என் மலர்
மயிலாடுதுறை
குத்தாலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் இடம் மீட்கப்பட்டது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின்கீழ் மன்மதீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோவிலின் பின்புறம் உள்ள மணவெளி தெருவில் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 6,600 சதுர அடி பரப்பளவில் வீட்டுடன் கூடிய இடம் உள்ளது.
சம்பந்தம், ராமையா ஆகியோர் தங்கள் வசமிருந்த இந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், பகுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு 14 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததால் கடந்த 2016&ஆம் ஆண்டு மீட்க அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்
முத்துராமன், அறநிலையத்துறை வட்டாட்சியர் விஜயராகவன், செயல் அலுவலர் நிர்மலாதேவி ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கினர்.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அங்குவந்த மயிலாடுதுறை திமுக பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்தி, வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கமர்ஷியல் கட்டணம் வசூலிப்பதாகவும், அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் ஆட்சிக்கு கெட்ட பெயர்
ஏற்படும் என்று கூறி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாததால் எம்பி ராமலிங்கம் திரும்பி சென்றார்.
இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை கோயில் பின்பக்க கதவுகளை மூடி அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதனால், குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், குத்தாலம் வட்டாட்சியர் பிரான்சுவா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது.
தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இருந்த வீட்டினை முழுமையாக இடித்தபின்னர், அங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்ற பதாகையை வைத்து கம்பிவேலி வைத்து அடைத்தனர்.
அந்த இடத்தில் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் எச்சரித்துள்ளார்.
சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் குத்தாலத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளிடம் அருகே மத பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 52). இவர் பூங்குடி கிராம மெயின் ரோட்டில் லாரியை பிரசார வாகனமாக மாற்றம் செய்து தாம் சார்ந்த மதத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இதனை அறிந்த கொள்ளிடம் பா.ஜ.க ஒன்றிய தலைவர் நேதாஜி, மாவட்ட துணைத்தலைவர் சுஜாதா ஆகியோர் நேரில் சென்று மத பிரசாரம் செய்து கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் கொரோனா கட்டுப்பாடு இருந்து வருவதால் இதுபோன்ற பிரசாரத்தை தற்போது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி மீண்டும் அவர்களிடம் வாகனத்தை திருப்பி வழங்கினர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒதவந்தான்குடி கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டு-புழுக்கள் இருந்ததால் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மூலம் கிராமத்தைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசின் குடிமை பொருட்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான குடிமை பொருட்கள் வழங்கப்பட்டது.அப்பொழுது சிலருக்கு வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகள், புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது:-
கடந்த சில மாதங்களாகவே தங்களுக்கு வண்டுகள் வைத்த அரிசியை வழங்கப்படுவதாகவும் இதனை சமைத்து உண்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் நீர்நிலைகளில் கொட்டியும் கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கிறோம்.
அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் ரேசன் கடை அரிசியையே நம்பி உள்ளோம். தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் தங்களால் ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அவல நிலை உள்ளது.
எனவே வரும் காலங்களிலாவது தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறையில் புதிதாக மாவட்ட வேலைவாய்ப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டத்தில் இருந்து 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் 2020-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் செயல்பட்டு வந்தாலும் பல்வேறு துறைகள் பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைமையில் இயங்கி வருகிறது.
தற்பொது ஒவ்வொரு துறையாக மயிலாடுதுறை மாவட்டத்தின் கட்டுப் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மயிலாடுதுறை பாலாஜி நகர் 2-வது தெருவில் தொடங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் சந்திரன், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக நியமிக்கப் பட்ட மா.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் திறக்கப் பட்டதால் மாணவர்கள் நாகை மாவட்டத்திற்கு செல்லாமல் மயிலாடுதுறையிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெற முடியும் என்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்ததை கண்டித்து கொள்முதல் நிலையத்தை வேலி அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் அய்யனார் கோயில் அருகே கடந்த 9 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அன்னவாசல், கழனிவாசல், அகரஅன்னவாசல், வடகரை, மாந்தை, வாடக்குடி, மாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 980- க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர்.
தற்போது சம்பா அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்றம் செய்து ஒதுக்குபுறமாக உள்ள மாங்குடி கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள், ஏற்கனவே இயங்கி வந்த இடத்திலேயே செயல்பட வலியுறுத்தி மாங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேலி அமைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்ந போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சின்னதுரை, விவசாய சங்கத் தலைவர் சாமியப்பன், செயலாளர் முருகன், விவசாய சங்கத்தினர் இளையராஜா, கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில், 17 ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக உள்ளனர்.
இதனிடையே இந்த 17 ஊராட்சிகளில் அண்மையில் நியமிக்கப்பட்ட பணிதள பொறுப்பாளர்களை கிராம ஊராட்சி தீர்மானம் இல்லாமல் தன்னிச்சையாக ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்து நியமித்துள்ளதாக கூறி அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் 17 பேர் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர்களை அமர சொல்லாமல் மரியாதை குறைவாக நடத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் அங்கிருந்து வெளியேறி, ஒன்றிய அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படவில்லை.
போராட்டம் தொடர்ந்த நிலையில் மாலை தேர்தல் துணை தாசில்தார் செந்தில் குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்களை உள்ளே அழைத்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்கபடாததால் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த அசோகன், மதியழகன், அஞ்சம்மாள், தாமரை செல்வி திருமாறன், விஜயன், மாலினி, வசந்தி கிருபா நிதி, தனலட்சுமி அன்பழகன், தெட்சிணாமூர்த்தி, சரளா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேரும் அங்கிருந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவகத்திற்கு சென்று கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்ததிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதன்படி ஊராட்சிமன்ற தலைவர்களை நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் உறுதியளித்ததின் பேரில் தற்காலிகமாக தர்ணா போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை ராஜன்தோட்டம் இந்திய விளையாட்டு ஆணைய அரங்கத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் லலிதா தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 73-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய 19 காவல் ஆளுநர்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் நடைபெற்ற காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோயில் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி வாலிபர் உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் அருகே கண்டியன் கடலி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசேவியர் (வயது 36). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் செம்பனார்கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
இதில் தூக்கிவீசப் பட்டு பலத்த காயமடைந்த லூர்துசேவியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து சேவியர் இறந்தார். இதுகுறித்து செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 75 கோடி பெண்கள் இலவச பஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், எம்.பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று ரூ.25லட்சத்து 34ஆயிரம் மதிப்பில் 290 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, திருமண உதவித்தொகை, இறப்பு நிதியுதவி, புதிய மின்னனு குடும்ப அட்டை, வேளாண் இடுபொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
தேர்தலுக்கு முன்பே உங்கள்தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் லட்சக்கணக்கான மனுக்களை பெற்று, ஆட்சியமைத்து நூறுநாட்களுக்குள் மூன்றரை லட்சம் மனுக்களுக்கு தீர்வுகண்டவர் தமிழக முதல்வர். இதுவரையிலும் 75 கோடி பெண்கள் இலவச பஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
சீர்காழி அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு டயாலிசீஸ் வசதிக்காக 4 டயாலிசீஸ் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.23 கோடியில் சீர்காழி பகுதியில் உயர் நவீன அறுவை சிகிச்சை வசதியுடன் மருத்துவமனை வரவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மயிலாடுதுறையில் ரெயில் தண்டவாளத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
சீர்காழி:
குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவுப்படி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை ரெயில் தண்டவாளத்தில் கண்காணிப்பு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
தண்டவாளத்தில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தினர்.
வெடிகுண்டு உள்ளதா என்பது குறித்தும் நவீன கருவி மூலம் சோதனை செய்தனர்.தொடர்ந்து 2 நாட்கள் கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சீர்காழியில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சொக்கநாதர்பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் ரதயாத்திரை திரளான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அணிகொண்டகோதை உடனாகிய முல்லைவனநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் 27ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதையடுத்து, 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
இதனிடையே திருநின்றவூர் லட்சுமிபுரீஸ்வரர்சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்காக தருமபுரம் மடத்தில் உள்ள ஆத்மாரத்த பூஜை மூர்த்தியான சொக்கநாதர்பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் திருநின்றவூர் சென்று கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து அங்கிருந்து திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் திருநின்றவூரிலிருந்து ரதயாத்திரையாக புறப்பட்டு சீர்காழி வருகைபுரிந்தார்.
கடந்த 1991ம் ஆண்டு சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சீர்காழி பகுதியில் பாதயாத்திரையாக தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் சொக்கநாதர்பெருமான் எழுந்தருளி பக்தர்கள் தரிசனம் செய்தநிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு
பிறகு தற்போது சீர்காழியில் சொக்கநாதருடன் தருமைஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ரதயாத்திரையாக வருகைதந்தநிலையில், சீர்காழி உப்பனாறு பாலம் அருகே நகர எல்லை பகுதியில் மதிமுக மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் மார்கோனி தலைமையில் பொதுமக்கள், பக்தர்கள், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சீர்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்கள் சார்பில் அதன் தாளாளர் ராஜ்கமல் விதிபி நடுநிலைப்பள்ளி சார்பில் பள்ளிச் செயலர் சாமிநாதன், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கடவாசல் ரமணன், முத்துக்குமார், வெங்கட்ராமன், சீர்காழி சைவ வேளாளர் சங்கம் சார்பில் பண்ணை.சிவா, சந்திரன், கார்த்தி, சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிதரன், அதிமுக ஜெ பேரவை செயலர் ஏவி மணி, அதிமுக நகர செயலாளர் வினோத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு நின்று பூர்ண கும்பமரியாதையுடன் ரதயாத்திரையில் வருகை தந்த தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றனர்.
தொடர்ந்து சொக்கநாதர்பெருமானை தரிசனம் செய்து, ஆதீனத்திடம் அருளாசி பெற்றனர். சீர்காழி பிரதான வீதிகளின் வழியாக ரதயாத்திரை சென்றது.அப்போது சீர்காழி ஆபத்துகாத்தவினாயகர்கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமிதரிசனம் செய்தார்.
பின்னர் எடமணல் காசிவிஸ்வநாதர் கோயிலிலும் தருமபுரம் ஆதீனம் ரதயாத்திரைக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.அதன்பின்னர் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயிலுக்கு ரதயாத்திரை சென்றடைந்தது.
கடவாசல் ஊராட்சியில் இயற்கை முறையில் காவி நீரை வடிகட்டி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர
கடவாசல் ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சியில் மேலத்தெரு, கீழத்தெரு, பள்ளிவாசல்தெரு,
காந்திநகர் ஆகிய பகுதிகளில் 450 வீடுகளில் 2600 பேர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம பகுதியில் நிலத்தடி நீர் காவிநீராக மாறி விட்டதால்
குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே இயற்கை முறையில்
நிலத்தடி நீரை வடிகட்டும் முறையை பின்பற்றி குடிநீர் இந்த ஊராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முறையில் மணல் மற்றும் கூழாங்கற்கள் நிரப்பப்பட்ட இரண்டு தொட்டிகளில் நிலத்தடி காவி நீர் மின் மோட்டார் மூலம்
வெளியே குழாய் வழியே கொண்டு வரப்பட்டு ஊற்றப்படுகிறது.
பின்னர் அந்த நீர் அப்படியே வடிகட்டப்பட்டு மணல் மற்றும்
கூழாங்கற்கள் அடியில் சென்று, நிலத்தடி நீர் தேக்க தொட்டிக்கு சென்று தேங்குகிறது.
பின்னர் அங்கிருந்து மின் மோட்டார் உதவியுடன் குழாய் மூலமாக அருகாமையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து
குழாய்கள் மூலம் அனைத்து தெருக்களுக்கும் குடிநீர்
வழங்கப்படுகிறது.
இதன் மூலம் வடிகட்டி கொண்டு வரப்படும் குடிநீர் 15000 லிட்டர்
கொள்ளளவு உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து அப்பகுதி கிராம மக்களுக்கு
வழங்கப்பட்டு வருகிறது.
மணல் மற்றும் கூழாங்கற்கள் வழியே தண்ணீர் செல்லும்போது
காவி மட்டும் மணல் மற்றும் கூழாங்கற்களில் தங்கிவிடுகிறது.
இதன் மூலம் வடிகட்டப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. கடந்த
20 வருடங்களாக இயற்கை முறையில் வடிகட்டப்பட்ட இந்த தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நிலத்தடி காவி நீரை வடிகட்ட பயன்படுத்தப்படும் மணல் மற்றும் கூழாங்கற்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றபடுவதாக ஊராட்சி சார்பில் தெரிவித்தனர்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கடவாசல் ஊராட்சி பகுதிக்கு குடிநீர் கிடைத்தாலும் இயற்கை முறையில் வடிகட்டப்பட்ட இந்த நீர் எந்த நேரமும் இந்த கிராம மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் எந்த நேரமும் தட்டுப்பாடின்றி போதிய அளவு தண்ணீர் எந்த நேரம் கிடைத்து வருகிறது என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.






