என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மலையாண்டஅள்ளி தொம்மக்கல் முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம்.

    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளி தொம்மக்கல் முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேளதாளத்துடன் புனிதநீர் ஊர்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனிதநீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மலையாண்டஅள்ளி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 5.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,  

    ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டிற்கு உட்பட்ட அந்திவாடி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஓசூர் மாநகராட்சி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுசுவர் மற்றும் பல்நோக்கு கூடம் கட்டுப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    இதில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு , சமைய லறைக் கூடம், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் பல்நோக்கு கூடம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார்.மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
    • பா.ஜ.க தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி,  

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரது பேச்சு இந்தியா முழுவதும் கடும் சர்ச்சைக்குள்ளானது. பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், தி.மு.க.,வின் தோழமைக் கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அதே போல், சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். எனவே அவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னரிடம் புகார் மனு அளித்துள்ளார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வினர் ஹிந்து சமய அறநிலை யத்துறை அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்–டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி, கிருஷ்ண–கிரியில், ராயக்கோட்டை சாலையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவபிரகாஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்த குவிந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் துணை போலீஸ் சூப்பி ரண்டு தமிழரசி தலைமையி லான போலீசார், ஆர்ப்பாட்–டத்திற்கு அனுமதி இல்லை யெனக் கூறி அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர்.

    ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏன் அனுமதி இல்லை எனக் கூறிய பா.ஜ.க-வினர் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சிலர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி னர். இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கலைகோபி, பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முருகேசன், நகர தலைவர் சங்கர் உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • முதல்கால ஹோம பூஜைகள், தீபாரா தனை ஆகியவை நடந்தன.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரியில், சென்னை சாலை உள்ள வெள்ளக்குட்டையில் அமைந்துள்ள நாகம்மன் கோவில் மஹா கும்பா பிஷேகம் நடந்தது. இதை யொட்டி கும்ப அலங்காரம், வாஸ்து சாந்தி, முதல்கால ஹோம பூஜைகள், தீபாரா தனை ஆகியவை நடந்தன.

    நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அம்மனுக்கு 48 பால் குடங்களை ஊர்வ லமாக கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    10 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி, சரஸ்வதி ஹோமம், நாகத்தம்மன் மூலமந்திர ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தன. 11 மணிக்கு கலசங்கள் புறப்ப டுதல் மற்றும் அம்மனுக்கு மஹா அபிஷேகம், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல் ஆகிய வை நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏரளமான பக்தர் கள் கலந்து கொண்டனர். அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.

    • சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
    • வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.

    பலத்த மழையின் காரணமாக ஓசூர் பஸ் நிலையம், பாகலூர் ரோடு சர்க்கிள், ஜி.ஆர்.டி. சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. இந்த நிலையில், ஓசூர் ரெயில் நிலையம் அருகில், ரெயில்வே கீழ் பாதை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனங்களை இயக்கிச் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் நீண்ட நேரம், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து இரவு முழுவதும் மழை, பரவலாக பெய்தது.இதையடுத்து, ஓசூரில் 20.2 மி.மீ அளவு மழை பதிவானது.

    • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பேச்சுப் போட்டி நாளை நடைபெறுகிறது.
    • பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கு நாளை கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    கட்டுரை போட்டிக்கான தலைப்பு அண்ணாவின் பொது வாழ்வும் தமிழும், பேச்சுப் போட்டிக்கான தலைப்பு பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அன்று பரிசளிப்புகள் வழங்கப்படும்.

    இவ்வாறு கல்லூரி முதல்வர் தனபால் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • கிருஷ்ணகிரியில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 1,052 பேர் எழுதினர்.
    • தேர்வு மையத்தில் கலெக்டர் சரயு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் மேற்பார்வையிட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் நேற்று வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் நடந்தது.

    இத்தேர்வினை எழுத மொத்தம் 1,226 பேர் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். நேற்று இத்தேர்வை ஆயிரத்து 52 பேர் எழுதினர். 174 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    இத்தேர்வை கலெக்டர் சரயு தலைமையில் வருவாய்த்துறையினர், தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) சுகன்யா, மாவட்ட முதன் மையக் கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பறக்கும்படையினர் மேற்பார்வையிட்டனர். இதையொட்டி மூன்று தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தேர்வர்களைத் தவிர மற்ற யாரும் தேர்வு மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

    • கிட்டம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், கோ பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், கங்க பூஜை, முதல்கால யாக பூஜை ஆகியவை நடந்தன.

    நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜை, சுவாமி சிலைகள் நகர்வலம், மூன்றாம் கால யாக பூஜை, விமான கோபுரத்திற்கு கலசம் வைத்தல், தானியங்கள் நிரப்புதல் ஆகியவை நடந்தன.

    நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, கடம்பு றப்பாடு, கலசம் கோவிலுக்கு வருதல் மற்றும் காலை 9.30 மணிக்கு மஹா சக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தன.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன.

    இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

    • கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • பயிற்சி முகாமில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கி ணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணி மேகலை, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மிஷன் இயற்கை கல்வி அலுவலர் சுமிக்ஷா, பசுமைத் தோழர் பிருந்தா, சமூக வன விரிவாக்க அலுவலர் சக்திவேல், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி அலுவலர் வினோதினி மறறும் ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில், தற்போதைய சூழ்நிலையில் காடுகள் சுருங்கி வருவது குறித்தும், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு நல்ல உகந்த சூழ்நிலைக்கான பூமிமை விட்டுச்செல்வது நமது தலையாய கடமை என்றும், ஒவ்வொரு நாளும் பிளாஸ் டிக் பைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ் சப்பை பயன்பாடு குறித்து எடுத்து கூறினார்.

    பயிற்சியின் முடிவில், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கணைப்பாளர்களுக்கு கிருஷ்ணகிரி தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பாக மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த பயிற்சியினை பள்ளி யின் தலைமையாசிரியர் மகேந்திரன் ஒருங்கிணைத் தார். பயிற்சிக்கான ஏற் பாடுகளை கிருஷ்ண கிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகிரி மகேந்திரன், ஓசூர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேகம் விழாவில் தலைமேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்சபள்ளி கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமிக்கு புதிதாக விக்கிரகமும், ஆலயமும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி முதல் கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதற்கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை வேதபாராயணம், மற்றும் மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜை கோ பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட கோவிலில் மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஓதி, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்ல குமார் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் தலைமேல் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

    • சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சேகர் (வயது20). தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் முத்தப்பா மகன் மல்லேஷ் (32). கட்டிட மேஸ்திரி.

    இந்த நிலையில் சானபள்ளியில் நடந்த ஒரு காத்துகுத்தும் நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு மல்லேஷ், சேகரிடம் மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறினார்.

    அதற்கு சேகர் வாங்கி வர மறுத்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் அந்த தகராறு கைகலப்பாக மாறியதில், சேகரை, மல்லேஷ் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவர் ஆத்திரத்தில் அருகில் இருந்த பீர்பாட்டிலால் சேகரை தாக்கினார்.

    இதில் பலத்த காயமடைந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பகுதியில் சிறிது பதட்டம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 6 யானைகள் இன்று காலை தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டபள்ளி பகுதியில் உணவு தேடி வந்தது.
    • யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன. அந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வருகின்றன.

    அதில் 6 யானைகள் இன்று காலை தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டபள்ளி பகுதியில் உணவு தேடி வந்தது. அந்தயானைகள் அதே பகுதியில் உள்ள கவுரம்மா ஏரிக்கு வந்தன. அப்போது அந்த யானைகள் ஏரிக்குள் இறங்கி ஆனந்தமாக குளித்தன. இதனை அந்த பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகினர்.

    இதுகுறித்து பொது மக்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனசரகர் மற்றும் வனஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கவுரம்மா ஏரி பகுதிக்கு விரைந்து வந்து, 6 யானைகளையும் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனத்துறையினரிடம் கிராம மக்கள் கூறுகையில், இந்த யானைகளை பகல் நேரத்தில் விரட்டியடித்தால், விவசாய நிலங்களுக்குள் பயிர்களை நாசம் செய்திடும். மேலும், வீடுகளுக்குள் புகுந்தால் பொதுமக்கள் அச்சமடைவார்கள். எனவே, இரவு நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என்றனர்.

    இதனால் வனத்துறையினர் யானைகள் ஊருக்கு புகுந்து விடமால் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    மேலும், வனத்துறையினர் கிராம பகுதிகளில் ரோந்து சென்று ஒலிப் பெருக்கியில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தப்படியே யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ×