என் மலர்
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வனப் பகுதிகளில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் இடப்பெயர்ச்சியாகி முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் கூட்டம் பல குழக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளில் சென்று வருகின்றன. ஓசூர், சானமாவு, ஊடேதுர்க்கம், தேனிக்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அய்யூர் போன்ற பகுதிகளில் பல குழுக்களாக முகாமிட்டு இரவு நேரங்களில் விவசாய பயிர்களான ராகி, காய்கறி, கரும்புகளை காலால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. அதேநேரத்தில் பகல் நேரத்தில் வனப் பகுதிக்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொள்கின்றன.
இந்த நிலையில் நேற்று சானமாவு காட்டில் இருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் நாகமங்கலம் செல்லும் சாலையை கடந்து சென்றன.
இதனால் அந்த வழியாக சென்ற லாரிகள், பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், மற்றும் நடந்து செல்பவர்களும் அப்படியே நின்று விட்டனர். அப்போது யானைகள் கூட்டம் புழுதியை கிளம்பியப்படி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இடைவெளி விட்டு கடந்து சென்றன.
இதை அப்பகுதி மக்கள், செல்போனில் வீடியோ எடுத்தனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஆங்காங்கே தனித்தனி குழுக்களாக முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் யானைகளை கர்நாடக மாநில வனப் பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சி செய்து வருகி றார்கள்.
இதற்கிடையே யானைகள் கூட்டம் திடீர் திடீரென வருவதும், போவதுமாக இருந்து வருவதால் கிராம மக்கள், மற்றும் விவசாயிகள் பீதியில் இருந்து வருகின்றனர்.
ஓசூர்:
இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளையே மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி, சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த 6 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் இங்கிலாந்து இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஓசூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த 42 வயது ஆண், 40 வயதான அவரது மனைவி, 10 வயது மகன், 6 வயது மகள் என 4 பேர் நேற்றுமுன்தினம் லண்டனில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஓசூர் வந்தனர்.
இதையறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். லண்டனில் கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்கள் திரும்பியதால் நேற்று அவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதேபோல் ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த 30 வயது ஆண், இங்கிலாந்தில் இருந்து கடந்த 19-ந் தேதி திரும்பினார். அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனை செய்திருந்ததால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
மேலும் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய காவேரிப்பட்டணத்தை சேர்ந்த 27 வயது ஆண், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:-
இங்கிலாந்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 6 பேருக்கும் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. இருப்பினும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
வெளிநாட்டில் இருந்து பயணி வந்தால் கொரோனா தொற்று பரிசோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவர். பிறகு நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. 3-வது கட்டமாக சொந்த ஊரில் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தேன்கனிக்கோட்டை:
கர்நாடக மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள காப்புக்காட்டுக்குள் இடம் பெயர்ந்தன.
இந்த யானைகள் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் தனித்தனி குழுவாக பிரிந்து தொடர்ந்து விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சானமாவு, தளி மற்றும் அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு அங்குள்ள பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அந்த 30 யானைகள் கூட்டமாக நேற்று மதியம் ஓசூர் அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் யானைகள் முகாமிட்டு இருந்தது. இவற்றில் சில யானைகள் மட்டும் அங்கு இருந்த வாழைகள், மற்றும் ராகி பயிர்களை நாசம் செய்தன.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் முயன்றனர். ஆனால் அந்த யானைகள் கூட்டமாக நின்று காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே நின்றது.
இதையடுத்து முகாமிட்டுள்ள அந்த யானைகள் மெதுவாக தைலமரத்தோப்பு பகுதிக்கு நள்ளிரவு சென்றது. அங்கு முகாமிட்டுள்ள இருந்த 30 யானைகளை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அஞ்சலகிரி, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
மேலும் கிராம மக்கள் வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கால் நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப காப்புக்காட்டுக்கு விவசாயிகள் வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.






