என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.
    • குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.

    ஆலந்தூர்:

    குவைத்தில் இருந்து பயணிகள் விமானம், தினமும் இரவு 11:05 மணிக்கு புறப்பட்டு, காலை 6:55 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும்.

    இந்த நிலையில் நேற்று இரவு குவைத்தில் இருந்து 158 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது சரி செய்யப்பட்டு தாமதமாக, நள்ளிரவு 11:51 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் குவைத்தில் தரை இறக்கப்பட்டது.

    இதனால் குவைத்தில் இருந்து சென்னை வரும் பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். குவைத் விமானம் தாமதமாக வரும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் எப்போது வரும் என்ற முறையான தகவல் எதுவும், விமான நிலையத்தில் அறிவிக்கவில்லை என்று பயணிகளை வரவேற்க வந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

    • துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது.
    • பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த ஜோபன்பிரீத் சிங்(22) என்பவர் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், காரணை மற்றும் ராவத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு ரூ.15.60 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் 2 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவில் 80 ஆயிரம் புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.
    • சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் கடந்த 23-ந் தேதி தொடங்கிய புத்தக கண்காட்சி நேற்று வரை நடைபெற்றது.

    மொத்தம் 104 அரங்குகள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. புத்தக திருவிழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    1 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் புத்தக திருவிழாவினை பார்வையிட்டு உள்ளனர். மேலும் 80 ஆயிரம் புத்தகங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புத்தக கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பாக பணிபுரிந்த 149 அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றியக் குழுத்தலைவர். மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர், சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய குழுத் துணைத் தலைவர் நித்தியா சுகுமார் கலந்து கொண்டனர்.

    • உருமாறிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் :

    காஞ்சீபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பில் ஶ்ரீபெரும்புதூர், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், வளத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடங்கள், திருப்புட்குழி சித்த மருத்துவப் பிரிவு கட்டிடம், பரந்தூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நர்சு குடியிருப்புகள், மானாமதி புறநோயாளி பிரிவு கட்டிடம் உள்ளிட்ட ஒன்பது புதிய கட்டிடங்கள் திறப்பு விழா ஶ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உருமாறிய கொரோனா வைரஸ்தான் தற்போது சீனா மட்டுமல்ல தைவான், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் பெருமளவில் பரவி வருகிறது. சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் உயிர் இழப்பு எதுவும் இல்லை என தெரிகிறது, இருப்பினும் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை, கொரோனா வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    விழாவில் மருத்துவம் பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, மற்றும் மருத்துவ துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் காஞ்சிபுரம் பஸ்நிலைய பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார்.
    • போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அனைவருடனும் புத்தாண்டு கொண்டாடினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

    கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் காஞ்சிபுரம் பஸ்நிலைய பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார்.

    புத்தாண்டு பிறந்ததையொட்டி அங்கு நின்றிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் ஒருவருக்குகொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர்கள் ரோந்து பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கும் வாழ்துக்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அனைவருடனும் புத்தாண்டு கொண்டாடினார். பின்னர் அவர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கேக், இனிப்புகள் வழங்கினார்.

    • விபத்தால் காஞ்சிபுரம்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    திருச்சியை சேர்ந்தவர் விக்கேஷ். இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் காரில் காளஸ்த்திரி சென்றுவிட்டு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

    காஞ்சிபுரம் வழியாக செவிலிமேடு பகுதியை கடந்து பாலாற்று மேம்பாலத்தில் சென்றி கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கோழி ஏற்றி சென்ற மினிலாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த விக்கேஷ், 2குழந்தைகள் மற்றும் டிரைவர் ஆகிய 4பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்தால் காஞ்சிபுரம்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1 லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்து உள்ளனர்.
    • அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 559 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.44.91 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    நம் சமுதாயத்தில் ஆண்களை போல பெண்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரி மாவட்டத்தில் 1989-ம் ஆண்டு மகளிர் சுயஉதவி குழு திட்டத்தை தொடங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2022-2023 ஆண்டிற்கு வங்கிக் கடன் உதவி ரூ.500 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 5,884 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.324 கோடியே 91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாநில அளவில் கடந்த 2021-22ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கபட்டுள்ளது.

    இதன்மூலம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன் அடைந்துள்ளனர். 2022-2023ல் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,559 சுய உதவிக் குழுக்களில் உள்ள 16,474 உறுப்பினர்களின் ரூ.37.75 கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தி அந்த திட்டங்கள் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேமலதா ஞானசேகர், துணைத்தலைவர் வசந்தி குமார் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
    • வேளாண்மை துறை சார்பில் 3 பேருக்கு இடுப் பொருட்கள் முழு மானியத்துடன் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 11 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 951 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    வேளாண்மை துறை சார்பில் 3 பேருக்கு இடுப் பொருட்கள் முழு மானியத்துடன் வழங்கப்பட்டது. 2 விவசாயிகளுக்கு விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பில், அங்ககச்சான்று வழங்கப்பட்டது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான ஆணை 2 நபர்களுக்கும், முருங்கை விதைப்பொருள் 1 நபருக்கும் மற்றும் வெண்டை விதைப்பொருள் 1 நபருக்கும் வழங்கப்பட்டது. வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் பவர் டில்லர் எந்திரமும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத் ரய்யா, மண்டல வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • முதியவரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் அவர் பணப்பையை தர மறுத்ததால் 100 மீட்டர் தூரம் தரதரவென்று இழுத்து சென்றனர்.
    • ரத்தினகரனை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினகரன் (வயது 66). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலூரில் இருந்து வாலாஜாபாத் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடையில் வசூலான ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை பெற்று கொண்டு வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரத்தினகரன் கையில் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ரத்தினகரன் பணப்பையை விட மறுக்கவே அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு முதியவரை 100 மீட்டர் தொலைவுக்கு சாலையில் தரதரவென இழுத்து சென்று பணப்பையை பறித்து சென்றனர்.

    இதில் காயம் அடைந்த ரத்தினகரனை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரிடம் விவரங்களை கேட்டறிந்து வழிப்பறியில் ஈடுபட்ட யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள் வழங்கினார்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் கட்சியின் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தம்மன் தலைமையில் நடந்தது.

    காஞ்சிபுரம் மாநகர தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கலந்து கொண்டு பள்ளி மாணவனுக்கு மிதிவண்டி, மாற்று திறனாளிகள் 3 பேருக்கு வண்டி, கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள்,தொழில் செய்ய முனைவோருக்கு அவர்கள் விரும்பிய தொழில் செய்ய உதவும் உபகரணங்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் சங்கர், நகர தலைவர் சுகுமார், வட்டார தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.

    காஞ்சிபுரம்:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினக்கரன்(66). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால் அவர் பணப்பையை விடாமல் பிடித்ததால் சுமார் 100 மீட்டருக்கு மேல் சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். பின்னர் அவரை தாக்கி பணத்தை பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் முதியவர் ரத்தினக்கரன் பலத்த காயம் அடைந்தார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×