என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவரை குத்திக் கொன்ற தம்பி
- காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி.
- மதுபோதை தகராறில் அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி. இவர் சி.எஸ்.ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.
இவர்களது மகன்கள் வின்சென்ட் (வயது21), ஷெர்லி ஜான்(19). இவர்களில் மூத்த மகன் வின்சென்ட், பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஷெர்லி ஜான் பச்சையப்பன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
தந்தையின் மறைவுக்கு பிறகு ஷெர்லி ஜான் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு மது போதையில் அவர் வழக்கம் போல் வீட்டுக்கு வந்தார்.
இதனை தாய் செல்வ ராணியும், அண்ணன் வின்சென்ட்டும் கண்டித்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஷெர்லி ஜான், தாய் செல்வ ராணியை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த வின்சென்ட், தம்பி ஷெர்லி ஜானை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஷெர்லி ஜான் சமையல் அறையில் இருந்த காய்கள் நறுக்கும் கத்தியை எடுத்து வந்து அண்ணன் வின்சென்ட்டை சரமாரியாக குத்தினார்.
மார்பில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த வின்சென்ட் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு தாய் செல்வராணி அதிர்ச்சி அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கல்லூரி மாணவர் வின்சென்ட் தம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வின்சென்ட்டின் உடலை மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ஷெர்லி ஜானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மதுபோதை தகராறில் அண்ணனை தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






