என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • தேவாலயத்தில் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உண்டியலை பெயர்த்து எடுத்துச்சென்றவர்களை தேடி வருகின்றார்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து திருடி சென்று விட்டனர். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு உண்டியலை பெயர்த்து எடுத்துச்சென்றவர்களை தேடி வருகின்றார்.

    இந்த தேவாலயத்தின் திருவிழா கடந்த வாரம் முடிவுற்றது. 2 மாதமாக இந்த உண்டியல் திறக்கப்படவில்லை என்று தேவாலய பாதிரியார் நேவிஸ் ராயர் தெரிவித்தார். மேலும் இதில் எந்த அளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை திருவிழா நடந்து முடிந்திருப்பதால் கண்டிப்பாக அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன்பும் இந்த தேவாலயத்தில் இதே போன்ற சம்பவம் 2 முறை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த அனுமதி.
    • நிலப்பயன் மாற்றம் மற்றும் திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லை வரம்பிற்குள் அமையும் காஞ்சிபுரம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த அனுமதி பெறும் வகையில் இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே, இத்திட்டத்தின் கீழ் மனைப்பிரிவு கட்டிடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் அனுமதி பெறுபவர்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பம் பதிவு செய்து கட்டிட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் நிலப்பயன் மாற்றம் மற்றும் திட்ட அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம்:

    வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கி செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான முகாம் நாளை (18-ந் தேதி) மற்றும் 25-ந் தேதியில் நடைபெற உள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • உத்திரமேரூரில் இருந்து அகரம்தூளி கிராமம் வரை செல்லும் அரசு பஸ் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது.
    • வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து பஸ் படிக்கட்டில் தொங்கியவர்களை தாக்கியுள்ளனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து அகரம்தூளி கிராமம் வரை செல்லும் அரசு பஸ் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தினந்தோறும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். தற்போது இந்த கிராமங்களுக்கிடையே இந்த அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் உத்திரமேரூரில் இருந்து புறப்பட்ட பஸ் அகரம்தூளி நோக்கி சென்று கொண்டிருந்தது. வேடபாளையம் கிராமம் அருகே சென்றபோது வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்து பஸ் படிக்கட்டில் தொங்கியவர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியது.

    தகவலறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதனால் அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த முருகன்.
    • ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த முருகன் (வயது 36) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவரது பேண்டில் அணிந்து இருந்த பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதுபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் தங்கம் இருந்ததை கண்டனர். ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டுமானபணி கட்டிடத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் கட்டுமான பொருள்களில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் இருப்பது தெரியவந்தது.
    • 3 கட்டிடங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் மண்டல சுகாதார அதிகாரி சுதா தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆலந்தூர் ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மணப்பாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதகளில் புதிதாக நடைபெறும் கட்டுமானபணி கட்டிடத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் கட்டுமான பொருள்களில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 கட்டிடங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • சக்திவேல் மோட்டார் சைக்கிளில் சேர்ப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் தண்டரை கூட்ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி மங்கலம்மாள் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் மானாமதி அடுத்த தண்டரை கூட்ரோட்டில் முடி வெட்டும் கடை நடத்தி வந்தார்.

    நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சேர்ப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்று விட்டு மீண்டும் தண்டரை கூட்ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.
    • பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்த சொன்ன ஆசாமி யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டுக்கு நேற்று விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லாததால், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்தபோது, அவரது உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனா். இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க டாலரை கொடுத்து அனுப்பி சிங்கப்பூரில் உள்ள ஒருவரிடம் கொடுத்து வர சொன்னதாகவும், அதற்காக தனக்கு விமான டிக்கெட் எடுத்து தந்து செலவுக்கு ரூ.3ஆயிரம் கமிஷன் பணம் தந்ததாகவும் கூறினாா். இதையடுத்து பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்த சொன்ன ஆசாமி யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.
    • பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்து வாழ்ந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் காஞ்சிபும் மாநகராட்சி மேயர் யுவராஜ் மகாலட்சுமி, வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடிகுமார், தேவேந்திரன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, ஜெயராஜ், திலக்குமார், வாலாஜாபாத் அரிக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் ராஜா, கவுன்சிலர் பானு பிரசாத், நகர செயலாளர் செல்வகுமார், முன்னாள் தலைவர் பா. சங்கர், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் செந்தில், சுரேஷ், அபிராமி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டார்.
    • டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்களின்றி 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகரில் இயங்கும் ஆட்டோக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? என அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது உரிய ஆவணங்களின்றி 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 65). ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது வீட்டில் கடந்த ஒரு வாரமாக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த 10-ந் தேதி ரூ.10 லட்சம் திருட்டு போனதாக கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 பேர் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து கானத்தூர் பகுதியை சேர்ந்த மார்டின் (52), சுந்தர் (62), பாபு (40) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூந்தமல்லி சேஷா நகர் பகுதியில் சுற்றி திரிந்த கொள்ளையன் சிவசந்திரன் கைது செய்யப்பட்டான்.
    • பூந்தமல்லி கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள சென்னீர்குப்பம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கொள்ளையன் ஒருவன் கைவரிசை காட்டி வந்தான். அவனை பிடிக்க ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆவடி துணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கேமரா காட்சிகளை வைத்து இரவு பணியில் இருந்த ஏட்டு பிரபாகரன், காவலர் சீனிவாசன் ஆகியோர் கொள்ளையனை அடையாளம் கண்டனர். பூந்தமல்லி சேஷா நகர் பகுதியில் சுற்றி திரிந்த கொள்ளையன் சிவசந்திரன் கைது செய்யப்பட்டான்.

    அவனிடமிருந்து 10 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. செஞ்சியைச் சேர்ந்த இவன் திருவேற்காடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்ததும் தற்போது பிரிந்து வாழ்வதும் தெரிய வந்தது.

    சிவச்சந்திரன், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து விட்டு ஆவடி பகுதியில் உள்ள பிரபல நகை வாங்கும் நிறுவனத்தில் அடமானம் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அந்த நிறுவனத்தின் பூந்தமல்லி கிளை மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தனிப்படை போலீசாரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.

    ×