என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் அருகே தோட்ட காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது. மற்றொருவர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.
    டி.என்.பாளையம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள அட்டணை கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி (வயது 46). சடையப்பன் (50). இவர்கள் 2 பேரும் விவசாயிகள் ஆவர். அட்டணை கிராமத்தையொட்டி பெரியசாமி 3 ஏக்கர் பரப்பளவிலும், சடையப்பன் 5 ஏக்கர் பரப்பளவிலும் தங்களது தோட்டங்களில் குச்சிக்கிழங்கு பயிரிட்டு்ள்ளனர். இவர்களது விவசாய நிலம் அருகருகே உள்ளது.

    இவர்கள் தங்களது தோட்டங்களில் பரண் அமைத்து இரவு நேரத்தில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பெரியசாமியும், சடையப்பனும் தோட்ட காவலுக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் 2 பேரும் பரணில் அமர்ந்து காவல் காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் யானை பிளிறும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு சடையப்பன் பரணில் இருந்து கீழே இறங்கி டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது அங்கு ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி பெரியசாமியிடம் கூறியுள்ளார். உடனே அவரும் பரணில் இருந்து கீழே இறங்கி சடையப்பனின் தோட்டத்துக்கு சென்றார். அதைத்தொடர்ந்து 2 பேரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு யானையை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

    ஆனால் யானை காட்டுக்குள் செல்லாமல் அருகே உள்ள ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைந்து கொண்டது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை. சிறிது தூரம் அவர்கள் சென்றதும் யானை பிளிறியுள்ளது. இதனால் 2 பேரும் பயந்து ஓட தொடங்கினர். அவர்களை யானை துரத்தியுள்ளது. இதில் பெரியசாமி யானையிடம் சிக்கி கொண்டார். அவரை துதிக்கையால் யானை தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    யானையிடம் இருந்து தப்பி ஓடிய சடையப்பன் கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து தோட்ட விவசாயிகள் அங்கு சென்று சடையப்பனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இதுபற்றி அறிந்ததும் கடம்பூர் போலீசாரும், வனத்துறையினரும் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெரியசாமிக்கு அழகம்மாள் என்ற மனைவியும், ராமர் என்ற மகனும், மகேஷ்வரி என்ற மகளும் உள்ளனர்.

    தோட்டத்து காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இறந்த பெரியசாமியின் மனைவியிடம் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
    சத்தியமங்கலம் மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம் போனது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 520-க்கும், முல்லை ரூ.1,640-க்கும், காக்கடா ரூ.725-க்கும், செண்டுமல்லி ரூ.125-க்கும், பட்டுப்பூ ரூ.155-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.100-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.

    நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 360-க்கும், முல்லை ரூ.1,400-க்கும், காக்கடா ரூ.1,150-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை ஆனது.

    நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.160-ம், முல்லை ரூ.240-ம், செண்டுமல்லி ரூ.55-ம், செவ்வந்தி ரூ.40-ம் என விலை உயர்ந்து விற்பனை ஆனது.
    ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    ஈரோடு:

    ஈரோடு சூளை காவிரிநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் துணி பதனிடும் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவிரி நகரில் செந்தில்குமார் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 13-ந் தேதி இரவு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கு பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று காலை செந்தில்குமார் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ரூ.8¾ கோடிக்கு மது விற்பனையானது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தினமும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனையாகிறது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் அதிகமாக மது விற்பனை நடக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதியும், 14-ந் தேதியும் மாவட்டத்தில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

    மது பிரியர்களும் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி சென்றார்கள். குறிப்பாக பீர் வகைகள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட அதிகளவில் மது விற்பனையாகி உள்ளது. 14-ந் தேதி மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 78 லட்சத்து 77 ஆயிரத்து 770-க்கு மதுபானங்கள் விற்பனையானது.

    இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.1½ கோடி அதிகமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சம்பத்நகர் உழவர் சந்தையில் கடந்த 3 நாட்களில் ரூ.13 லட்சத்து 29 ஆயிரத்து 326 மதிப்பிலான 47 ஆயிரத்து 246 டன் காய்கறிகள் விற்பனையானது.
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வகை காய்கறிகளை சாமிக்கு படையல் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களாக உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனை மும்முரமாக நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார்நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் சம்பத்நகர் உழவர் சந்தையில் கடந்த 3 நாட்களில் ரூ.13 லட்சத்து 29 ஆயிரத்து 326 மதிப்பிலான 47 ஆயிரத்து 246 டன் காய்கறிகள் விற்பனையானது.
    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே மரணம் அடைந்தவரது உடலை குளத்தில் இறங்கி மிகவும் சிரமப்பட்டு குளக்கரைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள செம்பாண்டாம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கான மயானம் அக்கிராமத்திலுள்ள குளத்து கரையில் அமைந்துள்ளது.

    குளத்தின் வழியாக செல்லாமல் வேறு வழியில் செல்ல வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் தூரம் சென்றுதான் மயானத்தை அடையமுடியும். இதனால் மழையில்லாத காலத்தில் குறைவான தண்ணீர் செல்லும். அப்போது குளத்தில் இறங்கி கரையிலுள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மழை பெய்து குளம் நிரம்பி 10 முதல் 15 அடி ஆழம் தண்ணீர் நிரம்பியுள்ள காலத்தில் மிகவும் சிரமப்பட்டே இறந்தவர்களின் உடலை பலரும் சுமந்தபடி தண்ணீரில் தவறி விழுந்து விடாமல் பாதுகாப்புடன் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மயானத்திற்கு செல்வதற்கு சிரமமாக இருப்பதால் அனைத்துக் காலங்களிலும் மயானத்திற்கு செல்வதற்கான மாற்றுப்பாதையை அமைத்துத் தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் செம்பாண்டாம்பாளையத்தில் மரணம் அடைந்தவரது உடலை குளத்தில் இறங்கி மிகவும் சிரமப்பட்டு குளக்கரைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவரது உடலை எவ்வித சிரமமின்றி அடக்கம் செய்வதற்கான மாற்று பாதை அமைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (46).விவசாயி. இவருக்கு கே.என்.பாளையம் அட்டணை என்ற கிராமத்தில் வனப்பகுதியையொட்டி 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ளார்.

    இதே பகுதியை சேர்ந்தவர் சடையப்பன் (50). விவசாயி. இவருக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது தோட்டத்திலும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளார்.

    இவர்களது மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் இரவு நேரத்தில் காவலுக்கு சென்று வந்தனர்.

    இதே போல் நேற்று இரவும் பெரியசாமி, சடையப்பன் ஆகியோர் காவலுக்கு சென்றனர். இரவு 11 மணியளவில் அவர்கள் 2 பேரும் ஒரு பரணில் படுத்து தூங்கி கொண்டுஇருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு காட்டு யானை இவர்களது தோட்டத்துக்குள் நுழைந்தது. இதையடுத்து பெரியசாமி, சடையப்பன் ஆகியோர் பரணில் இருந்து கீழே இறங்கி வந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது யானை திடீரென ஆவேசம் அடைந்து 2 பேரையும் தாக்கியது. இதில் பெரியசாமி யானையிடம் வசமாக சிக்கி கொண்டார். அவரை யானை தாக்கி கொன்றது. காயம் அடைந்த சடையப்பன் யானையிடம் இருந்து தப்பி ஓடி வந்தார்.

    அப்போது அவர் திடீரென கிழே விழுந்தார். இதில் அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த சடையப்பனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    யானை தாக்கி பலியான பெரியசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பலியான பெரியசாமிக்கு அழகம்மாள் என்ற மனைவியும், ராமர் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஒருமாத காலத்தில் தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற 2 விவசாயிகள் யானை தாக்கி பலியாகி உள்ளனர். எனவே இரவு தோட்டத்துக்கு காவலுக்கு செல்லும் விவசாயிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
    சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த பழைய கலைநயம் உள்ள பொருட்களை வாங்கும் தொழில் அதிபர் மோகன் என்பவருக்கு ஒரு கும்பல் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மோகன் அவரது நண்பர் ரகுமான் மற்றும் டிரைவர் ஆகியோர் பண்ணாரி கோவிலுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு திடீரென 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் என்று கூறி தொழில் அதிபர் மோகன் அவரது நண்பர் ரகுமான் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை காரில் கடத்தி சென்றனர்.

    அவர்களை ராஜன் நகர் கிராமத்தில் உள்ள ஒருவரது தோட்டத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் தொழில் அதிபர் மோகனின் மனைவி வித்யாவை தொடர்பு கொண்ட கும்பல் உங்கள் கணவர் உள்பட 3 பேரை கடத்தி வைத்துள்ளோம். எனவே ரூ.5 கோடி கொடுத்தால் தான் உங்கள் கணவரை விடுவோம் என்று மிரட்டினர்.

    இதனால் பயந்து போன வித்யா மூன்று தவணைகளாக 21 லட்சம் ரூபாயை மோசடி கும்பலில் ஒருவரான தர்மபுரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    அதன் பிறகு வித்யா சத்தியமங்கலம் போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தொழில் அதிபர் மோகன் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

    அப்போது கடத்தல் கும்பலிடம் இருந்து தொழில் அதிபர் மோகன் அவரது நண்பர் ரகுமான் மற்றும் கார் டிரைவரை மீட்டனர். மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்த ரஞ்சித்குமார், பிரேம், தர்மபுரி ரமேஷ், எரங்காட்டூர் ஜீவானந்தம், சபாபதி உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தங்கமணி என்கிற ஏட்டையா (55), போலீசாக நடிக்க வந்த சிவா (52) ஆகிய 2 பேரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கைதான தங்கமணி என்கிற ஏட்டையா தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து கடந்த 1998-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று தெரியவந்தது. போலீசில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு இதுபோன்ற குற்ற செயல்களில் அவர் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.
    டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள கோவிலில் உருவபொம்மைகள் வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு செய்தனர்.
    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் வனப்பகுதியில் நவக்கிணறு மாதையன் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று பக்தர்கள் பல்வேறு உருவபொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    அதேபோல் இந்த ஆண்டு மாட்டு பொங்கலான நேற்று டி.என்.பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளான கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தவிறு பிள்ளை பொம்மை, காவல் நாய்பொம்மை, விநாயகர் பொம்மை, பசு பொம்மை என பல விதமான வண்ணங்கள் பூசப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை கால்நடையாகவும், 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் எடுத்து சென்றனர்.

    பின்னர் அந்த பொம்மைகளை மாதையனுக்கு படைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுமாறும், நேர்த்திக்கடனை செலுத்தியும் வழிபட்டனர். இது குறித்து கோவிலின் பூசாரி முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எனது முன்னோர்கள் உள்பட 3 தலைமுறைகளுக்கும் மேலாக இக்கோவிலில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். ஒரு நாள் அவர்கள் லிங்கத்தை தலைசுமையாக எடுத்து கொண்டு கோவில் அருகே சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் கிணற்றில் நீர் அருந்த லிங்கத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டனர்.

    தண்ணீர் அருந்திவிட்டு வந்து லிங்கத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அப்படியே நிலத்தில் வேரூன்றி விட்டது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் புதிதாக கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்துகின்றனர்.

    கோவிலின் முகப்பு பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் எப்போதும் தண்ணீர் வற்றியதே கிடையாது. எனவே அந்த கிணற்றை நவக்கிணறு என அழைத்தனர். இது தவிர கோவிலின் நுழைவு பகுதியில் 30 அடியில் கிணறு ஒன்று உள்ளது. அதிலும் தண்ணீர் வற்றியது கிடையாது. மேலும் பக்தர்கள் எதை நினைத்து வேண்டுகின்றனரோ அவை நிறைவேறுகிறது.

    இவ்வாறு கோவில் பூசாரி கூறினார்.
    சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 360-க்கு ஏலம் போனது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 35 கிராமங்களில் இருந்து விவசாயிகள் 3.5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 360-க்கு ஏலம் போனது. அதேபோல் முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.1,400-க்கும், காக்கடா ரூ.1,150-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், பட்டுப் பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.220-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும், துளசி ரூ.60-க்கும் ஏலம் போனது.

    மேலும் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 100-க்கும், முல்லைப்பூ ரூ.1,660-க் கும், காக்கடா ரூ.1,250-க்கும், செண்டுமல்லி ரூ.54-க்கும், பட்டுப் பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை ஆனது.

    நேற்று முன்தினத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.260-ம், செண்டுமல்லி ரூ.16-ம், கனகாம்பரம் ரூ.110-ம் விலை அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.260-ம், காக்கடா ரூ.100-ம், பட்டு்ப்பூ ரூ.5-ம், சம்பங்கி ரூ.10-ம், செவ்வந்தி ரூ.40-ம் குறைந்திருந்தது.
    கொரோனா காலத்தில் வழக்கத்தில் இருந்து காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை தேடி பிடித்து வாங்கி வந்து என்ஜினீயர் பயிரிட்டுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் செந்தில் குமார். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு, வார விடுமுறை தினத்தில் வயலுக்கு வந்து வேலை செய்து வந்த இவருக்கு, கொரோனா ஊரடங்கும், வீட்டில் இருந்தே பணியும் தனது விவசாய ஆர்வத்தையும் அதற்கான வாய்ப்பையும் அதிகரித்தது. பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் தனக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் இயற்கை நெல் சாகுபடியில் களம் இறங்கினார்.

    வழக்கத்தில் இருந்து காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை தேடி பிடித்து வாங்கி வந்து பயிரிட்டுள்ளார். இதில் குறிப்பாக, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, கல்லுரண்டை, புத்தர் சாப்பிட்டதாக கருதப்படும் காளான் நமக், கருடன் சம்பா, தங்க சம்பா, பூங்கார், கருங்குருவை, இலுப்பை பூ சம்பா மற்றும் ஆள் உயரத்திற்கு வளரும் மாப்பிள்ளை சம்பா என 15 வகையான ரகங்களை பயிரிட்டுள்ளார்.

    இதில் பெரும்பாலான ரகங்கள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    சிறு வயதிலிருந்தே எனக்கு விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது. விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன்.தற்போது காலமாற்றத்தால் அனைத்தும் மாறிவிட்டன நான் ஐ.டி. துறையில் வேலை பார்த்து வந்தாலும் விவசாயம் மீதான ஆர்வம் குறையவில்லை.

    எனக்கு சொந்தமான நிலத்தை இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இப்போது கொரோனாவால் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறேன். இதனால் வேலை நேரம் போக மீதி நேரங்களில் விவசாயத்திற்காக பணியை ஒதுக்கி உள்ளேன்.

    இயற்கை முறையில் விதைப்போம் அறுப்போம் என்ற முறையில் எவ்வித பயிர் மேலாண்மையும் செய்யாமல் விளைவித்து வருகிறேன். என்னை பார்த்து நண்பர்களும், கிராமத்தினரும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைவித்த நெல்லை தனது தேவைக்கு போக மற்றவர்களுக்கு விதை நெல்லாக கொடுத்து மீண்டும் பாரம்பரிய பயிர் ரகங்களை மீட்டெடுக்க போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவரின் இந்த முயற்சியை இயற்கை வேளாண் விவசாயிகள் பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் மற்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இங்கு வந்து ஆர்வத்துடன் பார்வை யிட்டு செல்கின்றனர். ஐ.டி. துறையில் பணி, கை நிறைய சம்பளம் என நிற்காமல், வேளாண்மையில் கால் பதித்து பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இவரது முயற்சி, இயற்கை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    கோபி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 42). நேற்று மதியம் வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். பின்னர் வீட்டுக்குள் வந்து மாட்டுத்தரகர் வீடு இங்கு எங்கு உள்ளது? என்று கேட்டார். விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல முயன்றபோது, அந்த நபர் வெடுக்கென்று விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, மோட்டார்சைக்கிளில் மின்னலாய் மறைந்துவிட்டார். விஜயலட்சுமி திருடன் திருடன் என்று கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள். ஆனால் கொள்ளையனை பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து விஜயலட்சுமி சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ×