என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சென்னை அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அயப்பாக்கத்தை சேர்ந்த பழனி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 31). இவர், நேற்று பல்லாவரம் வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் ஆசர்கானா பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பியபோது, அவருக்கு பின்னால் தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி வந்த மாநகர பஸ் இவரது மொபட் மீது மோதியது.

    இதில் ராஜேஸ்வரி, மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது மாநகர பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய ராஜேஸ்வரி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபாமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ராஜேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அயப்பாக்கத்தை சேர்ந்த பழனி (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே பகுதியில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர பஸ் மோதியதில் சாலையோரம் இருந்த வழிகாட்டி பெயர் பலகை தூண் சரிந்து விழுந்து வாலிபர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
    • சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே நடிகர் சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.
    • தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். இவருக்கும், அவரைப் போலவே சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது திடீரென கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து பார்த்த போது நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை கூறிய சூர்யா அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார். மேலும் தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக கூறினார். திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.

    தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும்.

    காஞ்சிபுரம்:

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்.
    • வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1-8-2022 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    அப்போது வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

    • பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது
    • மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகை

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் கீழ்கண்ட 5 இடங்களில் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

    மாவட்டத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்ற இடங்கள்

    1. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை செய்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் ஒத்திகை பயிற்சியினை உதவி ஆணையர் (கலால்) காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது

    2. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம் - புவனேஸ்வரி நகர் பகுதியில் வெள்ளத்தால் நீர் சூழ்ந்த பகுதியில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பற்றி நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லுதல் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் போன்ற மீட்பு மற்றும் நிவாரண ஒத்திகையினை கோட்டாட்சியர் திருபெரும்புதூர் தலைமையில் நடைபெற்றது.


    3. வாலாஜாபாத் வட்டம், வில்லிவலம் கிராமம் பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் மற்றும் பாலாற்றில் அடித்துச்செல்லும் நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் கால்நடைகளை பாலாற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றி மருத்துவ உதவி செய்யும் ஒத்திகையானது கோட்டாட்சியர் காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது

    4. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    5. காஞ்சிபுரம் வட்டம் சிட்டியம்பாக்கம் குறுவட்டம் சிங்காடி வாக்கம் தி/ள் ஸ்டால் இந்தியா தொழிற்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தொழிற்சாலை ஆய்வாளர் அவர்கள் திருப்பெரும்புதூர் மூலம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராமாபுரம் பூத்தபேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த வினோத் (38) என்பதும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இருந்து 2கிலோ கஞ்சா , 4 செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவருடன் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர்கள் யார்?யார்? கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வது எப்படி? எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மரிய அல்போன்ஸ். இவரது மகன் அந்தோணி கவின்.
    • தென்காசியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    போரூர்:

    திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மரிய அல்போன்ஸ். இவரது மகன் அந்தோணி கவின் (வயது29) கூலித் தொழிலாளி.

    நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வானகரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்தோணி கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்தோணி கவினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உரிய எச்சரிக்கை இன்றி சாலையோரம் லாரியை நிறுத்தி சென்றதன் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவரான தென்காசியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.
    • கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

    பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றியும் நடவடிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் சபாநாயகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.

    சட்டமன்றம் ஆரம்பித்த 1921 முதல் நூறாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நூறாண்டு கால சட்டப்பேரவை நிகழ்வுகளை விரைவில் இணையதளத்தில் பார்க்க முடியும் என தெரிவித்தார்.

    தற்போது சட்டப்பேரவை நிகழ்வின்போது கேள்வி பதில் நேரம் மட்டுமே நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இனி சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

    கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    1962 இந்தியா-சீன போரின்போது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மகாபலிபுரத்தில் சீனா அதிபர் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கும் வரை 57 ஆண்டுகள் சீன எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. சந்திப்பிற்கு பிறகு எல்லையில் எந்த பதட்டமும் இல்லை. ஆனால் அதற்கு பிறகு தற்போது இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தில் 20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அந்த கல்லறையின் ஈரம் காய்வதற்குள் சீனாவில் இருந்து தேசிய கொடிகளை இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது.

    மேலும் மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு, நம்முடைய தேசிய கொடி மேட் இன் சைனாவாக இருந்தது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது குறித்து அனைத்து சபாநாயகர்களும், பாராளுமன்ற சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு அவர் புன்முறுவலோடு சென்றுவிட்டார். மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு தேசியக்கொடியை மேட் இன் சைனாவுடன் நமது தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு செல்லும்பொழுது எங்களுக்கு வேதனையாக இருந்தது.

    மேலும் இந்திய பெருங்கடல் அமைதியாக தான் இருந்தது. ஆனால் சீன உளவு கப்பல் வந்தது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நேற்று தொடங்கியது.
    • விநாயகரின் அபூர்வ புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். சிவில்‌ என்ஜினீயரான இவர், தீவிர விநாயகர் பக்தர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை சேகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நேற்று தொடங்கியது.

    சிட்லபாக்கம் ஸ்ரீ லட்சுமி ராம் கணேஷ் மகாலில் நடக்கும் இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியில், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர், சிவனுக்கு பூஜை செய்யும் விநாயகர், சந்தனத்திலான விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், திருக்கல்யாண விநாயகர், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர், 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தாமரையில் மலரும் மூவர்ண நிறத்திலான விநாயகர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறுவிதமான விநாயகர் சிலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் விநாயகரின் அபூர்வ புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை வருகிற 12-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

    • ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட கலெக்டரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வெங்கச்சேரியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாசில் பிரேம் ஆனந்த், மாகரல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-1 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-1 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்வுகளுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 1-ந் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×