என் மலர்
காஞ்சிபுரம்
- கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி.
- இதுவரை 8053 பேர் மட்டுமே (92 சதவீதம்) கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8739 பேர் உள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு) செலுத்தி கொண்ட பயனாளிகள் 26 வாரங்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 8053 பேர் மட்டுமே (92 சதவீதம்) தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.
எனவே நாளை (25-ந் தேதி) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
மும்பையை சோ்ந்தவர் நிக்மத் அலி.தொழில் அதிபர். இவா் மீது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளுடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பணமோசடி வழக்கில் தேடப்பட்ட நிக்மத் அலி வந்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
- வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆயகொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனம். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல சுதர்சனம் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி ஜானகி அதே பகுதியில் ஒரு துக்க நிகழ்வுக்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். திருப்பி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவுக்கான பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் ஜானகி புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்சா வைரஸ் காயச்சல் பரவி வருகிறது.
- உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்சா வைரஸ் காயச்சல் பரவி வருகிறது.குறிப்பாக இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைஅதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்காரணமாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.
உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் புற நோயாளிகள் பிரிவில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என 250 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த படி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் நோயாளிகள் நிரம்பிய நிலை காணப்படுகிறது.
காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.
- வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் மணிகண்டன் தெரிவித்து இருந்தார்.
- மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் அருகே உள்ள கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவரது மனைவி காவியா. கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ள மணிகண்டன் துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 19-ந்தேதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக மனைவி காவியாவிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் மணிகண்டன் வீட்டுக்கு வரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவியா, சென்னை விமான நிலையத்தில் விசாரித்தபோது, கணவர் மணிகண்டன் துபாயில் இருந்து திரும்பி வந்திருப்பதும், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான மணிகண்டனை தேடிவருகிறார்கள்.
- காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது.
- மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்படுவது வழக்கம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் 200 கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்கொலைகள் செய்து கொண்டவர்களின் உடல்கள், சென்னை , பெங்களூரு , திருப்பதி , பாண்டிச்சேரி , செங்கல்பட்டு மார்க்கங்களில் தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 உடல்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப் படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த குளிர் சாதன பெட்டிகள் பழுதடைந்து உள்ளது. இதன் காரணமாக அதில் வைக்கப்பட்டு இருந்த உடல்கள் அனைத்தும் அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதையடுத்து காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்த சடலங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகிறது.
விபத்துகளாலும், தற்கொலைகளாலும் உறவினர்களை இழந்தவர்கள் உடல்களை பெற செங்கல்பட்டுக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் அலையும் நிலை உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது.
- கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அகழாய்வு பணியானது தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 1½ கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது.
மேலும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது. அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறும்போது, நத்தமேடு தென்கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.
- கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்தர் கையில் அரிவாளுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- படத்தை கைப்பற்றியுள்ள போலீசார், எஸ்தரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். 31 வயதான இவர் நடு வீரப்பட்டு 7-வது வார்டு கவுன்சிலராகவும், வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகரான எஸ்தர் என்கிற லோகேஸ்வரிக்கும் இடையே அரசியல் பகை மற்றும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
அதே பகுதியில் எஸ்தர் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சதீஷ் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே பகை அதிகரித்து மோதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் எஸ்தர் தரப்பைச் சேர்ந்தவர்கள் சதீசுக்கு போன் செய்து வரவழைத்து எஸ்தரின் வீட்டில் வைத்தே அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை வீட்டுக்கு அருகிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து சென்று சதீஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் தி.மு.க. பிரமுகரான எஸ்தருக்கும், சதீசுக்கும் இடையே இருந்த பகையே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.
சதீசை கொலை செய்து விட்டு எஸ்தரும் அவரது ஆட்களும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
இக்கொலை சம்பவத்தில் 4 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்தருடன் சேர்ந்து சதீசை தீர்த்துக் கட்டிய கொலையாளிகள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்தர் கையில் அரிவாளுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த படத்தை கைப்பற்றியுள்ள போலீசார், எஸ்தரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டன்.
- ராமாபுரம் போலீசில் புகார் செய்தார்.
போரூர்:
ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் ராஜா. ஆன்லைன் டெலிவரி ஊழியர். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து ராஜா ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் கே.கே நகரை சேர்ந்த பழனி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளை திருடி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் ரூ10ஆயிரத்துக்கு விற்றது தெரிந்தது. மேலும் பிரேம்குமார் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வேலை பார்த்து வரும் தனது நண்பர்களான கதிரவன் மற்றும் ஜனார்த்தனன் மூலம் திருட்டு மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை பிரித்து நூதனமான முறையில் மாற்றம் செய்து ஆரணியை சேர்ந்த மெக்கானிக் ஸ்ரீதர் என்பவரிடம் ரூ18ஆயிரத்துக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமார், பைக் மெக்கானிக்கான கதிரவன், ஜனார்த்தனன், ஸ்ரீதர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
- மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.
ஆலந்தூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.
பின்னர் பயணிகள் விமானத்தில் அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றார். அங்கு காசி விஸ்வநாதா் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
- தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார்.
- எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக இதை தொடங்கினேன். பின்னர் இது படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்தது. சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் தொடங்கப்படும்.
தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார். அவரின் ஆசியுடன் தி.மு.க.காரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
சினிமாவில் வாய்ப்பு வருகிறது. தவிர்த்து வருகிறேன். எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கிடைத்தால் அவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு அமெரிக்கா திரும்புவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






