search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சீர்காழி புதிய பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்

    சீர்காழி புதிய பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்களால் பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
    சீர்காழி:

    சீர்காழியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம், கடலூர், 
    புதுச்சேரி, சென்னை, காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களிலிருந்து தனியார் மற்றும் அரசு 
    பஸ் வந்து செல்கின்றன. 

    நவகிரக தலமான வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு மற்றும் 
    நாங்கூர் திவ்யதேசங்கள், பஞ்சநரசிம்மர் தலங்கள் ஆகியவை சீர்காழி அருகே அமைந்துள்ளதால் வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்து பஸ்கள் மூலம் வரும் பக்தர்கள் சீர்காழி புதிய பஸ் நிலையம் வந்து இறங்கி அங்கிருந்து தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு நகர பஸ்கள் அல்லது ஆட்டோக்களில் செல்கின்றனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை, நாகை, சிதம்பரம் உள்ளிட்ட 
    பகுதிகளிலிருந்து சீர்காழி வழியாக செல்லும் சில தனியார் மற்றும் 
    அரசு பஸ்கள் சீர்காழி நகருக்குள் உள்ள புதிய பஸ் நிலையம் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. 

    புறவழிச்சாலையிலேயே பயணிகளையும் இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. 

    அதேபோல் இரவு நேரங்களில் சீர்காழி நகருக்குள் பெரும்பாலான பஸ்கள் வருவதில்லை. 

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து புறவழிச்சாலை வழியாக செல்லும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×