search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட தரைப்பாலத்தில் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
    X

    தடை செய்யப்பட்ட தரைப்பாலத்தில் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

    • வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.
    • போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் கிராமத்திற்கு இடையே சுமார் 1.2 கி.மீ. நீளமுள்ள தரைப்பாலம் உள்ளது.

    அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியான் குடிசை, கணபதிபுரம், இளையனார்வேலுார், நெய் குப்பம், ஆசூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற தொழிற்பேட்டைகளுக்கும் சென்னை- பெங்களூரு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் செல்கிறார்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்தப் பாலாற்று பாலம் தான் பிரதான போக்குவரத்து சாலையாக விளங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் சேதம் அடைந்தது.

    இதனால் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.

    போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.

    பாலத்தை சீரமைக்க கோரி பல போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தியதை தொடர்ந்து, சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த டிசம்பர் மாதம் பாலத்தின் உடைந்த பகுதிகளில் மட்டும் கிராவல் மண் மற்றும் மணல் மூட்டைகளை கொட்டி தற்காலிகமாக பாலத்தை சீரமைத்து வாகன போக்குவரத்தை தொடங்கினர். தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட இந்த தரை பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. பாலம் உறுதியற்ற தன்மையில் இருந்ததால் கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வாலாஜாபாத் - அவளூர் வழித்தடத்தில், கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான டிப்பர் லாரிகளும், கனரக வாகனங்களும் செல்வதால், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் மண் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. இதனால் பாலத்தின் அகலமும் குறைந்து காணப்படுகிறது. மேலும் தரை பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும்போது, மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முடியாத சூழ்நிலை உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது அவ்வப்போது இந்த தரைபாலத்தில் விபத்து ஏற்படுகின்றது.

    இந்த நிலையில் நேற்று கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று இந்த தரைப்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார்.

    இந்த நிலையில் வருகின்ற மாதங்கள் மழைக்காலம் என்பதால் இந்த தரைப்பாலம் மேலும் சேதமாகும் அபாயம் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த தரைப்பாலத்தை மாற்றி மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    Next Story
    ×