என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது.
- மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்படுவது வழக்கம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் 200 கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்கொலைகள் செய்து கொண்டவர்களின் உடல்கள், சென்னை , பெங்களூரு , திருப்பதி , பாண்டிச்சேரி , செங்கல்பட்டு மார்க்கங்களில் தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 உடல்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப் படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த குளிர் சாதன பெட்டிகள் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக அதில் வைக்கப்பட்டு இருந்த உடல்கள் அனைத்தும் அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதையடுத்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்த சடலங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகிறது.
விபத்துகளாலும், தற்கொலைகளாலும் உறவினர்களை இழந்தவர்கள் உடல்களை பெற செங்கல்பட்டுக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் அலையும் நிலை உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது.
- கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அகழாய்வு பணியானது தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 1½ கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது.
மேலும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது. அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறும்போது, நத்தமேடு தென்கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.
- கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்தர் கையில் அரிவாளுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- படத்தை கைப்பற்றியுள்ள போலீசார், எஸ்தரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். 31 வயதான இவர் நடு வீரப்பட்டு 7-வது வார்டு கவுன்சிலராகவும், வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகரான எஸ்தர் என்கிற லோகேஸ்வரிக்கும் இடையே அரசியல் பகை மற்றும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
அதே பகுதியில் எஸ்தர் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சதீஷ் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே பகை அதிகரித்து மோதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் எஸ்தர் தரப்பைச் சேர்ந்தவர்கள் சதீசுக்கு போன் செய்து வரவழைத்து எஸ்தரின் வீட்டில் வைத்தே அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை வீட்டுக்கு அருகிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து சென்று சதீஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் தி.மு.க. பிரமுகரான எஸ்தருக்கும், சதீசுக்கும் இடையே இருந்த பகையே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.
சதீசை கொலை செய்து விட்டு எஸ்தரும் அவரது ஆட்களும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
இக்கொலை சம்பவத்தில் 4 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்தருடன் சேர்ந்து சதீசை தீர்த்துக் கட்டிய கொலையாளிகள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்தர் கையில் அரிவாளுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த படத்தை கைப்பற்றியுள்ள போலீசார், எஸ்தரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டன்.
- ராமாபுரம் போலீசில் புகார் செய்தார்.
போரூர்:
ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ராஜா. ஆன்லைன் டெலிவரி ஊழியர். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து ராஜா ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் கே.கே நகரை சேர்ந்த பழனி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளை திருடி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் ரூ10ஆயிரத்துக்கு விற்றது தெரிந்தது. மேலும் பிரேம்குமார் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வேலை பார்த்து வரும் தனது நண்பர்களான கதிரவன் மற்றும் ஜனார்த்தனன் மூலம் திருட்டு மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை பிரித்து நூதனமான முறையில் மாற்றம் செய்து ஆரணியை சேர்ந்த மெக்கானிக் ஸ்ரீதர் என்பவரிடம் ரூ18ஆயிரத்துக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமார், பைக் மெக்கானிக்கான கதிரவன், ஜனார்த்தனன், ஸ்ரீதர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
- மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.
ஆலந்தூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.
பின்னர் பயணிகள் விமானத்தில் அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றார். அங்கு காசி விஸ்வநாதா் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
- தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார்.
- எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக இதை தொடங்கினேன். பின்னர் இது படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்தது. சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் தொடங்கப்படும்.
தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார். அவரின் ஆசியுடன் தி.மு.க.காரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
சினிமாவில் வாய்ப்பு வருகிறது. தவிர்த்து வருகிறேன். எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கிடைத்தால் அவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு அமெரிக்கா திரும்புவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டு நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்குகிறது.
- 27-ந்தேதி முதல் 5 -ந்தேதி வரை ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை நடைபெறும்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
நவராத்திரி விழாவினை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். அதேபோன்று கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் உற்சவர் காமாட்சி அம்மன் மாலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
நவராத்திரி மண்டபத்தில் தினந்தோறும் மாலையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் போன்ற கச்சேரிகள் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் நடைபெறுகிறது.
வருகிற 26-ந்தேதி தொடங்க உள்ள நவராத்திரி விழாவில் 27-ந்தேதி முதல் 5 -ந்தேதி வரை தினந்தோறும் காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும்.
அந்த நேரத்தில் கோவில் கருவறை மூடப்பட்டிருக்கும். பின்னர் ஒரு மணிக்கு கோவில் நடை திறந்து நவாபரண பூஜையின் சிறப்பு பிரசாதமான சங்கு தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இது மிகவும் சக்தி வாய்ந்த பிரசாதம் ஆகும்.
- நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கடந்த 2021-ம் ஆண்டு, ராஜாமோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.
- சிங்கப்பூரில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
ஆலந்தூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் ராஜா மோகன் (35). இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இவருடைய மனைவி, நெல்லூா் மகளிர் போலீஸ் நிலையத்தில், வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தார்.
இதையடுத்து நெல்லூர் மகளிர் போலீசார், ராஜாமோகன் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.
நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கடந்த 2021-ம் ஆண்டு, ராஜாமோகனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.
இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
அப்போது ராஜாமோகன் வந்திருப்பதும் அவர் தேடப்படும் குற்றவாளி என்றும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜா மோகனை கைது செய்து நெல்லூா் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
நெல்லூா் மகளிர் போலீஸ் தனிப்படையினா், ராஜாமோகனை அழைத்து செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
- ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த என்ஜினியரான வாசுதேவன்.
- வாசுதேவன் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே சென்றபோது நிலை தடுமாறு மழைநீர் கால்வாய் தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் மோட்டார் சைக்கிளோடு தலைகுப்புற விழுந்தார்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், கக்கன் நகர் மெயின் ரோடு, சிட்டி லிங்க் ரோடு ஆகிய சாலைகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த என்ஜினியரான வாசுதேவன்(33) என்பவரது வீட்டின் அருகேயும் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. குடியிருப்புகள் அதிகம் உள்ள அப்பகுதியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் என்ஜினீயர் வாசுதேவன் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே சென்றபோது நிலை தடுமாறு மழைநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் மோட்டார் சைக்கிளோடு தலைகுப்புற விழுந்தார்.
இதில் அதில் இருந்த இரும்பு கம்பிகள் வாசுதேவனின் கை தோள்பட்டை மற்றும் வலது தொடையில் குத்தியதில் படுகாயம் அடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அவருக்கு 35 தையல்கள் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
- காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 9 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
- மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் திண்டாடினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 9 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் செவிலிமேடு ஜெம் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடைக்கு நேற்று இரவு வாலிபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனை கடையின் விற்பனையாளர்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பீர் பாட்டிலால் விற்பனையாளர்கள் தேவராஜ் மற்றும் முனுசாமி ஆகியோர்ரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த தேவராஜ், முனுசாமி ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மதுக்கடை விற்பனையாளர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் காஞ்சிபுரம் நகரில் இயங்கி வரும் 3 மதுக்கடைகள், செவிலிமேடு பகுதியில் 3 மதுக்கடைகள், கலியனூர், வேடல், வையாவூர், உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 3 கடைகள் என மொத்தம் 9 டாஸ்மாக் கடைகளும் உடனடியாக மூடப்பட்டது.
மதுக்கடை விற்பனையாளர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் திண்டாடினர்.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, அரசு மதுபான கடையில் வேலை செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே மதுக்கடை ஊழியர்களை தாக்கியதாக காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சேர்ந்த சுமன், பிரதாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
- விமான நிலையத்துக்காக பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற இடத்தில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
விமான நிலையத்திற்கு பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் நிலம் எடுப்பதாக தகவல் பரவியது. அதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
53வது நாளான இன்று 600க்கும் மேற்பட்ட மக்கள் ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது .
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஏகனாபுரம் கிராமத்தை நோக்கி வந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சுங்கசாவடி அருகே கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருந்தாலும் இந்த உண்ணாவிரதத்தை அமைதியான முறையில் வழிநடத்தி செல்ல இந்த மக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இந்த கிராம மக்கள் கூறுகையில், பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம். குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் எடுக்கக் கூடாது. அதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஒரு குழு அமைத்து எங்களிடம் கருத்து கேட்டு 80 சதவீத மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன்வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விமான நிலையம் அமைவதற்கு எங்கள் கிராமத்தை தேர்வு செய்யாமல் மாற்று இடத்தை அரசு முன்வந்து தேர்வு செய்ய வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.
- தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது.
- கோவில் சிற்பங்களில் உள்ள உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயன கலவை கலந்து பூசப்பட உள்ளது.
மாமல்லபுரம்:
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் நகரம், சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. இங்கு பல்லவ மன்னர்களின் கலைத்திறனால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. மேலும் மாமல்லபுரம் என்றதும் அனைவருடைய நினைவுக்கும் வருவது அங்குள்ள புகழ்பெற்ற கடற்கரை கோவில் ஆகும்.
யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக இந்த கடற்கரை கோவில் திகழ்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது ராட்சத அலை தாக்கியும் இந்த கோவிலுக்கு சிறு சேதாரம் கூட ஏற்படவில்லை. இந்த கோவிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் 3 புறமும் கடல் உட்புகும் நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் பாறாங்கற்கள் கொட்டப்பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. அந்த கற்கள் கடல் உட்புகாமல் கோவிலை பாதுகாத்து வருகின்றன. கடற்கரையில் இந்த கோவில் அமைந்திருப்பதால் உப்பு காற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் காற்றின் மூலம் உப்புத்துகள்கள் கோவில் முழுவதும் பரவி கோவிலை அரிக்கிறது. உப்பு அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழை நீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதிப்பு அதிகரிக்கிறது. அதேபோல் காக்கை, குருவி எச்சங்கள் மூலமும் பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் பிரிவு வல்லுனர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். தற்போது முதல் கட்டமாக சுத்தமான நீரில் ரசாயன கலவை கலக்கப்பட்டு அந்த நீரால் உப்பு படிமங்கள் படிந்துள்ள கடற்கரை கோவில் சிற்பம் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோவில் சிற்பங்களில் உள்ள உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயன கலவை கலந்து பூசப்பட உள்ளது.
உப்பு படிமங்கள் படிந்திருக்கும் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக 15 நாட்கள் வரை இந்த கலவை பூசப்பட்டு உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயன கலவை கலந்த நீரால் இந்த கோவிலில் படிந்துள்ள உப்பு துகள்களை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.






