என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர்.
    • வியாபாரியிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு காரில் மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பெங்களூரில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    • அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கிட "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு முனைப்பு இயக்கம் வருகிற 1.10.2022 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இதனை தொடங்கி வைத்தார்.

    அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் வரதராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திவ்ய பிரியா வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி கலந்து கொண்டனர்.

    • வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.
    • போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் கிராமத்திற்கு இடையே சுமார் 1.2 கி.மீ. நீளமுள்ள தரைப்பாலம் உள்ளது.

    அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியான் குடிசை, கணபதிபுரம், இளையனார்வேலுார், நெய் குப்பம், ஆசூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற தொழிற்பேட்டைகளுக்கும் சென்னை- பெங்களூரு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் செல்கிறார்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்தப் பாலாற்று பாலம் தான் பிரதான போக்குவரத்து சாலையாக விளங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் சேதம் அடைந்தது.

    இதனால் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.

    போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.

    பாலத்தை சீரமைக்க கோரி பல போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தியதை தொடர்ந்து, சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த டிசம்பர் மாதம் பாலத்தின் உடைந்த பகுதிகளில் மட்டும் கிராவல் மண் மற்றும் மணல் மூட்டைகளை கொட்டி தற்காலிகமாக பாலத்தை சீரமைத்து வாகன போக்குவரத்தை தொடங்கினர். தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட இந்த தரை பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. பாலம் உறுதியற்ற தன்மையில் இருந்ததால் கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வாலாஜாபாத் - அவளூர் வழித்தடத்தில், கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான டிப்பர் லாரிகளும், கனரக வாகனங்களும் செல்வதால், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் மண் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. இதனால் பாலத்தின் அகலமும் குறைந்து காணப்படுகிறது. மேலும் தரை பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும்போது, மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முடியாத சூழ்நிலை உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது அவ்வப்போது இந்த தரைபாலத்தில் விபத்து ஏற்படுகின்றது.

    இந்த நிலையில் நேற்று கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று இந்த தரைப்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார்.

    இந்த நிலையில் வருகின்ற மாதங்கள் மழைக்காலம் என்பதால் இந்த தரைப்பாலம் மேலும் சேதமாகும் அபாயம் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த தரைப்பாலத்தை மாற்றி மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • சென்னை விமான நிலைய போலீசார் சுப்ரியாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தம்பியை வழியனுப்ப வந்த அக்கா திடீரென உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஆலந்தூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள கனகம்மாசத்திரத்தை சேர்ந்தவர் கிரண் குமார். இவரது மனைவி சுப்ரியா (35). இவருடைய தம்பியான என்ஜினீயர் வெங்கட் ராஜேசுக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்து உள்ளது.

    பணியில் சேருவதற்காக இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானத்தில் செல்ல வெங்கட் ராஜேஷ் சென்னை விமான நிலையத்திற்கு வந்தாா். அவரை வழி அனுப்புவதற்காக அக்காள் சுப்ரியா, அவரது கணவர் கிரண்குமார் ஆகியோரும் உடன் வந்து இருந்தனர்.

    அவா்கள் சிறிது நேரம் விமானநிலைய வளாகத்தின் வெளியே நின்றபடி வெங்கட்ராஜேசுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெங்கட்ராஜேஷ் விமான நிலையத்திற்குள் சென்றார்.

    அப்போது சுப்ரியாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் கிரண்குமார், விமான நிலையத்துக்குள் சென்ற வெங்கட்ராஜேசுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் பதறி அடித்தபடி வெங்கட் ராஜேஷ் வெளியே ஓடி வந்தார்.

    இதற்குள் இதுபற்றி அறிந்த அங்கிருந்த விமான நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து சுப்ரியாவை மீட்டு விமானநிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக சுப்ரியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை கண்டு தம்பி வெங்கட் ராஜேஷ் கதறி அழுதார். மேலும் அவர் பிரான்ஸ் செல்ல இருந்த, பயணத்தையும் ரத்து செய்தார். சென்னை விமான நிலைய போலீசார் சுப்ரியாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
    • வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஆதனூர், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூர்வா ரப்பட்டு சீரமைக்கப்பட்டது.

    அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதை தடுக்கும் வகையில், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் பகுதியில் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தவும் வரதராஜபுரம் புவனேஷ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், வரதராஜபுரம் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மூடிய வெள்ள வடிகால் வாய்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், நீா்வளத்துறை செயற்பொறியாளர் செல்வ ராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், நீா்வளத்துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.

    • வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
    • அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏக்கள் சுந்தர், எழிலரசன், எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ். பாலாஜி, மற்றும் மேயர்கள், துணை மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • மதுபோதையில் இருந்த 5 பேர் கும்பல் விக்னேசை வழிமறித்தது.
    • பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (26). போட்டோ கிராபர். இவர் தனது உறவினரை சந்திக்க டெம்பிள் சிட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 5 பேர் கும்பல் விக்னேசை வழிமறித்தது. புரோட்டாவுக்கு சால்னா வாங்கி கொடுக்கும்படி தகராறில் ஈடுபட்டனர். இதற்கு அவர் மறுத்ததால் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்பிள்சிட்டி பகுதியை சேர்ந்த ஹரீஷ், கன்னியப்பன், சரவணன், எல்லப்பன், பெரியதனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் காமராஜ் ஊழியராக வேலை செய்து வந்தார்.
    • காமராஜ் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வீராச்சாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் காமராஜ் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றார். இதற்கிடையே நேற்று அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் காமராஜ்க்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில், மர்ம நபர்கள் காமராஜ் கோவிலுக்கு சென்றதை நோட்டம் விட்டு வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • உத்திரமேரூர் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சதீஷ்.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சதீஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அரசு குடியிருப்பு வாரிய வீட்டில் வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென இறந்ததாக காஞ்சிபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சங்கீதா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சதீசும், சங்கீதாவும், கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்துள்ளனர். நேற்று இரவு அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சங்கீதா இறந்து இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் சதீசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடி பகுதியை சேர்ந்த டிரைவர் கதிர்வேல் லாரியை ஓட்டினார்.

    காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் வந்தபோது கண்டெய்னர் பழுதடைந்தது. இதனை சரி செய்வதற்காக டிரைவர் கதிர்வேல் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    • கலெக்டர் மா.ஆர்த்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி பங்கேற்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கீழ்கதிர்பூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அண்ணல் காந்தியடிகள் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி கலந்துகொண்டு, பொதுமக்களுடன் உணவருந்தினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்த போவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆர்ப்பாட்டம்
    • சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குழப்பமான மனநிலை மக்களிடையே நீடித்து வருகிறது.

    மேலும் மாவட்டத்திலேயே பசுமை நிறைந்த பகுதியாக ஏகனாபுரம், நாகப்பட்டு ,நெல்வாய் உள்ளிட்ட கிராமங்கள் விளங்கி வருகின்றன. இந்நிலையில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் தமிழக அரசு கையகப்படுத்த போவதாக மக்களிடையே தகவல் வெளியானதை அடுத்து மேற்கண்ட கிராமங்களில் அப்பகுதி மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவை முன்னிட்டு மேற்கண்ட பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். விமான நிலையம் வருவதை கண்டித்து இக்கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனையொட்டி மேட்டு பரந்தூர், நாகப்பட்டு ,காட்டுப்பட்டூர், நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளிலும், சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து அனைத்து மக்களிடமும் கருத்து கேட்டு அவர்கள் ஒப்புதலுடன் கிராம சபை கூட்டத்தில் விமான நிலையம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியாக கருதப்பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×