என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தலைமறைவு"

    • கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்தர் கையில் அரிவாளுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    • படத்தை கைப்பற்றியுள்ள போலீசார், எஸ்தரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். 31 வயதான இவர் நடு வீரப்பட்டு 7-வது வார்டு கவுன்சிலராகவும், வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகரான எஸ்தர் என்கிற லோகேஸ்வரிக்கும் இடையே அரசியல் பகை மற்றும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    அதே பகுதியில் எஸ்தர் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் சதீஷ் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் இருவருக்கும் இடையே பகை அதிகரித்து மோதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் எஸ்தர் தரப்பைச் சேர்ந்தவர்கள் சதீசுக்கு போன் செய்து வரவழைத்து எஸ்தரின் வீட்டில் வைத்தே அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை வீட்டுக்கு அருகிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து சென்று சதீஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் தி.மு.க. பிரமுகரான எஸ்தருக்கும், சதீசுக்கும் இடையே இருந்த பகையே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

    சதீசை கொலை செய்து விட்டு எஸ்தரும் அவரது ஆட்களும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    இக்கொலை சம்பவத்தில் 4 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்தருடன் சேர்ந்து சதீசை தீர்த்துக் கட்டிய கொலையாளிகள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்தர் கையில் அரிவாளுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த படத்தை கைப்பற்றியுள்ள போலீசார், எஸ்தரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ×