என் மலர்
காஞ்சிபுரம்
- சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ காயங்களுடன் வெளியே ஓடினர்.
- தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியது. சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ காயங்களுடன் வெளியே ஓடினர். கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் அங்கு இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் ஏற்பட்டவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போலீசார் இந்த சிலிண்டர் குடோன் அனுமதியுடன் நடத்தப்படுகிறதா? இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கும் படி ஊராட்சி செயலாளர் மொய்தீனிடம் ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 8 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
- காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன்.
- அன்புச்செல்வன் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் அன்புச்செல்வன் (வயது 19), டிப்ளமோ படிப்பு படித்துள்ள இவர், நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் உள்ள பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
- அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருட்டு போனதாக வருவாய் ஆய்வாளர் மோகனா ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் உள்ள பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக மோகனா பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி மாலை வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பின்பக்க கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருட்டு போனதாக வருவாய் ஆய்வாளர் மோகனா ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
- காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக போலீசார் சார்பில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வாங்கவும் கூடாது, வழங்கவும் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின்படி, காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் அறிவுரைகளை வழங்கினர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
- தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்படும்.
கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு இறுதி அறிக்கையினை உறுதி செய்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும். மேலும், கிராம ஊராட்சிகள், பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீநிவாஸ் போலீசிடம் சிக்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
- ஐதராபாத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஸ்ரீநிவாஸ் போலீசிடம் சிக்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீநிவாஸ் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த ஸ்ரீநிவாசை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி ஐதராபாத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிங்கப்பூர் விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து ஓரிக்கை நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மோதி மோதியது.
- காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பலியான தாய்-மகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை, பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. இவர் சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (வயது40). இவர்களது இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (வயது4).
இன்று அதிகாலை ஓரிக்கை அடுத்த மணி மண்டபம் பகுதியை சேர்ந்த உறவினரின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பழனி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.
காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து ஓரிக்கை நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மோதி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய வித்யா, அவரது மகள் பூர்ணிமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பழனி, மற்றும் அவரது மற்றொரு மகள் பூர்விகா ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய பழனி, பூர்விகாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பலியான தாய்-மகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் லாரியின் பதிவு எண்ணை வைத்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன்.
- ஆன்லைன் செயலி மூலம் ரூ.79 ஆயிரத்துக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20-ந் தேதி ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (வயது 35). ஏ.சி மெக்கானிக்கான இவர், தனது நண்பர் சுரேசுக்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடியுள்ளார்.
அப்போது ஆன்லைன் செயலி மூலம் ரூ.79 ஆயிரத்துக்கு கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20-ந் தேதி ட்ரோன் கேமரா ஆர்டர் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வந்த கேமரா பார்சலை பிரித்து பார்த்தபோது, ரூ.100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் இது குறித்து ஆன்லைன் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
- ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
- ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பாடிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 26). இவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால், மனைவி பிரியா அடிக்கடி கோபித்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த வாரம் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு தகராறு செய்த நிலையில் கோபித்து கொண்டு பிரியா தன் குழந்தையோடு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சத்தியமூர்த்தியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு சென்று திடீரென தூக்கில் தொங்கினார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை, மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சத்தியமூர்த்தி இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.
- குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர் குமரவேலு. இவரது மனைவி கலையரசி.
இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர்.
இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3-வது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச் சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார்.
வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.
அதன்படி குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.
தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்யப்பட்ட இந்த பட்டுச்சேலை 21½ முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் உள்ளது. அதில் மொத்தம் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளன. முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரெங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.
திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் இந்த பட்டுச் சேலையை விரதம் இருந்து நெசவு செய்ததாக நெசவு தொழிலாளி குமரவேலு-கலையரசி தம்பதியினர் தெரிவித்து உள்ளனர்.
- மேற்குவங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா.
- தன் உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகளுக்கு சேகர் ஹஸ்ரா நன்றியை தெரிவித்தார்.
ஆலந்தூர்:
மேற்குவங்காள மாநிலம் துர்காபூரை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா (69). இவர் இருதய நோயாளி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து வெளியே செல்லும் போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். இதை கண்ட சி.எஸ்.ஐ.எப் வீரர்கள், தங்களுடைய மேல் அதிகாரிகளுக்கும் விமான நிலைய மருத்துவர்களுக்கும் தகவல் அளித்தனர்.
டாக்டர்கள் அவருக்கு இருதய துடிப்பை மீண்டும் உயிர்த்தெழ செய்யும் சி.பி.ஆர். சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருதய துடிப்பும் வெகுவாக குறைந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
ஆனால் அங்கு இருந்த சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகள் எட்வின் சாம், வைகுண்டம் ஆகியோர் அந்த பயணியை காப்பாற்ற தொடர்ந்து அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளித்தனர். இதில் அவருக்கு மீண்டும் சுய நினைவு திரும்பியது.
இதையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவருடைய உடல் நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தன் உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகளுக்கு சேகர் ஹஸ்ரா நன்றியை தெரிவித்தார். அதுமட்டுமின்றி துரிதமாக செயல்பட்டு பயணி உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.ஐ.எப் வீரர்களை ஐ.ஜி ஸ்ரீராம் உள்பட மேல் அதிகாரிகள் பாராட்டினர்.






