search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சென்னை தொழில் அதிபர் கடத்தலில் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உள்பட மேலும் 2 பேர் கைது

    சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த பழைய கலைநயம் உள்ள பொருட்களை வாங்கும் தொழில் அதிபர் மோகன் என்பவருக்கு ஒரு கும்பல் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மோகன் அவரது நண்பர் ரகுமான் மற்றும் டிரைவர் ஆகியோர் பண்ணாரி கோவிலுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு திடீரென 3 கார்களில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் என்று கூறி தொழில் அதிபர் மோகன் அவரது நண்பர் ரகுமான் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை காரில் கடத்தி சென்றனர்.

    அவர்களை ராஜன் நகர் கிராமத்தில் உள்ள ஒருவரது தோட்டத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் தொழில் அதிபர் மோகனின் மனைவி வித்யாவை தொடர்பு கொண்ட கும்பல் உங்கள் கணவர் உள்பட 3 பேரை கடத்தி வைத்துள்ளோம். எனவே ரூ.5 கோடி கொடுத்தால் தான் உங்கள் கணவரை விடுவோம் என்று மிரட்டினர்.

    இதனால் பயந்து போன வித்யா மூன்று தவணைகளாக 21 லட்சம் ரூபாயை மோசடி கும்பலில் ஒருவரான தர்மபுரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    அதன் பிறகு வித்யா சத்தியமங்கலம் போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தொழில் அதிபர் மோகன் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

    அப்போது கடத்தல் கும்பலிடம் இருந்து தொழில் அதிபர் மோகன் அவரது நண்பர் ரகுமான் மற்றும் கார் டிரைவரை மீட்டனர். மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்த ரஞ்சித்குமார், பிரேம், தர்மபுரி ரமேஷ், எரங்காட்டூர் ஜீவானந்தம், சபாபதி உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தங்கமணி என்கிற ஏட்டையா (55), போலீசாக நடிக்க வந்த சிவா (52) ஆகிய 2 பேரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கைதான தங்கமணி என்கிற ஏட்டையா தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து கடந்த 1998-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று தெரியவந்தது. போலீசில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு இதுபோன்ற குற்ற செயல்களில் அவர் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.
    Next Story
    ×