என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கெலமங்கலம் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வெள்ளிசந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வரகானப்பள்ளி குமார் (வயது 39), யு.கொத்தப்பள்ளி நாகராஜ் (63), நீலகிரி சஞ்சீவப்பா (58) உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,130 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல சூதாடியதாக சின்ன நாகதுணையை சேர்ந்த நாகராஜ் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.
    வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் பகுதியில் வேப்பனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனையிட்டபோது போலீசார் அங்கு தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சியம்மாள் (வயது 60), பசவராஜ் (42) ஆகியோர் தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு மாதமாக வேப்பனப்பள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கஞ்சா மீண்டும் தமிழகத்திற்கு கடத்தி வருவது குறித்து தீவிர விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    கல்லாவி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாயக்கனூர் புதூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). விவசாயி. இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் பிரிந்து வாழ்ந்த அவர்களுக்குள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விவகாரத்து ஆனது.

    இதனால் மனமுடைந்த பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆந்தர மாநிலம் இட்சப்புரா அருகே உள்ள அரக்கபத்ரா கிராமத்தை சேர்ந்தவர் குஜிவேல் (22). இவர் ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கந்திகுப்பம் அருகே உள்ள செந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் முரளி (34). லாரி டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக முரளி விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முரளி இறந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை போலீசார் தூர்வாசனூர் முனியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய குட்டூர் சிலம்பரசன் (வயது 29), தூர்வாசனூர் பைரப்பன் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதே போல பர்கூர் போலீசார் கீழ்வெங்கடாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரை சேர்ந்த ஜெயவேல் (40), காளியப்பன் (42), சரவணன் (45) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டனர். 46 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41 ஆயிரத்து 686 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 41 ஆயிரத்து 93 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 267 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக உள்ளது.
    ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளியில் தனியார் கம்பெனி சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
    மத்திகிரி:

    ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளியில் தனியார் கம்பெனி சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதற்கு பூனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சாவித்திரியம்மா பைரப்பா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் என்.மஞ்சுநாதப்பா முன்னிலை வகித்தார். இதில் பூனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
    ஓசூரில் ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுனிதா (வயது 42). இவர் தும்மனப்பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை, ஓசூர்-பாகலூர் சாலையில், ஐ.டி. பார்க் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்தார். அப்போது சுமார் 35 வயதுள்ள நபர், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து சுனிதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்து சுனிதா கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடும்ப தகராறில் 3 மருமகள்களும் பிரிந்து சென்றதால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகனை கொலை செய்து, உடலை எரித்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள மேல்னுக்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 45). விவசாயி. இவருடைய மகன் லோகேஷ்குமார் (26). இவருக்கு 3 மனைவிகள். முதல் 2 மனைவிகள் குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்து சென்று விட்டனர். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோகேஷ்குமார் கிருஷ்ணகிரி அருகே உள்ள அமனேரி கிராமத்தை சேர்ந்த கொடியா (24) என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    லோகேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தனது மனைவி கொடியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட தகராறு காரணமாக, கொடியா கோபித்து கொண்டு, குழந்தையுடன் அமனேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கொடியா பிரிந்து சென்றதில் இருந்து லோகேஷ்குமாருக்கும், தந்தை ராஜிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது ராஜி, உனது மது பழக்கத்தால் தான் 3 மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர் என்று கூறி அவரை திட்டியுள்ளார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி அமனேரிக்கு சென்று கொடியாவை லோகேஷ்குமார் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. மேலும் குழந்தையையும் அவருடன் அனுப்ப மறுத்து விட்டார். பின்னர் அன்று இரவு அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ராஜி ஆத்திரமடைந்தார். மேலும், மனதை கல்லாக்கி கொண்டு மகனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி மதுபாட்டிலை வாங்கி வந்து, அதில் விஷத்தை கலந்தார். பின்னர் விஷம் கலக்கப்பட்ட மதுவை லோகேஷ்குமாரிடம் கொடுத்து, இந்த மதுவை குடித்து விட்டு வந்து சாப்பிட்டு படு, விடிந்தவுடன் பிரச்சினையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

    லோகேஷ்குமாரும் மதுவில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல் அதை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து பலியானார். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க ராஜி மகனின் உடலை அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு எடுத்து சென்று, அங்கு தீ மூட்டி எரித்தார்.

    மேலும், கிராமத்தை சேர்ந்தவர்களிடம் தனது மகனை காணவில்லை என்று தெரிவித்தார். இதனிடையே அக்கம்பக்கத்தினர் லோகேஷ்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என்று பரவலாக பேச ஆரம்பித்தனர். மேலும் இதுதொடர்பாக ராயக்கோட்டை போலீசாருக்கும் தகவல் கிடைக்கவே, அவர்களும் ரகசியமாக விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

    இதனை அறிந்த ராஜி திடீரென தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் எப்படியும் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணிய அவர், நேற்று சூளகுண்டா கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேலிடம் மகனை கொலை செய்து உடலை எரித்ததை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அவரை ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் ராஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி பீட்டர் உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மகனுக்கு மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை தந்தையே எரித்த சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போச்சம்பள்ளி அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவியை கம்பியால் அடித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 56). இவர் 1986-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி மாது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக முதல் மனைவி மாது, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்திரா காந்தி (வயது 40) என்பவரை மகேஸ்வரன் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு இனிதா (20) என்ற மகளும், சுந்தரேசன் (18) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அன்று இரவு இந்திரா காந்திக்கும், கணவர் மகேஸ்வரனுக்கும் குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரன், அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து இந்திரா காந்தி தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திரா காந்தியை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இந்திரா காந்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மகேஸ்வரன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தருமபுரி அருகே உள்ள நார்த்தம்பட்டி என்ற இடத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

    2-வது மனைவியை முன்னாள் போலீஸ்காரர் அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆன்லைன் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து 2 வாலிபர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறித்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    ஓரினச்சேர்க்கைக்கு உலகில் பல நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி இருந்தும் அதனை நமது கலாச்சாரத்திற்கு எதிராகவே மக்கள் பார்த்து வருகின்றனர். இருந்த போதிலும் ஆன்லைனில் ஓரினச்சேர்க்கைக்கு பல அப்ளிகேசன் தொடங்கப்பட்டு அதன் வாயிலாக ஓரினச்சேர்க்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது துணைகளை தேடி சந்தித்து வருகின்றனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆன்லைனில் செல்போன் அப்ளிகேசன் வழியாக அருகே உள்ளவர்களை தொடர்பு கொண்டு இணைந்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ஓசூரை சேர்ந்த 2 வாலிபர்கள் தங்களது செல்போனில் உள்ள கிரின்ட்ர் கே சாட் என்ற ஒரு அப்ளிகேசன் வழியாக துணை ஓரினச்சேர்க்கையாளர்களை ஆன்லைனில் தனித்தனியாக தொடர்பு கொண்டனர். அப்போது அவர்களை தொடர்பு கொண்ட, மறுமுனை நபர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

    அதனை நம்பி இந்த வாலிபர்களும் தனித்தனியாக அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர்.

    அப்போது வாலிபர்களை பிடித்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம், குடும்பத்தாரிடம் தெரிவித்து விடுவோம் என மிரட்டி, அச்சுறுத்தி அவர்களிடம் பணம் பறித்துள்ளனர்.

    மேலும் அவ்வப்போது நாங்கள் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

    பின்னர், பாதிக்கப்பட்ட வாலிபர்கள் இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலம் சர்ஜாபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 33) சுனில் (28) மற்றும் ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    குட்கா கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து வந்த வேனை போலீசார் நிறுத்தியபோது நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த கந்திகுப்பம் போலீசார் பின் தொடர்ந்து சென்ற போது அதில் வந்த நபர்கள் வேனை மேல்பூங்குருத்தி வனப்பகுதியில் நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் வேனில் குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வனப்பகுதியில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலம் காஞ்சிபட் பகுதியை சேர்ந்த சோகின் (வயது33), ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முஸ்தாக் (36), ஜாகுல் (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 41 ஆயிரத்து 612 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று 30 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 967 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 321 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது.
    ×