என் மலர்
கரூர்
- கரூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 70 மரக்கன்றுகள் நடப்பட்டன
கரூர்,
கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா நடத்தியது. இவ்விழாவினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அனைத்து நீதிபதிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர் சரவணன், தமிழ்வாணன், செயலர், பார் அசோசியேசன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மொத்தம் 500 மரக்கன்றுகளில் 70 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. மீதமுள்ள மரக்கன்றுகள் இம்மாதத்திற்குள் நட்டு வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.
- கரூர் மாநகர பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது
- பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
கரூர்,
கரூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெயில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்போது 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டியது. பின்னர் சில நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பின்னர் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. சில நாட்களில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இதனால் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் மழை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. பின்னர் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வாட்டி வதைத்தது. 106.4 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் கடந்த 29-ந்தேதி அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தது. பின்னர் கடந்த 1-ந்தேதி கரூரில் கனமழை பெய்தது. அதன்பின்னரும் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே கரூரில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. பின்னர் மாலை 6 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு காற்றுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. அவ்வப்போது இடி இடித்தது. இந்த மழையானது கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்தது. இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காண முடிந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த திடீர் மழையால் கரூரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கரூரில் ஆதார் சேவை-தபால் சேமிப்பு கணக்கு முகாம் நடைபெறுகிறது
- நாளை முதல் வருகின்ற 20-ந்தேதி வரை நடைபெறும்
கரூர்,
கரூர் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கரூர் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட மின்னவேலி (கோவில்பட்டி-மணப்பாறை), கோடந்தூர் (தென்னிலை மேற்கு), வளையல்காரன்புதூர் (ரெங்கநாதபுரம்), கூடலூர் (கூடலூர் மேற்கு), வேளாண்செட்டியூர் (தெத்துப்பட்டி), முனையனூர் (சித்தலவாய்), வேலாம்பூண்டி, நெய்தலூர் தெற்கு (நெய்தலூர்), பொறத்தாகுடி (பழையகோட்டை), சுக்காலியூர் (கருப்பம்பாளையம்) ஆகிய கிராமங்களில் கிராம பஞ்சாயத்து தலைவரின் உதவியுடன் அஞ்சல் துறையின் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த முகாம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தபால் சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மகளிருக்காக மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மகளிர் மேன்மை திட்டம் (அதிக வட்டி விகிதம் கொண்ட 2 வருட சேமிப்பு பத்திரம்), ஆதார் சேவைகள் (புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல்), தபால் ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் மற்றும் தபால் துறையின் மூலம் வழங்கக்கூடிய இதர சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.இந்த கிராமங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- கரூர் மாவட்டத்தில் குடிநீர் சீராக வழங்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
- கரூர் கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தல்
கரூர்,
கரூர் மாவட்ட துறை சார்ந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் பேசும் போது, கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் அளிப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளும் போதும், மின் வாரிய பணியாளர்கள் மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யும் போதும், கண்ணாடி இலை கேபிள் அமைக்கும் பணி மேற் கொள்ளும் போது சாலை யோரங்களில் மற்றும் பிற இடங்களில் குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகள் உள்ளனவா என்பதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் உறுதி செய்து சேதப்படுத்தாமல் பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியின் போது ஏற்படும் சேதங்களை அந்த துறையினரே உடனடியாக சரி செய்து கொடுக்க நட டிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அன்புமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லலிதா, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கரூர் பகுதிகளில் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்
கரூர் :
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பு விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்றனர்.
தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெல்லம் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,290-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,370 க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,260க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220க்கும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- நொய்யல் அருகே முனியப்பசாமி கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை திரளான பக்தர்கள் சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக சேமங்கி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புனிதநீருடன் ஊர்வலமாக முனியப்ப சாமி கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் முனியப்பசாமி கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், இரவு 7 மணிக்கு மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடந்தது.நேற்று கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. மதியம் முனியப்பசாமிக்கு அசைவ படையல் போடப்பட்டு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கரூர் பஸ் நிலையத்தில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் விரைந்து கட்டப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- கரூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாநகரம் ஜவுளி ஏற்றுமதி, பஸ்கூண்டு கட்டும் தொழில், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் தினமும் வேலை நிமித்தமாக பலர் கரூர் நகருக்குள் வந்து செல்கின்றனர். மேலும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், திருச்சி, ஈரோடு, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பஸ்கள் மூலமாக கரூருக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் கரூர் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 1987-ம் ஆண்டிற்கு முன்பு தற்போது கரூர் உழவர் சந்தை இருக்கும் இடத்தில் கரூர் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட இட நெருக்கடியை கடந்த 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் அங்கிருந்து தற்போது இயங்கி வரும் கரூர் பஸ் நிலையத்திற்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், கோவை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது.
நகர பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுவதால் நாளுக்கு நாள் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து சென்றது. இதில் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள், பயணிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் திருமாநிலையூர் பகுதியில் கரூர் புதிய பஸ் நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கரூர் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் உள்ள கட்டிடப் பகுதிகள் பழுதடைந்து மேல் கூரைகள் அவ்வப்போது இடிந்து விழுந்து வந்தது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் அப்பகுதியில் இருந்த 22-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டு அந்த பகுதி முழுவதும் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை அப்பகுதியில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கரூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் சிக்கி தவித்து வருகின்றனர். முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலர் தற்போது வெயில் காலம் என்பதால் அங்கு நிற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு தற்போது கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே பயணிகளின் நலன் கருதி இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டி பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இட வசதி செய்து தர வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது செயல்பட்டு வரும் கரூர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த வணிக வளாகத்தில் மேல் கூரைகள் பழுதடைந்து அவ்வப்போது இடிந்து விழுந்தது. இதையடுத்து புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக 6 மாதங்களுக்கு முன்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு ரூ.8 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் ெதாடங்கப்படும், என்றார்.
- லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யபட்டார்
- அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர்,
பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள டீக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்த அசோக் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- இடையே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்
- கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கரூர்,
குளித்தலை-லாலாபேட்டை ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, பிணமாக கிடந்தவர் யார்? அவர் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கரூர் :
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் அருகே தளவாபாைளத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- நொய்யல், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது
கரூர் :
கரூர் கோட்டத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர், நொய்யல் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கோவிலூர், தடாகோவில், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- கரூர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதனை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
கரூர்:
நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் பகுதியை ேசர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு கீதா (26), சந்தியா (24) என்ற மகள்கள் உள்ளனர். இதில், கீதா பி.இ. பட்டதாரி ஆவார். சந்தியா பேஷன் டெக்னாலஜி டிசைனராக உள்ளார். கரூர் மாவட்டம் தும்பிவாடியை சேர்ந்த வேலவன் (30) என்பவருக்கும், கீதாவிற்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளார். இந்த தம்பதிக்கு சிவதர்ஷிபா என்ற 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கீதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் புன்னம் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீதா தூக்குப்போட்டு கொண்டார்.இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் கீதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கீதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து, தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கீதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கரூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.






