என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறுவடை செய்த நெல் சாக்குமூட்டையில் கட்டும் பணி.
நெல் அறுவடை செய்யும் பணி தீவிரம்
கொள்ளிடம் பகுதியில் பெய்த கனமழையால் வயலில் ஈரப்பதம் அதிகம் உள்ள காரணத்தால் எந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலையில் ஆட்களை வைத்து நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர் பாதிக்கப்பட்டிருந்தது.
கொள்ளிடம் பகுதியில் மட்டும் சுமார் 5000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கன மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்து வரும் நிலையில் தற்போது மீதமுள்ள நெற்பயிர் அறுவடைக்கு தயார்ஆன நிலையில் அறுவடை நடந்து வருகிறது.
கொள்ளிடம் பகுதியில் ஒரே நேரத்தில் அறுவடை பல இடங்களில் தொடங்கி உள்ளதால் அறுவடை எந்திரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வயலில் அதிக ஈரம் மற்றும் சேரும் சகதியுமாக இருப்பதால் அறுவடை எந்திரம் வயலில் இறங்கி அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் ஆட்களை வைத்து அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் காலதாமதம் ஆனாலும் பெரும்பாலான வயல்களில் ஆட்களை வைத்தே அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்தும் அறுவடை செய்யும் பணி மந்தமாக நடைபெற்று வரும் நிலையில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்கள் கற்றைகளாக கட்டி வைக்கோலுடன் தலையில் சுமந்து களத்துமேடு மற்றும் சாலையோரம் உள்ள இடங்களுக்கு கொண்டுவரப்பட்டு, கையால் அடித்து நெல்மணிகள் மட்டும் பிரிக்கப்பட்டு பின்னர் இயற்கை முறையில் முறம் கொண்டு நன்கு காற்றில் தூற்றப்பட்டு நெல்மணிகள் மூட்டையாகக் கட்டப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருணாகரன் கூறுகையில், இந்த வருடம் சம்பா நெற்பயிர் சாகுபடி தீவிரமாக செய்து கொண்டிருந்தபோது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர் ஒரு பகுதி சேதமாகி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.
ஆனால் மீதமிருந்த நெற்கதிர்களை அறுவடை செய்து சிரமத்துக்கு இடையே உணவுக்காகவும் கால்நடைகளுக்கு உணவுக்காக வைக்கோலையும் மட்டுமே பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
செலவு மற்றும் கூலியை ஒப்பிட்டு பார்க்கும்போது விவசாயிகளுக்கு இந்த வருடம் சிறிதுகூட லாபம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றார்.
Next Story






