என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு தம்பியை வழியனுப்ப வந்த அக்கா திடீர் மரணம்
- சென்னை விமான நிலைய போலீசார் சுப்ரியாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தம்பியை வழியனுப்ப வந்த அக்கா திடீரென உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:
திருவள்ளூர் அருகே உள்ள கனகம்மாசத்திரத்தை சேர்ந்தவர் கிரண் குமார். இவரது மனைவி சுப்ரியா (35). இவருடைய தம்பியான என்ஜினீயர் வெங்கட் ராஜேசுக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்து உள்ளது.
பணியில் சேருவதற்காக இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானத்தில் செல்ல வெங்கட் ராஜேஷ் சென்னை விமான நிலையத்திற்கு வந்தாா். அவரை வழி அனுப்புவதற்காக அக்காள் சுப்ரியா, அவரது கணவர் கிரண்குமார் ஆகியோரும் உடன் வந்து இருந்தனர்.
அவா்கள் சிறிது நேரம் விமானநிலைய வளாகத்தின் வெளியே நின்றபடி வெங்கட்ராஜேசுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெங்கட்ராஜேஷ் விமான நிலையத்திற்குள் சென்றார்.
அப்போது சுப்ரியாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் கிரண்குமார், விமான நிலையத்துக்குள் சென்ற வெங்கட்ராஜேசுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் பதறி அடித்தபடி வெங்கட் ராஜேஷ் வெளியே ஓடி வந்தார்.
இதற்குள் இதுபற்றி அறிந்த அங்கிருந்த விமான நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து சுப்ரியாவை மீட்டு விமானநிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக சுப்ரியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை கண்டு தம்பி வெங்கட் ராஜேஷ் கதறி அழுதார். மேலும் அவர் பிரான்ஸ் செல்ல இருந்த, பயணத்தையும் ரத்து செய்தார். சென்னை விமான நிலைய போலீசார் சுப்ரியாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






