என் மலர்
மதுரை
- முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.
- 9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார்.
மதுரை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின.
7 சுற்றுகளின் நிறைவில் அபி சித்தர் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் ஒரு காளையை அடக்கும் முயற்சியில் எதிர்பாராத விதமாக காவலதுறையினரின் வேனில் மோதி காயமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.
9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார். அஜய் 19 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திலும், ரஞ்சித் குமார் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.
- அண்ணன்-தங்கையை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்கள் கண்காணிப்பு காமிரா மூலம் சிக்கினர்.
- விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மதுரை
மதுரை சீமான் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பாண்டிராதா (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு தனது சகோதரர் நல்லமணிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பக்கத்து தெருவுக்கு சென்றார். பின்னர் அவர் தனியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அவர் சீமான் நகர், அம்மன்கோவில் தெரு சந்திப்பில் வந்தபோது, 4 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாண்டிராதா அணிந்திருந்த 1 செயினை பறிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சிய டைந்த அவர், சத்தம் போட்டார். இதனை கேட்டு அவரது சகோதரர் நல்லமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது மர்ம நபர்கள் பாண்டிராதா அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்ததுடன், நல்லமணி வைத்திருந்த செல்போனையும் பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி பாண்டிராதா மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் துப்பு துலங்கவில்லை. இதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் பாண்டிராதாவிடம் நகை பறித்தது சீமான் நகர் பாரதிபுரம் ராஜபாண்டி (25), நவீன்குமார் (20), முத்துப்பாண்டி (23), விஸ்வா (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் பறித்து சென்ற நகை மற்றும் செல்போனை மீட்டனர்.
விசாரணையில் கைதான 4 பேர் மீதும் மாநகராட்சி பகுதி போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
- எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
திருப்பரங்குன்றம்
எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் நடந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பாரி, இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம், எம்.ஆர்.குமார், பாலா, பாலமுருகன், சாக்கிலிப்பட்டி மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம் (வயது 43). இவர் டாஸ்மாக் கடையில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். பாலசுப்பிரமணியன் விளாச்சேரி, கலைஞர் நகரில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டனர். இதற்கு அவர் தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த 2 பேரும், பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு ரூ. 450 -ஐ பறித்து சென்றது.
இது தொடர்பாக பாலசுப்பிரமணியன், திருநகர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வளையப்பட்டி, மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீமைராஜா (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருநகர் பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.
மதுரை கே.புதூர் முத்துராமலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன்(26) இவர் தபால் தந்தி நகரில் உள்ள ஒயின் ஷாப்பில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
ராஜசேகரன் சிப்ஸ் கடை முன்பாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.900த்தை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜசேகரன், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பீ.பி.குளம் காந்திஜி தெரு, கோகுல்விஜய்(29), பி.பி.குளம் இந்திரா நகர், சுதாகரன்(45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களில் சுதாகரன் மீது போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன் மகன் நிதீஷ்குமார் (23). இவர் இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ பறித்துச் சென்றார். இது தொடர்பாக திடீர்நகர் போலீசில் நிதிஷ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28), ரெயில்வே ஊழியர். இவர் மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் நின்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இதற்கு பாலமுருகன் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 2,500-ஐ பறித்துச் சென்று விட்டார். இது தொடர்பாக பாலமுருகன், திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தக்காளி கணேசன் என்பவரை தேடி வருகின்றனர்.
- உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க.அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர்.
- இந்த சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.
மதுரை
தமிழக அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக நேற்று மதுரை வந்தார்.
பின்னர் மதுரை சத்திய சாய் நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரியும், தனது பெரியப்பாவுமான மு.க. அழகிரி இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து சால்வை அணி வித்து வாழ்த்து பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க. அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர். வாசலில் வந்து வரவேற்ற மு.க. அழகிரி உதயநிதியை இன்முகத்துடன் வரவேற்று தோளில் கையை போட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இதை தொடர்ந்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
காந்தி அழகிரியும் உதயநிதியை நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, காந்தி அழகிரி ஆகியோரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
பின்னர் மு.க.அழகிரி தன்னுடன் இருந்த ஆதரவாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மேற்கு மண்டல தலைவர் சின்னான் மற்றும் ஆதரவாளர்கள் உதயகுமார், எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, இசக்கி முத்து, கோபிநாதன் ஆகி யோர் உதயநிதி ஸ்டாலி னுக்கு சாலை அணிவித்த னர்.
பின்னர் வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
நான் அமைச்சரான பிறகு எனது பெரியப்பாவை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். அவரும் மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று வாழ்த்தியிருக்கிறார். நான் சிறுவயதில் இருந்தே எனது பெரியப்பாவுடன் பாசத்துடன் வளர்ந்தவன். அதே பாசத்தை எப்போதும் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து மு.க. அழகிரி கூறியதாவது-
உதயநிதியும் எனது மகன் தான். சிறுவயதில் இருந்தே அவன் என்னுடன் பாசமாக பழகுவான்.இப்போது அமைச்சராக ஆகி இருக்கிறான். எனவே என்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நானும் மனதார வாழ்த்தி உள்ளேன்.
எனது தம்பியும் முதல்-அமைச்சராக இருக்கிறார். எனது மகனும் (உதயநிதி) அமைச்சராக இருக்கிறார். இதைவிட எனக்கு என்ன வேண்டும்? நான் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நிருபர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேருவீர்களா? என்று மு.க.அழகிரியிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி இதுபற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
மு.க.அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர். விரைவில் மு.க.அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
- பாப்பாபட்டி அருகே பழமை வாய்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
- இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டிக்கு தாலுகா பாப்பாபட்டி அருகே உள்ள கிராமம் லிங்கப்பநாயக்கனூர். இந்த ஊருக்கு வடக்கில் நாகமலை தொடர் உள்ளது. இந்த மலையில் ஒரு குன்றின் மீது பரமசிவன் கோவில் உள்ளது.
இந்த கோவிலிக்கு செல்லும் வழித்தடத்தில் மலை அடிவாரத்தில் நடுகல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், பட்டி அருண் குமார், சோலை பாலு ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுகல் சுமார் 4½ அடி உயரத்திலும் சுமார் 3½ அடி அகலத்திலும் உள்ளது.
இந்த சிற்பத்தில் ஆண் மற்றும் பெண் உருவங்கள் காட்டப்பட்டுள்ளது .இதில் ஆணின் இடது கையில் வளரி, வளைத்தடியும், வலது கையில் வாளை உயர்த்திய நிலையிலும், அருகில் உள்ள பெண் சிற்பத்தின் இடது கையில் மலர் வைத்திருப்பது போலவும், இடது கை தொங்கிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளது.
இதில் ஆண் சிற்பத்தில் தலையின் இடது புறம் கொண்டையும், பெண் சிற்பத்தில் தலைக்கு மேலே கொண்டையும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.ஆண் மற்றும் பெண் சிற்பங்கள் மேல் ஆடையின்றி இடைக்கு கீழே ஆடையுடனும் நேர்த்தியான அணிகலன்களும் காணப்படுகிறது. இந்த சிற்பம் தோற்றத்தின் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
உசிலம்பட்டி பகுதியில் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட நடு கற்கள் வளரியுடன் கரு மாத்தூர், கோட்டை ப்பட்டி, கள்ளப்பட்டி போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கருமாத்தூர் அருகே உள்ள கோவிலாங்குளத்தில் இன்றளவும் அங்குள்ள பட்டவன் சுவாமி கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று கோவிலுக்கு வளரியை காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோல இங்குள்ள குலதெய்வ கோயில்களில் சாமி பெட்டிகளில் வளரி வைத்து வழிபடும் வழக்கம் இந்த பகுதியில் இன்றளவும் உள்ளது. இங்குள்ள மக்கள் வளரி என்ற ஆயுதத்துடன் நெருங்கிய மற்றும் நீண்ட உறவினை கொண்டுள்ளனர் என்பதனை அறிய முடிகிறது.
- மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த வீரர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி யில் மாடுபிடி வீரர்கள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை
பொங்கல் பண்டி கையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 15-ந்தேதி அவனியாபுரத்திலும் ,நேற்று (16 -ந் தேதி)பாலமேட்டிலும் நடந்தன.
இன்று (17-தேதி)அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி யில் மாடுபிடி வீரர்கள் உள்பட 31 பேர் படுகாயம் அடைந்தனர். பாலமேட்டில் நடந்த போட்டியில் 23 காளைகளை அடக்கி மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் முதலிடம் பெற்றார்.
அவர் காளைகள் முட்டி யதில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அவரதுகுடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற கருப்பையா (வயது 24) ராமசாமி(33), ராமச்சந்திரன் (22), திரு மலை சீனிவாசன், அபி லாஷ் (21), சிவராஜ்(25), பெருமாள்(27), பிரபு(20), சங்கர்(16), பழனி(37) உள்பட 12 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாடுபிடி வீரர்கள் உட்பட படுகாயம் அடைந்த 12 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- ஐகோர்ட்டு தீர்ப்பின்படி மதுரை வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
- இந்த பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை
கடந்த 2021-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளைப் பிடித்த மதுரை விராட்டிபத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த வீரர் யார்? என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கண்ணனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் சிறந்த வீரருக்கான கார் பரிசை, மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
காளைகளை வாடி வாசலில் திறந்து விட்டு, ஒரு வரலாற்றை உருவாக்கி, முதல் முதலாக அந்த விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் பெயரில் கார் பரிசு வழங்குகிற முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்த பெருமைக்கும், வரலாற்றுக்கும் சொந்தக்கரார் எடப்பாடி பழனிசாமி ஆவார்.
2021-ம் ஆண்டு வழங்குகிற முதல் பரிசு காரை வழங்குவதற்கு, கோர்ட்டில் வழக்கு இருந்த காரணத்தால் தொடர்ந்து பாதுகாத்து வைக்கப்பட்டது. கண்ணன் என்கிற அந்த காளை பிடிவீரர் சிறந்த வீரராக ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் மாடுபிடி வீரர் கண்ணனிடம் முதல் பரிசான கார் ஒப்படைக்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற வாடிவாசல் என்று சொன்னால் அது அலங்கா நல்லூர் வாடிவாசல் ஆகும். இந்த வாடிவாசலில் களம் காண்கிற அந்த காளைகளுக்கு மிகப்பெரிய சிறப்புகள் உண்டு. இந்த வாடிவாசலில் நடைபெறுகிற உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு ஒரு அரங்கத்துக்குள் அடக்கி விடுவார்களோ என்ற அச்சம் இன்றைக்கு இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்ல அலங்கா நல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கிற இடம் வனப்பகுதி ஒட்டி அரசு இடமாக அது இருக்கிறது. ஒரு கால்நடை பண்ணை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 66 ஏக்கரில் உள்ள அந்த இடத்தில் குளம் இருக்கிறது. நீர்நிலைகளில் எப்படி அமைக்க முடியும்? அதுபோல அரசு வேலைவாய்ப்புகளை விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்க நிர்ணயம் செய்யப்படும், முழுமையாக செயல்படுத்தும் போது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
விளையாட்டு துறையில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசுகளும், அரசு வேலையும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று பல வாக்குறுதிகள் விளையாட்டு வீரர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமைச்சராகி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகிறார். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதிஇளைஞர்களை ஏமாற்றாமல் ஏதாவது அறிவிப்பு கொடுப்பாரா? அப்படி கொடுத்தால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காளைகளை துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது.
- இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
மதுரை:
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது. தமிழர்களுடைய வீரத்தையும், கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிகட்டுப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகம் முழுவதும் இருந்து திரள்வார்கள்.
பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரியும் இந்த போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
- மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
- அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை சந்தித்துள்ளார்
மதுரை:
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். மு.க.அழகிரி தனது வீட்டு வாசலில் காத்திருந்து உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர்.
- 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
மதுரை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் போட்டி தொடங்கியது. முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்னர் போட்டிக்கான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று கெத்து காட்டிய காளைகளையும் பார்க்க முடிந்தது. சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் சோர்வடையாமல் நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றார். அவருக்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி 2ம் இடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கி பாலமேடு ராஜா மூன்றாம் பரிசை தட்டிச் சென்றார்.
இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை 2வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
- குறவன் குளம் கிராமத்தில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
- வெளி நாட்டு பயணிகள், கலைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இதனை கண்டு களிப்பதற்காக ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான மலேசிய தூதர் தலைமையில் கனடா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 134 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று மதுரை வந்தனர்.
மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் அவர்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தனர். அவர்களை மாவட்ட சுற்றுலா அதிகாரி பாலமுருகன் மாலை அணிவித்து வரவேற்றார். பின்பு அவர்கள் அனைவரும் பஸ்சில் அலங்காநல்லூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் குறவன்குளம் பகுதியில் மாவட்ட சுற்றுலா துறை சார்பில் நடந்த கிராமிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
அங்குள்ள கிராம மந்தையில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெளிநாட்டுப் பயணிகள் பொங்கல் வைக்கும் முறை குறித்து அங்குள்ள பெண்களிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். குறவன் குளம் கிராமத்தில் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
அப்போது வெளி நாட்டு பயணிகள், கலைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். இதனால் அங்கு பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகள் களை கட்டியது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். அலங்காநல்லூரில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டிலும் அவர்கள் பங்கேற்று பார்வையிடுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு, சுற்றுலா வழிகாட்டி பிரபு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






