என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம் தனியார் தொழிற்சாலையில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி-மயக்கம்
- தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
- உணவு சாப்பிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. சுமார் 400 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இரவு நேர பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் அனைவரும் தொழிற்சாலையில் உணவகத்தில் இரவு நேர உணவை சாப்பிட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கு வழங்கிய ரசத்தில் பல்லி விழுந்து இருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு சாப்பிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.






