஜ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில் 54 ஊராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து அடிப்படை வளர்ச்சி குறித்து பயிற்சி நடைபெற்றது
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், 54 ஊராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து அடிப்படை வளர்ச்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு உதவி இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். கிராம ஊராட்சியின் கடமைகள் அதிகாரங்கள் பொறுப்புகள், ஊராட்சி கணக்குகள் பராமரிப்பு. மத்திய மாநில அரசு திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவகால மாற்றம்,
பேரிடர் மேலாண்மை, ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்,
நிதி நிர்வாகம், மூன்று அடுக்கு ஊராட்சிகளின் அமைப்பு, தமிழ்நாடு
அரசு ஊரக சட்டம், உள்ளிட்ட பஞ்சாயத்து சட்டதிட்டங்கள் உட்பட்டு
செயல்பட ஊராட்சித் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனகர், நல்லமுத்து, மைவிழி, மகேஸ்வரி, மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






