என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கம், வைரம், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • திருட்டு சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அபர் ஜிந்தால் (வயது 39). டாக்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான டெல்லி அருகே உள்ள நொய்டாவுக்கு சென்றுவிட்டார்.

    பின்னர் நேற்று சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 கவுண்ட்டா்கள் முதல் கட்டமாகவும், 40 கவுண்ட்டா்கள் 2-ம் கட்டமாகவும் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
    • புதிய கவுண்ட்டர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையில் விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி ரூ.2,400 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய முனையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் முடிந்து இந்த ஆண்டு டிசம்பா் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

    சென்னை விமான நிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள், செக்-இன் கவுண்ட்டா்கள் 64 மட்டுமே உள்ளன. புதிய முனையத்தில் 140 செக்-இன் கவுண்ட்டா்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுண்ட்டா்கள் முதல் கட்டமாகவும், 40 கவுண்ட்டா்கள் 2-ம் கட்டமாகவும் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

    இந்தநிலையில் புதிய கவுண்ட்டர்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. அனைத்து கவுண்ட்டா்களுக்கும் காவி நிற வர்ணம் பூசப்படுகிறது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பயணிகளை கவரும் வகையில் புதிய வா்ணம் பூசப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வணிக நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
    • விமான நிறுவனங்களுக்கு பினாங்கு மாநிலம் கட்டண சலுகை வழங்கும்.

    ஆலந்தூர்:

    மலேசியாவின் பினாங்கு நகரில் பொழுது போக்கு மற்றும் வணிக நிகழ்ச்சிக்காக சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க மலேசியா திட்டமிட்டு உள்ளது.

    இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து பினாங்கு நகருக்கு நேரடி விமானங்களை இயக்க தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுடன் பினாங்கு சுற்றுலாத் துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    சென்னை-பினாங்கு இடையே நேரடி விமான சேவைக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பினாங்கு சுற்றுலாத் துறை மற்றும் படப்பாற்றல் பொருளாதாரத்திற்கான மாநில செயற்குழு உறுப்பினர் கூறும்போது, "தமிழகம் மற்றும் மலேசியா இடையே பாரம்பரிய உறவு உள்ளது. இதனால் குறிப்பாக சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது" என்றார்.

    பினாங்கை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது, "பினாங்கு நகர் வணிக நிகழ்ச்சிக்கான மையமாக திகழ்கிறது. வணிக நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

    சென்னை-பினாங்கு இடையே நேரடி விமான சேவை தொடங்குவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி விமானங்களை இயக்க தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கு தயாராக இருக்கும் விமான நிறுவனங்களுக்கு பினாங்கு மாநிலம் கட்டண சலுகை வழங்கும்.

    சென்னையில் இருந்து கோலாலம்பூர் வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். அதனால் கோலாலம்பூர் வழியாக பினாங்கு மாநிலத்திற்கு வரும் பயணிகளுக்கு விமான சீட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் கோலாலம்பூரில் இருந்து பினாங்கிற்கு செல்லும் பயணிகள் ஒரு மணியில் இருந்து 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றார்.

    • குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள்.
    • வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கத்தில் உள்ள கியாஸ்குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உடல் கருகினர். இதில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவரது மகள் சந்தியா, மற்றும் ஆமோத்குமார் ஆகியோர் பலியானார்கள். மேலும் 9 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு கியாஸ் ஏஜென்சி அலுவலர்கள் முன்னிலையில் குடோனில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் தீயில் கருகி இருந்தன.

    இந்த நிலையில் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கியாஸ் குடோனுக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் கியாஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் தீயணைப்பு, வருவாய்த்துறை, தடயவியல் துறை உள்ளிட்ட 5 துறையைச் சேர்ந்த குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.

    • செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார்.
    • கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

    காஞ்சிபுரம்:

    ஒரகடம் அடுத்த தேவேரியம் பாக்கத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் நேற்று முன்தினம் மாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.

    இந்த விபத்தில் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் (வயது 51), அவரது மகள்கள் சந்தியா (21), பூஜா, நிவேதா, பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஆமோத்குமார் (25), குணால், சக்திவேல், அருண், கோகுல், தமிழரசன் உள்பட 12 பேர் உடல் கருகினர்.

    அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சந்தியா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதற்கிடையே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம் இன்று காலை இறந்தார்.

    இதனால் கியாஸ் குடோன் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கியாஸ் குடோன் தீ விபத்து தொடர்பாக பலியான கியாஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், ஊராட்சி தலைவர் அஜய் உள்பட 5 பேர் மீது ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
    • புதிய நீர்த்தேக்கம் 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் 5 ஏரிகள் மற்றும் வீராணம் ஏரியை சேர்த்து 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி, அதாவது 13.22 டி.எம்.சி. நீர் சேமிக்க முடியும். சென்னை மாநகரின் மக்கள் தொகை 1 கோடியே 15 லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு தினசரி 992 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் முழுமையான அளவு குடிநீரை ஏரிகளால் எல்லா ஆண்டுகளும் வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்காக 22 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. இது 2035-ம் ஆண்டுகளில் 32 டி.எம்.சி.யாக உயரும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய நீர்த்தேக்கங்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

    சென்னையின் பெருகி வரும் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள ஒரத்தூரில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கி உள்ளது. குறிப்பாக ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் குளங்கள் மேம்படுத்தப்பட்டு 500 மில்லியன் கனஅடி அதாவது அரை டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது.

    இந்த புதிய நீர்த்தேக்கம் 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான நிலம் முழுமையாக கையகப்படுத்தும் பணி முடிந்ததும் பணிகள் தொடங்கும். வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் நிலத்தை கையகப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்தபோது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு 70 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஓரிரு வாரங்களில் நிலம் கையப்படுத்தும் பணி நிறைவடைந்துவிடும். அதன்பிறகு முழுமையான கட்டுமானம் நடத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் புதிய நீர்த்தேக்கம் தயாராகிவிடும். புதிய நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கத்துக்கு தண்ணீர் வழங்க 25 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல்களை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ காயங்களுடன் வெளியே ஓடினர்.
    • தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தால் சிலிண்டர் வெடிக்க தொடங்கியது. சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஊழியர்கள் அலறியடுத்து தீ காயங்களுடன் வெளியே ஓடினர். கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பரவ தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் அங்கு இருந்த பூஜா (வயது 19), கிஷோர் (13), கோகுல் (22) உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் ஏற்பட்டவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ஒரகடம் போலீசார் இந்த சிலிண்டர் குடோன் அனுமதியுடன் நடத்தப்படுகிறதா? இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 127 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கும் படி ஊராட்சி செயலாளர் மொய்தீனிடம் ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 8 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    • காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன்.
    • அன்புச்செல்வன் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மகன் அன்புச்செல்வன் (வயது 19), டிப்ளமோ படிப்பு படித்துள்ள இவர், நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் உள்ள பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
    • அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருட்டு போனதாக வருவாய் ஆய்வாளர் மோகனா ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் உள்ள பட்டு நூல் சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக மோகனா பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி மாலை வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பின்பக்க கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை திருட்டு போனதாக வருவாய் ஆய்வாளர் மோகனா ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
    • காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக போலீசார் சார்பில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளில் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வாங்கவும் கூடாது, வழங்கவும் கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின்படி, காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலையம், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் போலீசார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் அறிவுரைகளை வழங்கினர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்படும்.

    கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு இறுதி அறிக்கையினை உறுதி செய்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட தீர்மானங்கள் உள்ளிட்டவை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும். மேலும், கிராம ஊராட்சிகள், பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×