என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 58). இவர் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். துலுங்கும் தண்டலம் கிராமத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்ய துலுங்கும் தண்டலம் கிராமத்திற்கு மின் ஊழியர் பக்கிரிசாமி டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு மின்மாற்றி மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி துடி துடித்தார். இதுகுறித்து ஆம்புலன்சு மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் வருவதற்குள் மின்ஊழியர் பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் பக்கிரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர்.
- மர்ம நபர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தரை சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர்கள் இருவரும் மணிமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே நேற்று முன்தினம் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தரை சரமாரியாக வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
வெட்டு காயங்களுடன் கிடந்த இருவரையும் மணிமங்கலம் போலீசார் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக மணிமங்கலம போலீஸ் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி்ச் சென்ற கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக மணிமங்கலம் பெரிய காலனி பகுதியை தெருவீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் (22), மணிமங்கலம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (19), மேற்கு மாடவீதியை சேர்ந்த லோகேஸ்வரன் (19), இந்திராநகர் பகுதியை சேர்ந்த டில்லிபாபு(21) ஆகியோரை வரதராஜபுரம் அருகே போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணிமங்கலம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த மார்ச் மாதம் தேவேந்திரன் (23) என்பவர் மணிமங்கலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நண்பர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே இருவரையும் வெட்டி படுகொலை செய்தோம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர். இவர்களிடம் இருந்து கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார்.
- தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, ரவிக்குமாரை கைது செய்து மேலும் விசாரணைக்கு தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
ஆலந்தூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (43). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவரை கைது செய்ய தஞ்சாவூர், புதுக்கோட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் இவர் போலீசிடம் சிக்காமல் தப்பியோடி, வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டார்.
இதை அடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ரவிக்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும், எல்.ஓ.சி. போடப்பட்டிருந்தது.
தனது 23 வயதில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய ரவிக்குமார், 20 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு வராமல், வெளி நாடுகளிலேயே தங்கி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாா்.
இனிமேல் போலீசாா் தேட மாட்டார்கள் என்று நினைத்து துபாயில் இருந்தவர் சொந்த ஊருக்கு செல்ல சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரவிக்குமாரின் பாஸ்போா்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர், 20 ஆண்டுகளாக தஞ்சாவூர் போலீசாரால், திருட்டு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், ரவிகுமாரை வெளியே விடாமல் தடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுத்தனா். தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு வந்து, ரவிக்குமாரை கைது செய்து மேலும் விசாரணைக்கு தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
- இரண்டு அறைகளில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு தங்க நகைகள் கொள்ளை
- கைரேகை நிபுணர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் வந்து ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரை பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் குடியிருப்பு, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த குடியிருப்பில் 104 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சொக்கலிங்கம் என்பவரின் மகன் சதீஷ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி பிரவசத்துக்காக சென்னை சென்று உள்ளார்.
இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சதீஷ் ஷிப்ட் முடிந்து நேற்று நள்ளிரவு வீட்டுக்கு வந்த பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
இரண்டு அறைகளில் இருந்த மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் வங்கிப் புத்தகம் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் வந்து ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- எடை குறைந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
- விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது.
காஞ்சிபுரம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதிதாக எடை குறைந்த நவீன சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வகை சிலிண்டர்களில் முன்னா 2 கிலோ, சோட்டு 5 கிலோ, காம்போசிட் சிலிண்டர் 5 கிலோ, 10 கிலோ ஆகிய எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது, பாதுகாப்பானது. இந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சிலிண்டர்கள் குறித்தும், வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாகனத்தை கடந்த 5 தேதி இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு வாகனம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 29 விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனம் நேற்று மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது. காஸ் கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைக் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
15 நாட்கள் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
- சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
காஞ்சிபுரம்:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட சிலைகளை கரைப்பதற்கு சர்வதீர்த்த குளம் பொன்னேக்கரை ஆகிய 2 இடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரசாயனம் இல்லாத விநாயகர் சிலைகளை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரி கரை ஆகிய இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர்.
- வியாபாரியிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு காரில் மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து காரில் இருந்த பெருநகர் பகுதியை சேர்ந்த வியாபாரி லோகநாதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பெங்களூரில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
- அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
- காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 274 கிராம ஊராட்சிகளில் எழில்மிகு கிராமங்களை உருவாக்கிட "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு முனைப்பு இயக்கம் வருகிற 1.10.2022 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி இதனை தொடங்கி வைத்தார்.
அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியிலும் தூய்மை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் "நம்ம ஊரு சூப்பரு" விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் வரதராஜன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திவ்ய பிரியா வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி கலந்து கொண்டனர்.
- வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.
- போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் கிராமத்திற்கு இடையே சுமார் 1.2 கி.மீ. நீளமுள்ள தரைப்பாலம் உள்ளது.
அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியான் குடிசை, கணபதிபுரம், இளையனார்வேலுார், நெய் குப்பம், ஆசூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற தொழிற்பேட்டைகளுக்கும் சென்னை- பெங்களூரு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் செல்கிறார்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்தப் பாலாற்று பாலம் தான் பிரதான போக்குவரத்து சாலையாக விளங்கி வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் சேதம் அடைந்தது.
இதனால் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.
போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.
பாலத்தை சீரமைக்க கோரி பல போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தியதை தொடர்ந்து, சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த டிசம்பர் மாதம் பாலத்தின் உடைந்த பகுதிகளில் மட்டும் கிராவல் மண் மற்றும் மணல் மூட்டைகளை கொட்டி தற்காலிகமாக பாலத்தை சீரமைத்து வாகன போக்குவரத்தை தொடங்கினர். தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட இந்த தரை பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. பாலம் உறுதியற்ற தன்மையில் இருந்ததால் கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாலாஜாபாத் - அவளூர் வழித்தடத்தில், கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான டிப்பர் லாரிகளும், கனரக வாகனங்களும் செல்வதால், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் மண் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. இதனால் பாலத்தின் அகலமும் குறைந்து காணப்படுகிறது. மேலும் தரை பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும்போது, மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முடியாத சூழ்நிலை உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது அவ்வப்போது இந்த தரைபாலத்தில் விபத்து ஏற்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று இந்த தரைப்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார்.
இந்த நிலையில் வருகின்ற மாதங்கள் மழைக்காலம் என்பதால் இந்த தரைப்பாலம் மேலும் சேதமாகும் அபாயம் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த தரைப்பாலத்தை மாற்றி மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- சென்னை விமான நிலைய போலீசார் சுப்ரியாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தம்பியை வழியனுப்ப வந்த அக்கா திடீரென உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கனகம்மாசத்திரத்தை சேர்ந்தவர் கிரண் குமார். இவரது மனைவி சுப்ரியா (35). இவருடைய தம்பியான என்ஜினீயர் வெங்கட் ராஜேசுக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்து உள்ளது.
பணியில் சேருவதற்காக இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானத்தில் செல்ல வெங்கட் ராஜேஷ் சென்னை விமான நிலையத்திற்கு வந்தாா். அவரை வழி அனுப்புவதற்காக அக்காள் சுப்ரியா, அவரது கணவர் கிரண்குமார் ஆகியோரும் உடன் வந்து இருந்தனர்.
அவா்கள் சிறிது நேரம் விமானநிலைய வளாகத்தின் வெளியே நின்றபடி வெங்கட்ராஜேசுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெங்கட்ராஜேஷ் விமான நிலையத்திற்குள் சென்றார்.
அப்போது சுப்ரியாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் கிரண்குமார், விமான நிலையத்துக்குள் சென்ற வெங்கட்ராஜேசுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் பதறி அடித்தபடி வெங்கட் ராஜேஷ் வெளியே ஓடி வந்தார்.
இதற்குள் இதுபற்றி அறிந்த அங்கிருந்த விமான நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து சுப்ரியாவை மீட்டு விமானநிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக சுப்ரியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை கண்டு தம்பி வெங்கட் ராஜேஷ் கதறி அழுதார். மேலும் அவர் பிரான்ஸ் செல்ல இருந்த, பயணத்தையும் ரத்து செய்தார். சென்னை விமான நிலைய போலீசார் சுப்ரியாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
- வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம்:
கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஆதனூர், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூர்வா ரப்பட்டு சீரமைக்கப்பட்டது.
அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதை தடுக்கும் வகையில், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் பகுதியில் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தவும் வரதராஜபுரம் புவனேஷ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம், வரதராஜபுரம் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மூடிய வெள்ள வடிகால் வாய்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், நீா்வளத்துறை செயற்பொறியாளர் செல்வ ராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், நீா்வளத்துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.
- வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
- அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், நடைபெற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏக்கள் சுந்தர், எழிலரசன், எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ். பாலாஜி, மற்றும் மேயர்கள், துணை மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






