என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: பரந்தூரில் போராட்டம் நடத்த தடை- காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
    X

    விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: பரந்தூரில் போராட்டம் நடத்த தடை- காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    • சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது.
    • அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது.

    இதற்காக பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப் படுத்தப்படும் என்று தெரிகிறது.

    இதற்கு அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விளை நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என்று கிராம மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுத்தொடர்பாக ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றியும், பேரணியாகவும் சென்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகிற 15 நாட்களுக்கு பொதுக் கூட்டம், பேரணி நடத்த தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட் டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரும் நாட்களில் விழாக்கள் வர உள்ளதால் மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயங்களில் மோதல் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் சட்டம் 30 (2) அமல்படுத்தப் பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிற 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ அமைதியை சீர்குலைக்கும் வகையில் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்களும், பொதுக் கூட்டம் நடத்துபவர்களும் போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவு பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×