என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து 82 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இதனை அகற்ற வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மார்க்கண்டேயன், தாசில்தார் பிரகாஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற ஜே.சி.பி எந்திரத்துடன் வந்தனர். இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற டி.எஸ்.பி. ஜூலியஸ்சீசர் தலைமையிலான போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றினர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டிய 82 வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதே போல் காமராஜர் நகர் பகுதியில் உள்ள குளம் அருகே 23 ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்பட்டன.அப்போது ஒரு பெண் மயக்கம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் என்பவர் சிக்கினார்.
    • மாவட்ட கலெக்டர், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் (36) என்பவர் சிக்கினார்.

    இந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து, அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    • மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை கடைக்காரர்கள் செலுத்த தவறியதால் பாக்கித் தொகை சுமார் ரூ.3 கோடி உயர்ந்துள்ளது.
    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 103 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. பஸ் நிலையத்தில் பேன்சி கடை, டீக்கடை, பழக்கடை என பல்வேறு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை கடைக்காரர்கள் செலுத்த தவறியதால் பாக்கித் தொகை சுமார் ரூ.3 கோடி உயர்ந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர். இதனால் வாடகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழரசு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்தும் மாத வாடகை செலுத்தாத 25 கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்
    • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கை, கால் இயக்க குறைபாடுள்ள 7 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.11,24,000/- மதிப்புள்ள நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மேலும் கேட்புதிறன் குறைபாடுள்ள 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,900/- மதிப்புள்ள காதொலி கருவிகள் மற்றும் மக்கள் குறை தீா்க்கும் நாளில் மனு வழங்கிய காஞ்சிபுரம் வட்டம் நாியம்புதூர் கிராமத்தை சோ்ந்த மீனா என்கிற பழங்குடி இனத்தை சோ்ந்த பெண்ணுக்கு ரூ.5,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கு.பிரகாஷ் வேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • படப்பை அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர், பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் சிவா.
    • சிவாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    படப்பை அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர், பட்டினத்தார் தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்காக திருநெல்வேலிக்கு சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை சிவாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசுக்கும், சிவாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரித்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.8ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    • குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை மனோகரன் தலைமை தாங்கினார்.
    • பாசறை கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர் சபாபதி மோகன் மாநில சுயாட்சி குறித்து பேசினார்.

    படப்பை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான படப்பை மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி முன்னிலை வகித்தார். பாசறை கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர் சபாபதி மோகன் மாநில சுயாட்சி குறித்து பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீபக் உள்பட தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து தீடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய திறந்த வெளி நிலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனம் ஒன்று சுற்று சுவர் அமைத்து சொந்தம் கொண்டாடுவதாக கூறி அங்கு அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவரை நேற்று பொதுமக்கள் இடித்துள்ளனர்.

    பின்னர் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து தீடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,

    சாலையில் நடுவே மரம், இரும்பு கம்பங்களை போட்டு சாலையிலேயே அமர்ந்தும் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நிர்மலா சீதாராமன் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.
    • மத்திய நிதி மந்திரி வருகையையொட்டி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    காஞ்சிபுரம்:

    வண்டலூர் பகுதியில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர் அவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அவருக்கு அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் தாமரை மலர்கள், வஸ்திரங்கள் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

    கோவில் நிர்வாகம் சார்பில் காமாட்சி அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஏலக்காய், முந்திரி பொருட்களான மாலை அவருக்கு அணி விக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். அவர் காமாட்சி அம்மன் கோவிலில் சுமார் 20 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார்.

    மத்திய நிதி மந்திரி வருகையையொட்டி சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    • காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி.
    • மதுபோதை தகராறில் அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி. இவர் சி.எஸ்.ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.

    இவர்களது மகன்கள் வின்சென்ட் (வயது21), ஷெர்லி ஜான்(19). இவர்களில் மூத்த மகன் வின்சென்ட், பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஷெர்லி ஜான் பச்சையப்பன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    தந்தையின் மறைவுக்கு பிறகு ஷெர்லி ஜான் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு மது போதையில் அவர் வழக்கம் போல் வீட்டுக்கு வந்தார்.

    இதனை தாய் செல்வ ராணியும், அண்ணன் வின்சென்ட்டும் கண்டித்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஷெர்லி ஜான், தாய் செல்வ ராணியை தாக்கியதாக தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த வின்சென்ட், தம்பி ஷெர்லி ஜானை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஷெர்லி ஜான் சமையல் அறையில் இருந்த காய்கள் நறுக்கும் கத்தியை எடுத்து வந்து அண்ணன் வின்சென்ட்டை சரமாரியாக குத்தினார்.

    மார்பில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த வின்சென்ட் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு தாய் செல்வராணி அதிர்ச்சி அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கல்லூரி மாணவர் வின்சென்ட் தம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வின்சென்ட்டின் உடலை மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக ஷெர்லி ஜானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    மதுபோதை தகராறில் அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 48). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டி கொண்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து சம்பத் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் வந்து பெரிய அருங்கால் கிராமத்தில் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தீபாவளி பட்டாசு விற்க உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
    • உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை தவறாமல் சமர்பிக்க வேண்டும்.

    உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    கொரோனா தொற்றை தடுப்பதற்காக 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை (11-ந்தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1,059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×