என் மலர்
கரூர்
- சாலை விபத்தில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
கரூர் :
வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 25). நாமக்கல் காவேட்டிபட்டியை சேர்ந்தவா் கார்த்திக் (27). கட்டிட தொழிலாளிகளான 2 பேரும், ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு கட்டிட வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சேமங்கி பெரியார் நகர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது, பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி நோக்கி நாமக்கல் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவீன்குமார், கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் லாரி டிரைவர் சங்கர் மீது வழக்குப்பதிந்து, அந்த லாரியும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை திருமங்கலம் நவஜீவன் பிளாட் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (65). இவர் கரூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது மகள் ஆர்த்தி வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் சொந்த வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் கரூர் -நொய்யல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி எந்த சிக்னலும் செய்யாமல் திடீரென நின்றது. இதனால் குமாரசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமாரசாமி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- டெக்ஸ்டைல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
லாலாபேட்டை அருகே உள்ள கீழபஞ்சப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). டெக்ஸ்டைல் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவக்குமார் சம்பவத்தன்று முத்தம்பட்டியில் உள்ள ஒரு தரிசுக்காட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
வெள்ளியணை வடக்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் திருச்செல்வி (வயது 24). இவருக்கு பழனிச்சாமி என்பவருடன் திருமணமாகி 2 வயதில் மேனகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று திருச்செல்வி அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கிணற்றினை திருச்செல்வி எட்டிப்பார்த்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் திருச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாந்தோணிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திருச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, திருச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்,
கரூர் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் :
தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மங்காம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பவர் தனது பெட்டிக்கடையிலும், ஊமை உடையனுரை சேர்ந்த முருகேசன் (50) அவரது வீட்டின் பின்புறமும் வைத்து மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து ரமேஷ், முருகேசன்ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- சாலை விபத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் லாலாபேட்டை அருகே உள்ள பாப்பையம்பாடி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் தரணிஷ் (வயது 15). இவர் சம்பவத்தன்று வீரியபாளையம்- சேங்கல் சாலையில் பாப்பையம்பாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுவாடி பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தரணிஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாமி (54), தேவி ஸ்ரீ (24), பார்வதி (44). உறவினர்களான இவர்கள் 3 பேரும் திம்மாச்சிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவசாமி, தேவிஸ்ரீ, பார்வதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலுக்கு சீல் வைத்த விவகாரத்தில் தொடர் போராட்டம் நடக்கிறது
- 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
குளித்தலை,
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே வீரணம்பட்டியில் பிரசித்தி பெற்ற காளியம்மன்-பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 7-ந்தேதி நடந்த திருவிழா நிகழ்ச்சியின்போது, அதே பகுதியில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் ெசன்று வழிபாடு செய்வதற்காக முன் மண்டபத்திற்கு வந்துள்ளார். இதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரை தடுத்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், இரு தரப்பினரும் கோவிலுக்கு வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்து திருவிழாவை முடித்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை கோவிலில் இருந்து கரகம் எடுத்து விடும் நிகழ்ச்சி நடத்துவதற்தாக குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி மற்றும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பினர் கரகத்தை கோவிலுக்குள் சென்று எடுத்து வந்து கிணற்றில் கரைத்து விட்டனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, எங்களையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒரு தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி மற்றும் அதிகாரிகள் கோவிலில் உள்ள 4 கதவுகளையும் பூட்டி சீல் வைத்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரை சுமார் 3 மணி நேரம் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோட்டாட்சியரை மீட்டு அவரது காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். அப்போது கோட்டாட்சியரின் கார் மோதி 17 வயது சிறுமியின் கால் முறிந்தது. இதைக்கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இரவு வரை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 2-வது நாளாக மீண்டும் வீரணம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி-பாளையம் மெயின் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவில் முன்பும், அதே சாலையில் உள்ள விராலிப்பட்டி பிரிவு ஆகிய 2 இடங்களில் சாலையின் நடுவே மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மறியலில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றனர். ஆனால் மறியல் தொடந்து நடந்து கொண்டு இருந்தது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உடன்பாடு ஏற்படவில்லை இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, பேச்சுவார்த்தையின்போது ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலின் சீலை அகற்ற வேண்டும், சிறுமியின் மீது ேகாட்டாட்சியரின் கார் மோதியதால் கோட்டாட்சியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில், ஒரு அதிகாரியை 3 மணி நேரம் சிறைபிடித்து வைத்தது தவறு என்றும், விபத்து எதிர்பாராத விதமாக நடந்தது என்றும், நீதிமன்றத்தின் மூலமாகவே கோவிலின் சீலை அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் வீரணம்பட்டி பகுதியில் இரவிலும் மறியல் போராட்டம் நடந்து வந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.இதையடுத்து கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், அதனை தனிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு மேலக்குறப்பாளையம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
- எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தொடங்கி வைத்தார்
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை தி.மு.க. கழக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வதியம் ஊராட்சி பகுதிகளான மேலகுறப்பாளையம் பகுதியில் குளித்தலை நெடுஞ்சாலை துறை சார்பாக கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை தி.மு.க. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன், இளநிலை பொறியாளர் சந்திரமோகன், குளித்தலை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் சாலை பணியாளர்கள், பொதுமக்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் :
லாலாபேட்டை அருகே உள்ள மகிளிப்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மகிளிப்பட்டி, புணாவசிப்பட்டி, லாலாபேட்டை, சந்தப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கரூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர்.
கரூர்,
கரூர் நொய்யல் குறுக்குச்சாலை அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் தொண்டைவலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
- கரூரில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
- நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தம்பதியை தாக்கிய கொத்தனார் கைது செய்யபட்டார்
- மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலர்க்கொடி (வயது 45). இவர் கடந்த 5-ந்தேதி தனது வீட்டில் கணவர் மற்றும் உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு திருச்சாப்பூர் பகுதியை சேர்ந்த கொத்தனாரான திலீப் என்பவர் 3 பேருடன் வந்து உங்களது மகன் அரவிந்த் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு மலர்க்கொடி திருச்சாப்பூர் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து மலர்க்கொடி, செல்வம், மலர்க் கொடியின் தங்கை ஜெயந்தி, உறவினர் தங்கம் ஆகிய 4 பேரையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளனர்.
பின்னர் செல்வத்தை அரிவாளால் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த செல்வம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மலர்க்கொடி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் திலீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.






