என் மலர்
மயிலாடுதுறை
குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.
குத்தாலம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கடலூர் மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திடீரென பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க.வினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உதயநிதியின் பேச்சை கேட்பதற்காக குத்தாலம் கடைவீதியில் கூடினர். மதியம் 2 மணி அளவில் குத்தாலத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் உள்ளே அமர்ந்தபடியே 2 நிமிடங்கள் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் சட்டமன்றத் தேர்தல் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற பிரச்சாரத்தின்போது காவல்துறையால் குத்தாலத்தில் இதே இடத்தில் என்னை கைது செய்து இப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள்.
அதன்பின் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தோம். தற்போது உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன்.
தஞ்சை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு தற்போது குத்தாலம் வந்துள்ளேன்.
முதல்வர் ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை உங்களிடம் ஒப்படைத்து உள்ளார். தேர்தலுக்கு முன்பு
உள்ள 9 நாட்களில் தீவிர பிரச்சாரம் செய்து முதலமைச்சரின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி
வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.
குத்தாலம் பள்ளியில் நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு காவல்துறை சார்பில் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட துணை சூப்பிரண்டு வசந்தராஜ் கலந்துகொண்டு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு புத்தகங்களை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
மேலும் புத்தகங்கள் படிப்பதன் அவசியம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவது, கல்வியை எவ்வாறு கற்பது உள்ளிட்டவைகள் குறித்தும் மாணவர்களிடையே பேசினார். இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார், தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி பள்ளியில் காவல்துறை சார்பில் நூலகத்தை டி.எஸ்.பி. லாமெக் தொடங்கி வைத்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், மயிலாடுதுறை எஸ்.பி சுகுணாசிங் மேற்பார்வையில், சீர்காழி காவல்துறை சார்பில் புதிய நூலகம் அமைத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சகிலா ரத்தினகுமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு நேசன், சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப்&இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சீர்காழி டி.எஸ்.பி லாமேக் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
வைத்தீஸ்வரன்கோவிலில் தை கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவிலில் தை கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவிலில் தை கிருத்திகையையொட்டி, வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக, கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.
குத்தாலம் அருகே கோவில் விழாவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இளம்பெண் உள்பட 3 பேரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பருத்திக்குடி கிராமத்தில் மங்கள பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, அம்பாள் புறப்பாடாகி வீதியுலா நடைபெற்றது. அப்போது, வழக்கத்தில் இல்லாத புதிய பாதையில் அம்பாள் வீதியுலா ஊர்வலம் சென்றதாகவும், இதற்கு மாற்று சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்து சென்ற விழாக் கமிட்டியைச் சேர்ந்த 7 பேர் அம்பாளை கோவிலில் இறக்கி வைத்துவிட்டு, பிள்ளையார் கோயில் தெருவுக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்த மக்களை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகள் காயத்ரி (23) என்பவர் படுகாயம் அடைந்தார்.
மேலும், முத்து (75), சுமதி (40) உள்ளிட்ட சிலரும் காயம் அடைந்தனர். அவர்கள் தற்போது, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலையூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட வடக்குத்தெருவைச் சேர்ந்த கபாலி என்கிற செல்லமுத்து (27), சத்யராஜ் (28), மணிகண்டன் (27) ஆகிய 3 பேரை கைது செய்து, தப்பியோடி மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே அன்னை அஜ்மத்பீவி தர்ஹாவில் சந்தனக்கூடு, கந்தூரி விழா நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்தவருடம் கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது.
தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விடியற்காலை 4 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.
இதில் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மவுலானாவின் கலிபாக்கல், சீடர்கள், பங்கேற்றனர். விழாவில் மதசார்பற்ற அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்தனர்.
பின்னணி பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசைக் கலாநிதி பட்டத்தை தருமபுரம் ஆதீனம் வழங்கினார்.
சீர்காழி:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.
அதில் திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகனுக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கிராமிய இசை கலாநிதி என்கிற பட்டத்தையும், மேலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகராகவும் அவரை அறிவித்தார்.
இதற்கு முன் முன்னணி பாடகர் டாக்டர் யேசுதாஸ் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவருக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தருமபுரம் ஆதீனம், சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் அகர்சந்த், தொழிலாளர் துறை அமைச்சர் சி. வெ.கணேசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம், திரைப்பட பின்னணி மற்றும் நாட்டுப்புற இசை பாடகரான டாக்டர். வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி எனும் பட்டத்தை வழங்கி, தங்கப்பதக்கம் அளித்து அருளாசி வழங்கினார்.
இது நாட்டுப்புற இசைக் கலைக்கு கவுரவத்தை அளித்துள்ளதாக பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
பரசலூர் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அடுத்த பரசலூர் கிராமம், மகாராஜாபுரம் திலகவதியார் தெருவில் அமைந்துள்ளது பழமையான ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில்.
சுயம்புவாய் தோன்றி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் நாகாத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் பஞ்சவர்ண பூச்சுடன் நிறைவு செய்யப்பட்டது.
இதையடுத்து இரன்டு கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய மூன்றாம் நாள் காலை பூஜையில் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்தது.
வானவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க, வேதவிற்பனர்கள் மந்திரங்கள் ஓத, வானத்தில் கருடன் வட்டமிட பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி நாகாத்தம்மா என கோஷங்கள் எழுப்ப விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கருவரையில் உள்ள நாகாத்தம்மன் உருவத்துக்கு புனித நீரை ஊற்றி அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் அபிஷேகம் செய்து மஹா தீபம் காண்பிக்கப்பட்டு.
அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் கிருஷ்ணன் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழியில் தேர்தல் பறக்கும் படையினருடன் வாகன தணிக்கையில் கோட்டாட்சியர் ஈடுபட்டார்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. சீர்காழி நகராட்சியில் உள்ள 24வார்டுகளில் போட்டியிட பல்வேறு கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதனிடையே வேட்பாளர்கள் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் நகரின் எல்லைபகுதிகள், பிரதான பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் சட்டவிரோதமாக கொடுக்கப் படுவதை தடுக்க தீவிர தணிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் நடந்த வாகன தணிக்கையின்போது கோட்டாட்சியர் நாராயணன் நேரில் சென்று அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து ஆய்வுசெய்தார்.
மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் மெயின் ரோடு அருகே சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆறுமுக கடவுளாக குடிகொண்டிருக்கும் வள்ளி தெய்வானை உடனாகிய சுப்பிரமணிய சுவாமி முதன்மையானதாகவும், வடமேற்கு மூலையில் ஆனந்தவள்ளி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் தனி சிவன் கோவிலாக அமைந்துள்ளது.
பிரம்மன் இக்கோவிலுக்கு வந்து கந்தபுஷ்கரணி அமைத்து 45 நாட்கள் விரதம் இருந்து பாவ விமோசனம் பெற்றார் என்பது வரலாற்று ஐதீகம். கடன் நிவர்த்தி ஸ்தலமாகவும், புத்திர பாக்கியம் அருள்பாலிக்கிற ஸ்தலமாகவும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோவில் பழைமை யானது. திருப்பணிகள் துவங்க நேற்று பாலாலயம் செய்தனர். செயல் அலுவலர் கோவிந்தராஜன், செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணன், திருப்பணி உபயதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் மாசிமக பெருவிழா 200 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற உத்வாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் கல்யாணசுந்தர மூர்த்தியாக கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்துகொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது.
அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மாசி மக பெருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது. இந்நிலையே பலரது தொடர்முயற்சியின் காரணமாக, இந்த ஆண்டு கோயிலில் மீண்டும் மாசி மகப் பெருவிழா தொடங்கியுள்ளது.
இதை முன்னிட்டு, நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கல்யாண மாரியம்மன் கிராம தேவதை உற்சவம் ஆகியன நடைபெற்றது. இன்று காலை விநாயகர் புறப்பாடு செய்யப்பட்டு துவஜாரோகணம் என சொல்லப்படும் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோவில் கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, ஆய்வாளர் ஹரிசங்கரன், செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், தினசரி காலை மாலை சுவாமி வீதி உலாவும், முக்கிய உற்சவமாக வருகிற 12-ம் தேதி சகோபுர தரிசனம், 16-ம் தேதி திருத்தேரோட்டம், 17-ம் தேதி தீர்த்தவாரி ஆகிய உற்சவங்கள் நடத்தப்பட்டு உற்சமானது 18-ம் தேதி நிறைவடைகிறது.
திருவாவடுதுறையில் சிவிகாரோஹணம் செய்து ஆதீனம் பட்டணப்பிரவேசம் எழுந்தருளினார். இதற்கு எதிராக போராட்டம் நடத்திய தி.க.வினர் 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ளது திருவாவடுதுறை ஆதீனம். திருவாவடுதுறை ஆதீனத்தை 14-ம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
10&ம் நாளான நேற்று, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றது. இதையடுத்து இரவு பட்டணப் பிரவேசம் நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது
என்று கூறி திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் போலீசார் கலைந்து போகச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு, திராவிடர் கழகத்தினர் உடன்படாததால் 85 பேரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆதீனத் திருமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வர சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ சிவிகாரோஹணம் செய்தருளி பட்டணப் பிரவேசம் எழுந்தருளினார்.
இதில் சூரியனார்கோவில் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






