என் மலர்
காஞ்சிபுரம்
- தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பட்டு வருகிறது.
- தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வழியாக மனவளச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையானது மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பட்டு வருகிறது.
தற்போது பயனாளிகளில் சுய விவரங்களான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் புகைப்படம்-1 மனவளர்ச்சி குன்றியோரயிருப்பின் பெற்றோர்ருடன் இணைந்த புகைப்படம்-1 தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
தாங்கள் டிசம்பர்-2022 மாதம் வரை பராமரிப்பு உதவித்தொகை பெற்று, ஜனவரி-2023 மாதம் உதவித்தொகை பெறாதவர்கள் மட்டும், பராமரிப்பு உதவிதொகை தொடர்ந்து பெறவேண்டுமாயின் தாங்கள் உடனடியாக மேற்கானும் சான்றுகளை, இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம் (அலுவலக தொலைபேசி எண்:-044-29998040 என்ற அலுவலகத்தில் இந்த மாதம் 17-ந்தேதி (வெள்ளிகிழமை)-க்குள் சமர்பித்து தங்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
- ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 1½ ஏக்கர் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில் குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோமங்கலம் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைத்திருந்த நிலத்தை பார்வையிட்டனர்.
அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
அப்பகுதியில் அரசு சார்பில் அறிவிப்பு பெயர் பலகையை அதிகாரிகள் வைத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.
- வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.
காஞ்சிபுரம்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்பநல, தொழிலாளர் நல வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி, நில எடுப்பு, வங்கி வழக்குகள் போன்ற அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.
எனவே பொதுமக்கள் வழக்காளிகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தங்களது வக்கீல்கள் மூலம் வழக்குகளை மக்கள் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து சமரசம் பேசி தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கி கடன் வழக்குகள் தொடர்பாக நேரடியாக மனு அளித்தும் மேற்கூறிய தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாளில் சமரசம் பேசி வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.
செங்கல்பட்டு மவாட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், ஆலந்தூர், பல்லாவரம், திருக்கழுக்குன்றம் ஆகிய நீதிமன்றங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.
எனவே பொதுமக்கள் வழக்காடிகள் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த நீதி மன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் முறையிட்டு சமரசம் செய்து கொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து வைக்கப்படும் வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
- ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு தெர்மாகோல் மொத்தமாக வாங்கி சேமித்து தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு இந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. அக்கம்பக்கத்தினர் வந்து குடோனை பார்த்தபோது தீ பிடித்து மளமளவென எரிய துவங்கி குடோன் முழுவதும் பரவியது. தகவல்பேரில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரிய வந்துள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது.
- நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி காணப்படும் நரிக்குறவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழுவாக தங்கி உள்ளனர். அவர்கள் தாங்கள் செய்யும் பாசிமணி,வளையல், செயின் உளிட்ட பொருட்களை சாலை ஓரங்கள், திருவிழாகள், பஸ் நிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்வது வழக்கம்.
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களை விற்பனை செய்யவும், அதனை அனைத்து இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து உள்ளார்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ரீட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் மணிமாலை கோர்த்தல், பட்டுநூலில் தயாரித்த வளையல், கவரிங் நகைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பொருட்களை விற்பனை செய்யும் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது. இதனை நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

நகை கடைபோல் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் இந்த கடையில் புதிய மாடல்களில் மனதுக்கு பிடித்த வளையல், செயின்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பொருட்கள் தரமானதாக பிராண்ட் நிறுவனம் போலவே காட்சி அளிக்கிறது.
இந்த மையத்தில் பணியில் உள்ள நரிக்குற பெண்கள் கோட் அணிந்து புதிய தோற்றத்தில் விற்பனை செய்கிறார்கள். இதுவும் பொதுமக்களை மிகவும் கவர்ந்து உள்ளது.
இதன் மூலம் கலெக்டர் ஆர்த்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களுக்கு புதி பிராண்ட் உருவாகி இருக்கிறது. இதனால தங்களது வாழ்வாதாரம் உயரும் என்று நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடையில் மட்டும் அல்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான பட்டுசேலை கடைகளிலும் நரிக்குறவர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முழுக்க, முழுக்க பட்டு நூலில் செய்யப்படும் அணிகலன்கள் என்பதால்பட்டுச்சேலை வாங்குபவர்கள் இதனையும் வாங்குவார்கள் என்றனர்.
- 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
- ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது.
மீனம்பாக்கம் :
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது என கூறும் பிரதமர் மோடி, அப்போது ஏன் இங்கு இதுவரை தேர்தல் நடத்தவில்லை. ஜனநாயக திருவிழா கொண்டாட வேண்டும் என்றால் எங்களுக்கு ஜனநாயகத்தை தர வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்பவங்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஜம்மு நகரில் குண்டு வெடிப்பு நடந்தது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
- சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் மிக்சி கிரைண்டர் இருந்ததால் அதை சந்தேகத்தின் பேரில் கழற்றி சோதனை செய்தனர். அப்போது கிரைண்டரில் தங்கத்தை வளைய வடிவத்தில் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இவரிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் தங்கத்தை கம்பி போல் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 383 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட தங்க கம்பிகளையும் கண்டுபிடித்து, அவரிடமிருந்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.நேற்று ஒரே நாளில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 953 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
- திருவள்ளூர் புதுநகரத் திட்டத்தின் கீழ் 11 வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.
- மீஞ்சூர் புதுநகரத் திட்டத்தின் கீழ், வாலூர், அத்திப்பட்டு, எண்ணூர், நந்தயம்பாக்கம், கொலாட்டி, அரியன்வாயல், மீஞ்சூர், கொளஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், நெய்தவாயல், புழுதிவாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம்:
வீட்டு வசதி துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் புதுநகரத் திட்டத்தின் கீழ் 11 வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள், திருப்பதி சாலை ஆகியவை வருகின்றன. மொத்தம் 37.74 சதுர கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன.
இதையடுத்து, திருவள்ளூர் புதுநகர திட்டத்தில் பாலேஸ்வரம், அத்துப்பாக்கம், அரியபாக்கம், எல்லாபுரம், ரல்லபாடி, பெரியபாளையம், சித்தாரியம்பாக்கம், மூக்கில்பட்டு, வடமதுரை, பணப்பாக்கம், வேலப்பாக்கம் ஆகியவை இணைக்கப்படுகின்றன.
அதேபோல காஞ்சிபுரம் புதுநகர திட்டத்தின் கீழ், ஏனாத்தூர், நல்லூர், பாப்பன்குழி, வையாவூர், கலையனூர், புத்தேரி, மேலாம்பி, கீழாம்பி, சித்தேரிமேடு, கோனேரிக்குப்பம், திருமால்படி தாங்கல், கீழ்கதிர்பூர், திம்ம சமுத்திரம், கருப்படி தட்டடை, அச்சுக்காடு, நெட்டேரி, அரப்பஞ்சேரி, சிறுகாவேரிபாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.
இந்த இணைப்பு தொடர்பான கருத்துக்களையும், ஆட்சேபனைகளையும் 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கலாம்.
மேலும் மீஞ்சூர் புதுநகரத் திட்டத்தின் கீழ், வாலூர், அத்திப்பட்டு, எண்ணூர், நந்தயம்பாக்கம், கொலாட்டி, அரியன்வாயல், மீஞ்சூர், கொளஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், நெய்தவாயல், புழுதிவாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், தங்களது ஆட்சேபனைகள், கருத்துக்களை 2 மாதங்களுக்குள் "அரசு செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.
- விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கரில் அமைய உள்ளது.
இந்த புதிய விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள், 2 பயணிகள் முனையங்கள், சரக்குகள் கையாளும் முனையம் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்க்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் புதிய விமான நிலைய கட்டுமான பணிக்கு விவசாய நிலங்கள், நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.
இதுகுறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் நிறுவனத்தினர் கூடுதல் அவகாசம் கேட்டதால் கடந்த திங்கட்கிழமை (6-ந்தேதி) இறுதி செய்யப்பட இருந்த டெண்டர் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு முன்பும் ஏற்கனவே ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்க போதுமான அவகாசம் இல்லை என்று கூறப்பட்டதால் இந்த மாத இறுதி (27-ந்தேதி) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'புதிய விமான நிலையம் அமைய உள்ள கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே திட்டத்தில் எந்த பாதிப்பும் வராது. விமான நிலையம் கட்டுவதற்கான விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கையை மேற்கொள்ள ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட இருந்தது. திட்டத்தை உருவாக்கி விண்ணப்பிக்க போதுமான நேரம் இல்லை என்று அவகாசம் கேட்டதை அடுத்து வருகிற 27-ந்தேதி வரை டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் உள்ள சுமார் 10 ஷரத்துகளில் அரசு சிறிய திருத்தங்களைச் செய்துள்ளது என்றனர்.
- கடந்த 6 மாதங்களாக கோபால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் புல்லலூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 67). இவர் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்காஞ்சிபுரம்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து காஞ்காஞ்சிபுரம்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது.
- அலாவுதீன், வாகித் ஆகியோர் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முகநூலில் இருந்து துணை நடிகை பெயரில் நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் கனா தர்ஷனின் பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய பேஸ்புக் பக்கத்தில் இருந்து விடுக்கப்பட்ட நட்பு அழைப்பை ஏற்று இளம்பெண்ணும் முகநூல் வழியாக பழக தொடங்கினார்.
அப்போது முகநூல் வழியாக இளம்பெண்ணுக்கு சினிமா, தொலைக்காட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் நினைத்தால் உங்களையும் பெரிய நடிகையாக்க முடியும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவித்து உள்ளனர். உங்களது போட்டோக்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் நடிகையாக தேர்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி சினிமா நடிகையாகும் ஆசையில் இளம்பெண் தனது விதவிதமான போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதன்பிறகு இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி 2 பேர் மிரட்டி உள்ளனர். இதன்பிறகே சினிமா நடிகர் பெயரில் தொடங்கப்பட்டது போலி கணக்கு என்பது தெரிய வந்துள்ளது.
நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது. இருவரும் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளனர். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் பணம் பறித்த சகோதரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அண்ணன்-தம்பி இருவரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரும் ஈரோட்டில் பி.பி.அக்ரகாரம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அலாவுதீன், வாகித் இருவரும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இதையடுத்து இருவரது செல்போன்கள், அவர்கள் பயன்படுத்திய லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் இருந்தன.
இதனை கைப்பற்றிய போலீசார் ரகசியமாக அப்பெண்களிடமும் புகார்களை வாங்கி மேல் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
- மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
- நிர்மலாவின் மனித நேய உதவியை பலரும் பாராட்டினார்கள்.
காஞ்சிபுரம்:
கண்முன்னால் ஒருவர் உயிருக்கு போராடினால் கூட நமக்கேன் வீண் வேலை என்று அந்த இடத்தைவிட்டு கடந்து செல்பவர்கள்தான் அதிகம்.
அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் விஜயா நிர்மலா சிவா போன்ற மனிதாபிமானமும், பணியின் மீதான அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இரவு 7.30 மணி... காஞ்சிபுரம் பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது வேலைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்புபவர்கள் பஸ்களை பிடிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவராகத் தான் நிர்மலாவும் பஸ்சை பிடிப்பதற்காக ஓடி கொண்டிருந்தார். 35 வயதாகும் நிர்மலா கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர். காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார். 2-வது ஷிப்டு முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது விசாரணை அலுவலகம் அறைக்கு அருகில் ஓய்வு பெற்ற பஸ் டிரைவர் ராஜேந்திரன் (68) திடீரென்று கீழே மயங்கி சாய்ந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை சுற்றி நின்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே சென்ற நிர்மலா உயிருக்கு போராடிய அவரை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் முதலுதவி சிகிச்சை செய்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு ராஜேந்திரன் மூச்சு விட தொடங்கினார்.
உடனே தனது சக ஊழியர்களை தொடர்புகொண்டு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். தக்க தருணத்தில் சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். நிர்மலாவின் மனித நேய உதவியை பலரும் பாராட்டினார்கள்.
நவீன செவிலியர் முறையை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் மகத்தான சேவை தான் உலகம் முழுவதும் செவிலியர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. இக்கட்டான நேரங்களில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே செவிலியரின் கடமை அந்த கடமையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த நிர்மலா சக ஊழியர்களாலும் பாராட்டப்பட்டார்.






