search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது
    X

    காஞ்சிபுரம் அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

    • உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜானகி ராமன் பழுதை நீக்க முயற்சி மேற்கொண்டு இருந்தார்.
    • வழிப்பறிக்கு பயன்படுத்திய உயர்தர பைக், ஜானகி ராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ள கேட் பகுதியில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று பழுதடைந்தது.

    இதனால் சர்வீஸ் சாலையில் வைத்து உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜானகி ராமன் பழுதை நீக்க முயற்சி மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது பைக்கில் வந்த 3 இளைஞர்கள் ஜானகிராமனிடம் பட்டாக் கத்தியை காண்பித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு 3 பேரும் தப்பி ஓடினார்கள். அவர்கள் தப்பி செல்லும்போது மோட்டார்சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த வாலிபரை ஜானகிராமன் பிடித்து இழுக்க முயற்சித்தார். அப்போது அந்த இளைஞரின் செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை கவனிக்காமல் வழிப்பறி செய்த 3 இளைஞர்களும் பைக்கில் ஏறி தப்பினர்.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த், உதவி ஆய்வாளர் துளசி ஆகியோர் மர்ம நபர்கள் தவறவிட்ட செல்போனை கைப்பற்றி அதன் மூலம் தப்பி ஓடிய மர்ம நபர்களின் செல்போன்களை டிராக் செய்தனர்.

    அதேபோல் கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து அவர்கள் 3 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் பகுதியில் உள்ள பாலாற்று படுகையில் பதுங்கி இருப்பதை கண்டறிந்து அவர்களைப் பிடிக்க முன்றனர்.

    3 இளைஞர்களும் கழனி, ஏரி, ஆறு போன்றவற்றில் குதித்து தப்ப முயன்ற போதும் காவல்துறையினர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விடாப்பிடியாக சினிமா படத்தில் வருவது போல விரட்டி சென்று 3 பேரையும் கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட 3 பேரில் படுநெல்லி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது என்பது, அதே போல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசிக்கும் மணிகண்டன் (24), அர்ஜுனா (25) ஆகியோர் மீது 10-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளது என்பதும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய உயர்தர பைக், ஜானகி ராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இவர்களை கைது செய்ய போலீசார் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சினிமா படத்தில் வருவது போன்று விறுவிறுப்பாக இருந்தது என அப்பகுதி விவசாய மக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×