என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 300 பவுன் நகை, ரூ.20 லட்சம் பணம் கொள்ளை
- கணபதியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா ஏதும் பொருத்தப்படவில்லை.
- சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் வீடுகளில் கண்காணிப்பு கேமரா இல்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே கடலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 52). தி.மு.க.வை சேர்ந்த இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று அமாவாசை என்பதால் கணபதி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் ராமேசுவரத்துக்கு சென்றார். தரிசனம் முடித்துவிட்டு இன்று காலையில் அவர் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் லாக்கரும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 300 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
கணபதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதை அடுத்து பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளனர்.
பின்னர் உள்ளே புகுந்து பீரோ மற்றும் லாக்கரை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கணபதியிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
கணபதியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா ஏதும் பொருத்தப்படவில்லை. மேலும் சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் வீடுகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே கொள்ளையர்களை பிடிப்பதற்காக அந்த கிராம மக்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






