என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
- கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வாய்க்கால் நீர் நிலை பகுதியில் 64 வீடுகள் கட்டப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற அதிகாரிகள் சார்பில் குடியிருப்புவாசிகளுக்கு சில மாதங்களுக்கு முன் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து ஆகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடித்து அகற்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., குன்றத்தூர் தாசில்தார், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி தான் வீடுகளை இடிந்து அகற்றி வருகிறோம் என தெரிவித்தனர். இதன் தொடர்ந்து 54 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் இடிக்கப்படாமல் இருந்த 10 வீடுகளை நேற்று இடித்து அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. சைலேந்திரன், குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், கண்ணன், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.






