என் மலர்
மதுரை
- சமதர்மத்தின் அடையாளமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசியதாவது:-
அ.தி.மு.க. பொன்விழா மாநாடு மதுரையில் சீரோடும் சிறப்போடும் எழுச்சியோடும் மகிழ்ச்சி யோடும் உற்சாகத்தோடும் நடைபெற்றது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை வைகை நதிக் கரையில் இலட்சோப லட்சம் தொண்டர்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்.நமது வருங்கால முதல்வர் எடப்பாடியார்.
சித்திரை திருவிழாவை போல மீண்டும் ஒரு சித்திரை திருவிழாவை மதுரை மண் இன்றைக்கு கண்டிருக்கிறது. தொண்டர்களை, ஏழை, எளிய மக்களை வாழ வைப்பதற்காக தன்னை அர்ப்பணித்த எடப்பாடி பழனிசாமியை வருக வருக என்று மதுரை மக்களின் சார்பாக வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். மதுரையே முதன்முதலாக உங்களால் தான் மனித தலைகளாக சங்கமித்தி ருக்கிறது.
உலக தலைவர் ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்கை உடைத்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்தார். அவர் அன்று ஆற்றிய உரை தான்அவரை அமெரிக்க அ.திபராக்கியது. அதுபோல நாட்டிலுள்ள முட்களை அகற்றி மலர்களை மலரச் செய்யும் மகத்தான தலைவராக எடப்பாடி யார் இன்றைக்கு நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறார்.
மீனாட்சி அம்மன் குடி கொண்டுள்ள இந்த மதுரை யில் எடப்பாடியார் சிறப் பான மாநாட்டை நடத்தி உள்ளார். தமிழகத்தில் மீண்டும் அவரை ஆட்சியில் அமர்த்துகிற சாட்சியாக இந்த மாநாடு அமையும். சம தர்மத்தின் அடையாளமாக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார் இன்றைக்கு மதுரை மண்ணில் திரண்டு இருக்கிற தொண்டர் படைகளை இந்த நாடே கண்டு வியந்துள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்று விட்டோம் எனவே இன்றைக்கு கழகக் கொடியை ஏற்றி வைத்த எடப்பாடியார் விரைவில் தமிழக முதல்வராக புனித ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றுவார். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் வந்தது முதல் பல்வேறு வகைகளில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமை பறிபோய் உள்ளது. அதனை மீட்டெடுக்கும் ஒரே சக்தியாக ,ஆற்றல் அரசராக எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில், மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார்.
- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை
மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இறுதியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நன்றி உரையாற்றினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதி இன்றி தவித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் விலையேற்றம், வரி சுமை ஆகியவற்றின் காரண மாக தி.மு.க. அரசு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த ஆட்சியின் கொடூர பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கழகத்தின் பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியை தான் மக்கள் சாமியாக நினைக்கிறார்கள். அதற்கு சாட்சியாக தான் இந்த மாநாட்டில் அலை கடலென மக்கள் வெள்ளம் திரண்டு வந்துள்ளது.
எனவே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் நெருங்கி விட்டது. தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி நமது எடப்பாடி யாரை தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஆக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது சிறுவன் பலியானார்.
- சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கரடிகள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி இவர்களுக்கு கவின் என்ற மூன்று வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத் தன்று 3 வயது மகன் கவினுடன் சுகந்தி தனது அண்ணன் சுரேசுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிந்துப்பட்டி போலீஸ்சரகம் பகுதியில் சென்றனர். அப்பொழுது சுரேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப் பொழுது கவின் தனது சித்தப்பாவிடம் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு திடீ ரென்று சாலையை கடக்க முயன்றான். அப்பொழுது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக கவின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்தி லேயே கவின் பரிதாபமாக இருந்தான் இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளி ஆசிரியை-அதிகாரி வீடுகளில் 40 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயோன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் சுப்புலாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
உடல்நலக்குறைவு காரணமாக விஜயலட்சுமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர்.
இதனால் கடந்த 10 நாட்களாக வீடு பூட்டி கிடந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்யைடித்து சென்றனர்.
இதே பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் குடியிருந்து வருகிறார். நேற்று கரிசல்காலாம் பட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று விட்டார். அவரது வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்து பணம், நகையை கொள்ளையடித்து சென்றனர்.
மாயோன் நகரை சேர்ந்தவர் சுந்தர். டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயமணி. கப்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொ றியாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று ஜெய மணி தனது குடும்பத்தி னருடன் வீட்டின் மாடி அறையில் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப் பட்டது.
மாயோன் நகரில் ஒரே கும்பல் அடுத்தடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மின்வாரிய அதிகாரி உள்ளிட்ட 3 வீடுகளில் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.
- சின்னக்கட்டளையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், சின்ன கட்டளை, மங்கள் ரேவ் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, ஆ.கல்லுப் பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூர், ராமநாதபுரம், கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, தாடையம்பட்டி, பாறைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, கோட்டைப்பட்டி, கண வாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்ம னம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டி பட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்து வார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தை 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான்.
- அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது என்றார் எடப்பாடி பழனிசாமி.
மதுரை:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:
தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. தான். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான்.
தொண்டன் உழைப்பால் உருவானது அ.தி.மு.க. அ.தி.மு.க.வின் தொண்டன் என்பதே பெருமைதான். அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது. நாட்டுக்கு நன்மை செய்யும் கட்சியாக உள்ளது.
எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
அ.தி.மு.க. ஆட்சியில், புயல் வேகத்தை விட வேகமாக செயல்பட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டோம். மக்களை கட்டிக்காத்த அரசு என விவசாயிகள் பாராட்டினார்கள். அ.தி.மு.க. ஆட்சியை பொற்கால ஆட்சி என மக்கள் பாராட்டினார்கள்.
மதுரை மண் ராசியான மண். மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும். இந்த மண்ணில் துவங்கியது அனைத்தும் வெற்றிதான். வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஏரி, குளங்கள் தூர்வாரி தண்ணீரை சேமித்தோம்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் விவசாயிகளை அ.தி.மு.க. தான் காத்தது. விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்தோம். தி.மு.க.வுக்கு பொய்தான் மூலதனம்.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது திமுக., தான். இதனால், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில், ஓட்டுகளை பெறுவதற்காக, அவர்களை ஏமாற்றி கச்சத்தீவை மீட்போம் என்ற பொய்யான செய்தியை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
நீட் தேர்வில் தி.மு.க. அரசு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி இன்று போராட்டம் நடத்துகிறார். 2010ம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். தி.மு.க.வை சேர்ந்த காந்தி செல்வன் இணை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. இது ஆவணம். மறைக்க முடியாது. இதை மறைத்து இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். எவ்வளவு ஏமாற்று வேலையை தி.மு.க. செய்கிறது.
2021 சட்டசபை பொதுத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி போன்றோர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நீட் ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என கூறினர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டாகியும் நீட் தேர்வு ரத்துக்கு என்ன முயற்சி எடுத்தீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். மாணவர்களை ஏமாற்றாதீர்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை தடுக்க போராடுவது அ.தி.மு.க. இவர்களாக கொண்டு வந்துவிட்டு அதை ரத்து செய்வதற்கு நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் நாடகமாடுகின்றனர் என தெரிவித்தார்.
மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது
- தொண்டர்களுக்காக புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு வகைகள் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்டது.
- தொண்டர்கள் பலர் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றதை காண முடிந்தது.
மதுரை:
மாநாட்டு திடலில் நேற்று இரவு முதல் தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. தொண்டர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் உணவை வாங்கி சென்றனர்.
தொண்டர்களுக்காக புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு வகைகள் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக தொண்டர்கள் வந்துகொண்டே இருந்தபோதும் உணவு பரிமாறும் குழுவினர் உணவுகளை பரிமாறிக்கொண்டே இருந்தனர். இந்த ஏற்பாடுகளை பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் உணவுகளை வாங்கி சென்று சாப்பிட்டனர்.
தொண்டர்கள் பலர் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றதை காண முடிந்தது. தொடர்ந்து சமையல் பணிகளும், உணவு பரிமாறும் பணிகளும் நடந்து கொண்டே இருந்தது.
- மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் இருந்து இன்று காலையில் ஏராளமான தொண்டர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு வந்தனர்.
- மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரை:
மதுரை ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் பிரமாண்டமாக நடந்த அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு அதிகாலையில் இருந்து தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன.
மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் இருந்து இன்று காலையில் ஏராளமான தொண்டர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநாட்டு பந்தலில் அமர குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால், அந்த நேரத்திற்கு தகுந்தவாறும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்க வேண்டும் என்பதாலும் காலையில் ஏராளமான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். இதனால் ரிங் ரோடு திருமங்கலம் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கம்பம், தேனி, கோவை, கிருஷ்aணகிரி, சேலம், நாகர்கோவில், நெல்லை, சங்கரன்கோவில், ராஜபாளையம் போன்ற ஊர்களில் இருந்து வந்த வாகனங்கள் ஒரே நேரத்தில் திருமங்கலம், மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் அணிவகுத்து சென்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து வாகனங்கள் வந்துகொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு வாகனங்கள் நின்று, நின்று சென்றன. வாகனங்களின் அணிவகுப்பை பார்த்து உற்சாகம் அடைந்த தொண்டர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களில் இருந்து இறங்கி நின்று செல்பி எடுத்தும், ரீல்ஸ் செய்தும் மகிழ்ந்தனர்.
மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இன்றும் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால் வாகனங்களை காத்திருந்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரிங் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் கருணாநிதிக்கு எதிராக பேசினார்.
- அ.தி.மு.க. ஆரம்பிப்பதற்கு திருக்கழுக்குன்றம் கூட்டம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
மதுரை:
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் கருணாநிதிக்கு எதிராக பேசினார். இதுவே அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அக்டோபர் மாதம் 8-ந்தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு அவர் பேசியது தான் புயலைக் கிளப்பியது. அ.தி.மு.க. ஆரம்பிப்பதற்கு திருக்கழுக்குன்றம் கூட்டம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
இதன் சென்டிமெண்டாக இன்று மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் ஏற்றப்பட்ட அ.தி.மு.க. கொடி மற்றும் கொடிக்கம்பம் திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து அ.தி.மு.க. கொடி சென்றிருப்பது, தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
- மாலையில் 10 நிமிடம் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று காலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியினர் குவிந்துள்ளனர்.
அ.தி.மு.க. மாநில மாநாட்டை இதுவரை நடத்திடாத வகையில் மிக பிரமாண்டமாகவும், எழுச்சியோடும் நடத்த கட்சி நிர்வாகிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் தொடங்கி, மாநாட்டுக்கு கட்சியினரை அழைத்து வருவது வரை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்கினார்.
மாநாட்டின் தொடக்கமாக திடலின் நுழைவு வாயில் பகுதியில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை குறிக்கும் வகையில் 51 அடி உயரத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கொடியேற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி காலை 8.00 மணிக்கு அவர் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் இருந்து புறப்பட்டார்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்கள் அவரை கும்பிட்டவாறு உற்சாகமாக வரவேற்றனர். அதனை புன்னகையுடன் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சுமார் 45 நிமிட பயணத்துக்கு பிறகு அவர் மாநாட்டு திடலை வந்தடைந்தார்.
காலை 8.45 மணிக்கு கட்சியின் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு பூ மழை பொழிந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் அருகே மைதானத்தில் நேற்று மாலை ஹெலிகாப்டர் வந்து நிறுத்தப்பட்டது.
அதன்படி இன்று காலை மாநாட்டு திடலில் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றியபோது சுமார் 10 நிமிடங்கள் வரை வானத்தில் வட்டமடித்த ஹெலிகாப்டர் மழை சாரல் போன்று பூக்களை தூவியது.
இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். அதேபோல், மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாலையிலும் 10 நிமிடம் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. கரை வேட்டியுடன் தொண்டர்கள் திரண்டதால் மாநாட்டு திடல் முழுவதுமே பளிச்சென காணப்பட்டது.
- அ.தி.மு.க.வினர் வாகனங்களில் சாரை சாரையாக வலையங்குளம் நோக்கி சென்றனர்.
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா மாநாடு இன்று எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டனர். காலை 7 மணி முதலே பாரம்பரிய வெள்ளை வேட்டி சட்டையில் அ.தி.மு.க. மாநாட்டு திடலில் தொண்டர்கள் குவிந்தனர்.
அ.தி.மு.க. கரை வேட்டியுடன் தொண்டர்கள் திரண்டதால் மாநாட்டு திடல் முழுவதுமே பளிச்சென காணப்பட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு கொடியேற்றிய இடத்தில் தலைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு தொண்டர்கள் நின்றிருந்தனர்.
அ.தி.மு.க. கரை வைத்த சேலை அணிந்த மகளிர் அணியினரும் மாநாட்டு திடலில் திரளாக குழுமியிருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்தாலும் கரை வைத்த வேட்டி அணிந்து வருவதிலேயே தொண்டர்கள் ஆர்வம் காட்டினார்.
மாநாட்டு பந்தலில் தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் அதிகாலையிலேயே ஓட்டல்கள், டீ கடைகளை அ.தி.மு.க.வினர் முழுவதுமாக ஆக்கிரமித்தனர். அனைத்துக் கடைகளிலும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக பேசியபடி சாலையில் செல்வோருக்கு இரட்டை விரலை காட்டியபடி கெத்து காட்டியபடி இருந்தனர்.
மதுரை எங்கும் அ.தி.மு.க.வினரின் கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்களே காணப்பட்டன. பல இடங்களில் நீண்ட வரிசையில் அ.தி.மு.க.வினரின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ஆரப்பாளையம், காளவாசல், சிம்மக்கல், தெற்கு வாசல், கீழவாசல், கோரிப்பாளையம், அவுட்போஸ்ட், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் வாகனங்களில் சாரை சாரையாக வலையங்குளம் நோக்கி சென்றனர்.
மேலும் ரிங் ரோடு பகுதியில் எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க.வினரே காணப்பட்டனர். கம்பம், தேனி பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து திருமங்கலம் நான்கு வழிச்சாலை வழியாக வலையங்குளத்திற்கு திருப்பி விடப்பட்டதால் அ.தி.மு.க. கொடி மற்றும் மாநாட்டு ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. வாகனங்களில் சென்ற தொண்டர்கள் உற்சாகமாக இரட்டை விரலை அசைத்துக் காட்டியபடி சென்றனர். இதனால் மதுரை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் முழுவதிலும் அ.தி.மு.க. கரை வேட்டி அணிந்த தொண்டர்களால் உற்சாகம் கரை புரண்டது.
- மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- கூலி வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மாநாட்டில் குவிந்துள்ளனர்.
மதுரை:
மதுரை வலையங்குளம் பகுதியில் எழுச்சியோடு நடைபெற்று வரும் அ.தி.மு.க. மாநாடு அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுநோக்க செய்துள்ளது. இப்படியொரு மாநாட்டை அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் முதல் மூத்த நிர்வாகிகள் வரை யாரும் பார்த்ததில்லை என்று கூறும் அளவிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டிற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வருவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்திருந்தனர். அதன்படி நேற்று மாலை முதல் இன்று காலை வரை பஸ், வேன்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி, டி.குன்னத்தூர், பேரையூர், கள்ளிக்குடி, செக்கானூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, எழுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு மாநாட்டுக்கு திரண்டு வந்தனர்.
இதனால் மேற்கண்ட கிராமங்கள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூலி வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மாநாட்டில் குவிந்துள்ளனர். விடிய விடிய பரபரப்பாக காணப்பட்ட சாலைகள் இன்று காலை மேற்கண்ட இடங்களில் காலியாக கிடந்தது.






