என் மலர்
காஞ்சிபுரம்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.
- அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது.
ஆலந்தூர்:
வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8 மணி வரை பனியின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் காட்சி அளித்தது.
வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றன. தாம்பரம், ஓரகடம், படப்பை, ஆலந்தூர், மீனம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் மும்பை மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த விமானங்கள் சென்னைக்கு சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது.
இதேபோல் சென்னையில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்களும் தாமதமாக சென்றன.
- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
- அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்து உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் பையைத் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவை ஆப்பிரிக்க நாட்டு வனப்பகுதி மற்றும் அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குரங்கு குட்டிகள் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது. குறிப்பாக மற்ற நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடமும், இந்திய வனவிலங்கு துறையிடமும் தடையில்லா சான்றிதழ் அனுமதி பெற்றதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.
இது போன்ற எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 2 குரங்கு குட்டிகளையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், குரங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
- உள்நாட்டு முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை தள்ளி செல்லும் டிராலியில் முழுதேங்காய் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் மத்திய தொழிற்படை போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை தள்ளி செல்லும் டிராலியில் முழுதேங்காய் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தேங்காயை கைப்பற்றி வெடிகுண்டு சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.
பயணி தவறுதலாக தேங்காயை தவற விட்டு சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அதிகாரிகளும், பயணிகளும் நிம்மதி அடைந்தனர். பின்னர் வழக்கம்போல் உள்நாட்டு முனையம் சுறுசுறுப்பாக இயங்கியது. கேட்பாரற்று கிடந்த தேங்காயால் சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள்.
- பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர்.
ஆலந்தூர்:
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக கூறி, அதை கண்டித்து ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் சித்தீக், சையத் அலி முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜமாஅத் தலைவர் பாக்கர், திருமுருகன் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில், பா.ஜ.க.வை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளாக ஒன்று சேர மறுக்கிறார்கள். அவர்களை ஓரணியில் திரள விடாமல் பாரதிய ஜனதா கட்சி செய்கிறது. அவர்களுக்கு எதிராக கூட்டணி சேரும் கட்சிகளை சிதறடித்து விடுவார்கள். அ.தி.மு.க. தற்போது மூன்று அணியாக சிதறி கிடப்பதற்கு பா.ஜனதா தான் காரணம். பா.ஜ.க. தலையிடாமல் இருந்து இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அ.தி.மு.க.வாக இருந்து இருக்கும்.
பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைத்தனர். தற்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர். அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள். அதற்குள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தவறினால் மீண்டும் 2024-ல் ஆபத்து ஏற்படும் என கூறினார்.
- அரிசி வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
- காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கணிகண்டீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 39). இவர் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை செவிலிமேடு பி. எஸ்.கே நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அரிசி வியாபாரம் செய்து வைத்திருந்த ரூ.13 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இளங்கோவன் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
- கூரம்-வதியூர் சாலையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களை பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த கூரம்-வதியூர் சாலையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கூரம்-வதியூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில், ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களை பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் கூரம் கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (20), ஜனா (20) என்பதும், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
- விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது.
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55-வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பாக
காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் கூறியதாவது:-
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதியாக இருந்து வருபவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்தர்களின் துயர்களை தீர்த்து வரும் இவரது 55-வது ஜெயந்தி உற்சவம் வருகிற 18-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பிப்ரவரி 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்களும் சதுர்வேத பாராயணம், வித்வத் சதஸ், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாமசங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற உள்ளது.
18-ந்தேதி ஜெயந்தி நாளன்று ஸ்ரீருத்ர பாராயணம்,ஹோமங்கள் மற்றும் சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ அலங்காரங்களும் நடைபெற உள்ளது.
தற்சமயம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் விஜேயந்திரர் உள்ளார். அங்கும் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி உற்சவத்தையொட்டி சரஸ்வதிக்கு 18-ந்தேதி வெள்ளி வீணை சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் சரஸ்வதிக்கு வெள்ளி வீணை காணிக்கையாக கொடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளன்று சங்கர மடத்தில் சுத்தமான விபூதி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பசுவின் சாணத்தில் வைதீகமாக செய்யப்பட்ட சாம்பலை விபூதியாக்கி, சலித்து மிருதுவானதாகவும், சுத்தமானதாகவும் மாற்றப்பட்டு விபூதி தயாரிக்கப்படுகிறது. இவை 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் உடன் இருந்தார்.
- இந்த விழா நாளை வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்திபெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைபூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று மாலை மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்றது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும். இந்த தெப்பத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் வெள்ளீஸ்வரர், காமாட்சி அம்மன், வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார்கள்.
அதன்படி நேற்று இரவு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பின்னர் காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் காமாட்சி அம்மன், யானை வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ரூ.40½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.
- 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர்.
அவரிடம் இருந்து ரூ.74 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 460 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த 2 வாலிபர்களின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த கைப்பையில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தன. அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள யூரோ, பவுண்டு, திர்காம்ஸ் ஆகிய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
- அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர்.
- அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சிபுரம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து அமைதி பேரணியாக சென்றனர். அவர்கள், காந்தி ரோடு, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, இரட்டை மண்டபம் வழியாக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்கள்.
இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், எஸ்.கே.பி. சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், படுநேல்லிபாபு பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ஏ.இளங்கோவன், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வம்,ஜெகநாதன், சுப்புராயன் , நிர்வாகிகள் அப்துல் மாலிக், யுவராஜ் சிகாமணி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், , பகுதிச் செயலாளர்கள் எம்.பி. ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு இல்லத்தில் மாவட்ட செயலாளர் வளையாபதி, நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான பெர்ரி தலைமையில் மாவட்டத் தலைவர் தண்டபாணி, நகர தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் முரளி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சிவருத்ரையா மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம்.
- 5 திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் கார்பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது.
அதைதொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து காத்து இருக்கும் பயணிகள், சென்னை வந்து மாற்று விமானத்துக்காக அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்க வந்து காத்திருப்பவர்களுக்காக 5 திரைகள் கொண்ட திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது.
இந்த திரையரங்கை நடிகர்கள் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் நடன நிகழ்ச்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். 5 திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். மேலும் கூடிய விரைவில் உணவு விடுதிகள், சில்லறை கடைகள் திறக்கப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் 13-வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.
- ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை.
மீனம்பாக்கம்:
அசுர பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்க வலிமையான வேட்பாளர் வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்பு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் 13-வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தற்போது இலங்கை சூழல் மாறி கொண்டு இருக்கிறது. வடகிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13-வது அட்டவணையில் உள்ள போலீஸ், வருவாய் ஆகிய 2 அதிகாரங்களை தரவேண்டும் என கேட்டு கொண்டு உள்ளனர்.
இலங்கை சென்றபோது ரணில் விக்கரம சிங்கேவை இந்திய வெளியுறவு துறை மந்திரி சந்தித்து விட்டு வந்தார். வெளியுறவு மந்திரியை சந்தித்து இலங்கையில் வருவாய், போலீஸ் அதிகாரத்துடன் கூடிய 13-வது அட்டவணையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்.
ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை. அசுர பலம், பண பலம், படை பலம், ஆள் பலம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடிய தி.மு.க.வை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் ஒரு வலிமையான வேட்பாளர் வேண்டும். இன்னும் 2 நாட்களில் நாங்கள் சொல்லும் வரை பொறுமையாக இருங்கள்.
கூட்டணி பெயரை ஏன் மாற்றினார்கள்? என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். காலையில் இருந்த கூட்டணி பெயர் 6 மணி நேரத்தில் எப்படி மாறியது என்பது தெரியவில்லை?. அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் என்னிடம் பேசும் போது பிரிண்டிங் பிழை என்றார்கள். மோடி படம் இல்லை என்பதை பேனர் வைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். நிறைய பேர் களத்தில் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ பதில் விரைவில் சொல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






