என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
    • வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 208 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டம், நெமிலி கிராமத்தை சார்ந்த நரிக்குறவர் இன 38 குடும்பங்களுக்கு ரூ.54 லட்சத்து 29 ஆயிரத்து 710 மதிப்பில் இலவச பட்டாக்களையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளையும், வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல் கலந்து கொண்டனர்.

    • முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை.
    • கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை.

    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது பெருமளவு குறைந்து வருகின்றன.

    மேலும் சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணிகளை எச்சரிக்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ள பகுதிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர்.

    அதோடு, சென்னை விமானநிலைய டுவிட்டா் பக்கத்திலும் அறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே விமான பயணிகள், விமான நிலையத்துக்கு வருபவர்கள், விமானநிலைய ஊழியா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

    முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. அதை போல் விமான பயணிகள் அனைவரும், பயண நேரம் முழுமையும் கண்டிப்பாக முக கவசத்தை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும்.

    சில பயணிகள் முகக்கவசம் தொடா்ந்து அணிவதால், சுவாச பிரச்சினை போன்றவைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று முகக்கவசம் விலக்கு பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

    முககவசம் அணியாதவர்கள் மீது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி, அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை, விமான நிலையத்தில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • சின்மயா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி பாபு
    • முரளி பாபுவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி பாபு (வயது 62). கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார்.

    இவர் வழக்கம் போல நேற்று மதியம் கடையை மூடிவிட்டு வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் படுக்கையறைக்கு சென்று திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று முரளி பாபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் முரளி பாபுவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் கைவரிசை காட்டி தப்பிய மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் சஞ்சய். தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நண்பர்கள் இருவரும் நேற்று இரவு 11 மணி அளவில் ஆலப்பாக்கத்தில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வளசரவாக்கம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அன்பு நகர் பகுதியில் வந்தபோது பெட்ரோல் இல்லாததால் மோட்டார் சைக்கிள் திடீரென நின்றுவிட்டது.

    இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார்சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.

    அப்போது அவழியே மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் அத்வைத்திடம் பெட்ரோல் பங்க் வரை மோட்டார் சைக்கிள் "டோப்" செய்து உதவி செய்வதாக கூறினர். இதை உண்மை என்று நம்பிய அத்வைத்தும், சஞ்சய்யும் மோட்டார்சைக்கிளில் அமர்ந்தபடி அந்த கும்பலுடன் சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் 7 பேர் கும்பல் திடீரென 2 பேரையும் கத்திமுனையில் மிரட்டினர்.

    பின்னர் இருவரையும் பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்று கத்திமுனையில் அத்வைத் அணிந்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வாட்ச், ரூ.3 ஆயிரம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள "இயர் பேடு" ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் கைவரிசை காட்டி தப்பிய மர்ம கும்பலை பிடிக்க கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது.
    • பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனத்துக்கு கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர், தாயார், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது. இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் அலுவலர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும் இதில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ. 60 லட்சத்து 39 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கமும், 229 கிராம் தங்க நகைகளும்,614 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்து இருந்தது.

    பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.

    • கணபதியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா ஏதும் பொருத்தப்படவில்லை.
    • சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் வீடுகளில் கண்காணிப்பு கேமரா இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே கடலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 52). தி.மு.க.வை சேர்ந்த இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று அமாவாசை என்பதால் கணபதி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் ராமேசுவரத்துக்கு சென்றார். தரிசனம் முடித்துவிட்டு இன்று காலையில் அவர் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் லாக்கரும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 300 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    கணபதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதை அடுத்து பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளனர்.

    பின்னர் உள்ளே புகுந்து பீரோ மற்றும் லாக்கரை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கணபதியிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    கணபதியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா ஏதும் பொருத்தப்படவில்லை. மேலும் சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் வீடுகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே கொள்ளையர்களை பிடிப்பதற்காக அந்த கிராம மக்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
    • சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    போரூர்:

    சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக் (வயது 37) முந்திரி பருப்பு மொத்த வியாபாரி.

    இவர் தொழில் சம்பந்தமாக நேற்று முன்தினம் கடலூர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ராஜேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர்.

    இன்று அதிகாலை சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கிராமப்புற பகுதி என்பதால் காலம் காலமாக அங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளை காலி செய்து விட்டு எங்கே செல்வது என்கிற கவலை.
    • வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி காலி செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    சென்னையில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரந்தூர், வளத்தூர், நெல்வாய், தண்டலம், மனபுரம், பொடவூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 4563 ஏக்கர் இடம் விமான நிலையத்தை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதில் காலம் காலமாக மக்கள் வசித்து வரும் வீடுகளும், அவர்கள் விவசாயம் செய்து வரும் விளை நிலங்களும் உள்ளன. இந்த விளை நிலங்களுக்கு தண்ணீர் வழங்கி வரும் ஏரிகள் ஆகியவையும் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

    இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் மற்றும் பூர்வீக இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த மக்கள் நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு, நிலங்களை எடுக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.

    இந்த பகுதி முழுவதுமே கிராமப்புற பகுதி என்பதால் காலம் காலமாக அங்கு வசித்து வரும் மக்கள், தங்களது வீடுகளை காலி செய்து விட்டு எங்கே செல்வது என்கிற கவலையில் உள்ளனர். இதற்கிடையே விமான நிலைய பணிகளுக்கு அப்பகுதியில் உள்ள 1005 வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி காலி செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விமான நிலைய வரவால் வீடுகளை இழக்கும் அனைவருக்கும் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளன. இந்த வீடுகளை தமிழக அரசே கட்டி கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்காக மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    இதுபோன்று நிலங்களை கையகப்படுத்தும்போது பாதிக்கப்பட உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கும் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நிலத்தின் சந்தை மதிப்பை விட 350 சதவீதம் அளவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அப்பகுதி மக்கள் இழப்பீட்டு தொகையுடன் அரசு வேலை வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற அப்பகுதி மக்களின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றி கொடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

    • சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம் சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொடுத்தார்.
    • பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சர்வபொம்மன் (வயது 25). பட்டய கணக்காளருக்கு படித்து வருகிறார். இவரிடம் வேங்கைவாசல், மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி (24) என்பவர், கடந்தாண்டு அறிமுகமானார். அப்போது அவர், தான் பட்டய கணக்காளர் படிப்பு முடித்துவிட்டு பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்து வருவதாக கூறினார்.

    மேலும் சர்வபொம்மனிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி கொடுப்பதாகவும் கூறினார். அதை நம்பிய சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம் சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இது குறித்து சர்வபொம்மன் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

    அதில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று விசாரித்ததில் அங்குள்ள நிறுவனத்தில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருவதும், நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருப்பதும் தெரிந்தது.

    கேரளா சென்றிருந்த அவர் பெங்களூரு திரும்பும் வழியில் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு வைத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் 3 பேரையும் சேலையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி இதுபோல் பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி சர்வபொம்மன் உள்பட பலரிடம் ரூ.15 முதல் ரூ.20 கோடிக்கும் மேல் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜியை நேற்று மாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 விலை உயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    • குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் நசீர்பாட்ஷா.
    • போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முகமது அமீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் நசீர்பாட்ஷா (வயது 40). ஆட்டோ டிரைவர். அவரது மனைவி பஷீரா (35), அவர்களது மகன் முகமது அமீர் (20). நசீர் பாட்ஷா. சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் நசீர்பாட்ஷா தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக அவரது மகன் தகவல் தெரிவித்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது மகனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் நேற்று முன்தினம் மனைவி மற்றும் மகனை நசீர்பாட்ஷா உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அப்போது தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகன் கட்டையை பறித்து திருப்பி தாக்கியதில் தந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முகமது அமீரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன்.
    • சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் (வயது 46). கூலித்தொழிலாளி.

    சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். நேற்று மதியம் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது குடை பிடித்தபடி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த எல்லப்பன் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி இறந்து போன எல்லப்பன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வாய்க்கால் நீர் நிலை பகுதியில் 64 வீடுகள் கட்டப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற அதிகாரிகள் சார்பில் குடியிருப்புவாசிகளுக்கு சில மாதங்களுக்கு முன் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடித்து அகற்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., குன்றத்தூர் தாசில்தார், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதற்கு அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர். இதன் தொடர்ந்து 54 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் இடிக்கப்படாமல் இருந்த 10 வீடுகளை நேற்று இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன், குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், கண்ணன், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ×