என் மலர்
காஞ்சிபுரம்
- பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்தேன்
- நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த ராகுல்காந்தி பின்னர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும் நான் என்னுடைய தந்தையை இழந்தேன். ஆனால் ஒரு போதும் நான் நேசிக்கும் இந்த நாட்டை இழக்க மாட்டேன்.
வெறுப்பை அன்பால் வெல்லலாம். பயத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம்.
இவ்வாறு அந்த பதிவில் ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்தார்.
- தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
- உணவு சாப்பிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சுமார் 400 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இரவு நேர பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் அனைவரும் தொழிற்சாலையில் உணவகத்தில் இரவு நேர உணவை சாப்பிட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கு வழங்கிய ரசத்தில் பல்லி விழுந்து இருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு சாப்பிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
- மதுரவாயலில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் மின்விளக்கு கம்பம் உள்ளது. இதில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் வயரால் இறுக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளிப் பருவத்திலேயே மகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதை கண்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தாயின் நிலைக்கண்டு இரண்டு மகன்களும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு ரேணுகாம்பாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சிவராஜ். இவரது மனைவி சசிகலா (வயது35).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 10-ம்வகுப்பு படிக்கும் இளையமகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.
இதனை தாய் சசிகலா பலமுறை கண்டித்தும் மகன் கேட்கவில்லை. இதில் மனவேதனை அடைந்த சசிகலா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த 2 மகன்களும் தாய் மீதி வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து தாங்களும் தற்கொலைக்கு முயன்றனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் மயக்க நிலையில் இருந்த சசிகலா மற்றும் அவரது 2 மகன்களையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிப் பருவத்திலேயே மகன் போதை பழக்கத்துக்கு அடிமையானதை கண்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தாயின் நிலைக்கண்டு இரண்டு மகன்களும் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
- சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவைகளை இயக்கி வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பின்னர் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தொடர்ந்து உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக வைத்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை தொடங்கி உள்ளது. அந்த நிறுவனம் தற்போது சென்னையையும் மையமாக வைத்து அதிகமான உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு தற்போது தினமும் 9 விமானங்களும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இனிமேல் 22 விமான சேவைகளாக அதிகரிக்கின்றன. இதனால் பயணிகளுக்கு கூடுதல் விமான சேவை வசதிகள் கிடைக்கும்.
இதேபோல் இந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து மாலை 6:10 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஆகாசா ஏர் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. அதன்பின்பு அதே விமானம் மீண்டும் இரவு 8:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு மும்பை சென்றடைகிறது.
இதுவரை சென்னை மும்பை இடையே 19 புறப்பாடு விமானங்கள்,19 வருகை விமானங்கள் மொத்தம் 38 விமானங்கள் உள்ளன. அது இனிமேல் 40 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது.
வருகிற 26-ந் தேதியில் இருந்து ஆகாசா ஏர் விமானம், சென்னையில் இருந்து கொச்சிக்கும், கொச்சியில் இருந்து சென்னைக்கும் தினசரி விமானங்களை புதிதாக இயக்குகிறது.
மாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 6 மணிக்கு கொச்சி சென்றடைகிறது. மாலை 6:15 மணிக்கு கொச்சியிலிருந்து புறப்படும் விமானம் இரவு 7:15 மணிக்கு சென்னை வந்தடையும்.
சென்னை கொச்சி இடையே இதுவரை தினமும் 4 புறப்பாடு, 4 வருகை, தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. இனிமேல் இது 10 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது.
இதேபோல் சென்னையில் இருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவைகளை இயக்கி வருகிறது. சென்னை-மைசூரு, மைசூரு-சென்னை இடையே பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தற்போது அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் புதிதாக சென்னை-மைசூரு-சென்னை இடையே விமான சேவைகளை தொடங்கி உள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் இந்த சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளி ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. காலை 9:25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. பின்பு மைசூரில் இருந்து காலை 11:30 க்கு அதே விமானம் புறப்பட்டு பகல் ஒரு மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேருகிறது. இந்த விமானம் ஏ.டி.ஆர் எனப்படும் சிறிய ரக விமானம் ஆகும். 74 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். இதில் சலுகை கட்டணமாக ஒரு வழி பயணத்திற்கு ரூ.4,678 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்துள்ளது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையே சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.
சென்னையில் இருந்து மும்பைக்கு-ரூ.9ஆயிரம், பெங்களூரு-ரூ.6.500, டெல்லி-ரூ.9500, கொல்கத்தா-ரூ.8 ஆயிரம் கட்டணமாக உள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கோவை, தூத்துக்குடிக்கு ரூ.6 ஆயிரம் வரை விமான கட்டணமாக இருக்கிறது.
- குன்றத்தூர், நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன்.
- குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூர், நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகதீசன் (வயது17). கோவூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று மாலை அவர் தனது நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத ஜெகதீசன் கரையில் உள்ள படியில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை அவரது நண்பர்கள் நீச்சல் அடித்து குளிக்கும்படி ஆழமான பகுதிக்கு அழைத்தனர்.
அப்போது ஜெகதீசன் தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் குன்றத் தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வரைந்து வந்து ஏரியில் மூழ்கிய ஜெகதீசனை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெகதீசன் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நீச்சல் தெரியாமல் ஜெகதீசனை ஏரியில் மூழ்கும் காட்சியை விபரீதம் அறியாமல் கரையில் இருந்த நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
- சென்னை அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அயப்பாக்கத்தை சேர்ந்த பழனி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 31). இவர், நேற்று பல்லாவரம் வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் ஆசர்கானா பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பியபோது, அவருக்கு பின்னால் தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி வந்த மாநகர பஸ் இவரது மொபட் மீது மோதியது.
இதில் ராஜேஸ்வரி, மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது மாநகர பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய ராஜேஸ்வரி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபாமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ராஜேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அயப்பாக்கத்தை சேர்ந்த பழனி (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பகுதியில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர பஸ் மோதியதில் சாலையோரம் இருந்த வழிகாட்டி பெயர் பலகை தூண் சரிந்து விழுந்து வாலிபர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
- 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
- சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம்:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே நடிகர் சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.
- தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். இவருக்கும், அவரைப் போலவே சூர்யாவின் தீவிர ரசிகையான லாவண்யா என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமக்களுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அப்போது திடீரென கணேசின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து பார்த்த போது நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை கூறிய சூர்யா அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார். மேலும் தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக கூறினார். திருமண வரவேற்பு நடக்கும் பொழுதே சூர்யா வாழ்த்து கூறிய சம்பவத்தால் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.
தனது தீவிர ரசிகர்-ரசிகையின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம்:
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்.
- வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1-8-2022 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வாக்காளர்கள் தாமாக முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அப்போது வாக்காளர்கள் படிவம் 6B-னை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
- பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது
- மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் கீழ்கண்ட 5 இடங்களில் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்ற இடங்கள்
1. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை செய்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் ஒத்திகை பயிற்சியினை உதவி ஆணையர் (கலால்) காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது
2. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம் - புவனேஸ்வரி நகர் பகுதியில் வெள்ளத்தால் நீர் சூழ்ந்த பகுதியில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பற்றி நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லுதல் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் போன்ற மீட்பு மற்றும் நிவாரண ஒத்திகையினை கோட்டாட்சியர் திருபெரும்புதூர் தலைமையில் நடைபெற்றது.

3. வாலாஜாபாத் வட்டம், வில்லிவலம் கிராமம் பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் மற்றும் பாலாற்றில் அடித்துச்செல்லும் நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் கால்நடைகளை பாலாற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றி மருத்துவ உதவி செய்யும் ஒத்திகையானது கோட்டாட்சியர் காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது
4. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
5. காஞ்சிபுரம் வட்டம் சிட்டியம்பாக்கம் குறுவட்டம் சிங்காடி வாக்கம் தி/ள் ஸ்டால் இந்தியா தொழிற்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தொழிற்சாலை ஆய்வாளர் அவர்கள் திருப்பெரும்புதூர் மூலம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.






