என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7 நாட்கள் தடுப்பூசி போடப்படவில்லை. இதையடுத்து கடந்த 13, 14-ந் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. 2 நாட்களில் தடுப்பூசி தீர்ந்து விட்டது.

    இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ந் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 16-ந் தேதி 15 ஆயிரத்து 600 கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன.

    அன்றைய தினமே புறநகர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர். ஆனால் மாநகர பகுதியில் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. 17-ந்தேதி ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மாநகரில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் புறநகர் பகுதியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு நேற்று இரவு முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.

    இந்நிலையில் தடுப்பூசி போடும் மையமான வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு திரண்ட மக்கள் தாங்களாகவே டோக்கன்கள் போட்டுக்கொண்டும், கற்கள், குடங்களை வரிசையில் வைத்தும் இடம் பிடித்து விடிய, விடிய காத்து நின்றனர்.

    மாநகர் பகுதியில் 10 மையங்களில் வழக்கமாக ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் இன்று 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதனால் இரவில் காத்து கிடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்தது. காலையில் வந்தவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆரம்பத்தில் தடுப்பூசியை கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி போட திரண்டு வருகின்றனர்.
    பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 200 கனஅடி என மொத்தம் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம்:

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 6 ஆயிரத்து 829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கடந்த 17-ந்தேதி பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 89.26 அடியாக இருந்தது. நேற்று 90.98 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று காலை 91.96 அடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 92 அடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 200 கனஅடி என மொத்தம் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது கடந்த 6 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு 10 ஆயிரத்து 178 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 90.98 அடியாக உயர்ந்தது. அணைக்கு தொடர்ந்து இதே அளவில் நீர்வரத்து இருந்தால் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்டும். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக அணையை கண்காணித்து வருகின்றனர்.

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக பொறுப்பு ஏற்ற புதிய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாக கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று காலை பொறுப்பு ஏற்றார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் வரவேற்று, கலெக்டரின் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கு கோப்புகளில் கையொப்பமிட்டு ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக எச்.கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் புதிய கலெக்டராக பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நான் கலெக்டராக பணியாற்றும் 2-வது மாவட்டம் இதுவாகும். இங்கு ஏற்கனவே கோபி சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளேன்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் அரசின் வழிகாட்டுதலுடன் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட இருக்கிறேன். அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதுபோல ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சரியாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தடுப்பூசி அல்லது கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் தொடர்பாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசின் வழிகாட்டுதலின் படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்ட பலன்கள் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் காப்பீட்டு திட்டம் தனியார் ஆஸ்பத்திரிகளில் செயல்படுவதை உறுதி செய்து, தகுதியானவர்கள் சிகிச்சை பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதுமட்டுமின்றி, மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகள் சார்ந்த பிரச்சினைகளும் இனி உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும். நான் புதிதாக பொறுப்பு ஏற்று இருப்பதால், ஒவ்வொரு துறைகளைப்பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டு சிறந்த நிர்வாகம் அமைய நடவடிக்கை எடுப்பேன். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க மக்கள் முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

    அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.பிரதிக் தயாள் ஆகியோர் இருந்தனர்.

    புதிதாக பொறுப்பு ஏற்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். பின்னர் 2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்ட பயிற்சி கலெக்டராக இருந்தார். 2014-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி சப்-கலெக்டராக பொறுப்பு ஏற்ற அவர் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2017-ம் ஆண்டு தமிழக அரசின் நிதித்துறை துணை செயலாளர் பதவி ஏற்றார். 2019-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற அவர் நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றினார்.

    கடந்த 22-2-2021 அன்று தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து பணியிட மாறுதல் பெற்று ஈரோடு மாவட்டத்தின் 34-வது கலெக்டராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் சப்-கலெக்டராக பதவி வகித்து, ஈரோடு மாவட்ட கலெக்டராக உயர்ந்து உள்ளார் என்பதும் ஈரோடு மாவட்டத்தின் 26-வது கலெக்டர் டாக்டர் ஆனந்தகுமாருக்கு பின்னர், கலெக்டராக பதவி ஏற்ற நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஷ்ணனுண்ணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மருந்து கடையில் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை போல் கொரோனா நோயாளிகளுக்கும் மற்றும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவது தெரிய வந்தது.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பாளையம் என்ற கிராமத்தில் ஒரு மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஊசி போடுவதாக தாசில்தார் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதையடுத்து கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார் பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் தங்கமணி, புஞ்சைகொளாநல்லி ஆரம்ப சுகாதார மருத்துவர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர் தங்கவேல் மற்றும் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிதாஸ், மலையம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மன்சூர்அலி ஆகியோர் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது மருந்து கடையில் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை போல் கொரோனா நோயாளிகளுக்கும் மற்றும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஒரு தனியார் நூல் மில் இயங்கி வருகிறது. இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது சந்தோஷ் தான் வேலை பார்த்த மில்லில் பணியாற்றி வந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த சிறுமியை திருப்பத்தூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி ஆகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் பவானி சாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, குந்தா, பில்லூர் அணை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன் அணைக்கு நீர்வரத்து 137 கனஅடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து 2667 கனஅடியாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் 6 ஆயிரத்து 278 கன அடி நீர் அணைக்கு வந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 947 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 89.14 அடியாக உயர்ந்து உள்ளது.

    அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஆசனூர் அருகே காட்டுயானை தனது குட்டியுடன் சாலையோரம் சுற்றித் திரிந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் -கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக -கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆசனூர் வனப்பகுதி இருந்து வெளியேறும் காட்டு யானைகள் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வனப்பகுதியில் தீவனம் உட்கொள்வதோடு சாலையில் ஜாலியாக உலா வருகின்றன.

    தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்கு வரத்து குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகன போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வருகின்றன. இதனால் வனவிலங்குகள் சாலையில் நீண்ட நேரம் நின்று செல்வது தொடர்கதையாகி வருகிறது. ஆசனூர் அருகே காட்டுயானை தனது குட்டியுடன் சாலையோரம் சுற்றித் திரிந்தது. அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் காட்டு யானைகளை செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சாலையோரம் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் செல்போன் மூலம் யானைகளை படம் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளசாரயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சைபுளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் பழத் தோட்ட பகுதியில் கள்ள சாராயம் காய்சுவதாக புஞ்சைபுளியம்பட்டி தனி பிரிவு போலீஸ் சதாசிவத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் மது விலக்கு இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையிலான போலீசார் சோதனையிட்ட போது கள்ள சாராயம் காய்சுவதற்காக ஒரு பேரலில் 50 லிட்டர் ஊறல் போட்டு வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

    மேலும் அப்பகுதியில் கள்ள சாராயம் காய்சி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரனையில் கனக்கரசம் பாளையத்தை சேர்ந்த காளிமுத்து (26) என்பவர் கள்ள சாராயம் காய்சி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது காளிமுத்துவை கைது செய்த மது விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை அருகே புளிய மரத்தில் வேன் மோதி பஸ் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் நாடார் வீதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 46). ஒட்டபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (36). இவர்கள் இருவரும் அரசு பஸ் டிரைவர்கள்.

    இந்த நிலையில் அன்பழகன் முதுகுவலி காரணமாக தர்மபுரி அருகே உள்ள நல்லாம்பட்டிக்கு டாக்டரை சந்திப்பதற்காக ஒரு ஆம்னி வேனில் அன்பழகன் மற்றும் சதீஷ் ஆகியோர் சென்றனர்.

    இருவரும் நல்லம்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு அம்மாபேட்டை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் பூதப்பாடி அண்ணா நகர் பகுதியில் வந்தனர்.

    அப்போது ரோட்டோரம் உள்ள புளிய மரத்தில் ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் வேனை ஓட்டி வந்த அன்பழகன் மற்றும் சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து விபத்து நடந்த இடத்துக்கு அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் வந்து அவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அன்பழகன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சதீஷ் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பள்ளி மாணவிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கப்பட்டிருந்தது.

    சித்தோடு:

    பவானி, சித்தோட்டில் தமிழ் மன்றம் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப்பை தமிழ் ஆசிரியர் கலைச்செல்வன் என்பவர் உருவாக்கி இருந்தார். இந்த குரூப்பில் முன்னாள் மற்றும் தற்போது படிக்கும் மாணவிகள் 227 பேர் இணைக்கப்பட்டு இருந்தனர்.

    பள்ளி மாணவிகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல் பகிர்ந்து கொள்ள இந்த வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் இந்த வாட்ஸ்-அப் குரூப்பில் ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஆபாசப்படம் பகிரப்பட்டு இருந்தது. இதனை பார்த்து மாணவிகள் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள ஒரு மாணவியின் பெற்றோர் ஆபாசப்படம் அனுப்பிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில் சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகைய்யன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஆபாசப்படம் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஈரோடு, கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 45) கூலி தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வாட்ஸ்அப் குரூப்பில் பொன்னுசாமிதான் ஆபாச படம் அனுப்பியது தெரியவந்தது. மதுபோதையில் ஆபாச படத்தை அனுப்பியதாக போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள மாணவிகள், பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் 150 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதையொட்டி கொடுமுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
    ஈரோடு:

    கொடுமுடியில் உள்ள ஸ்ரீ சங்கரர் வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை 3.30 மணி முதலே பொதுமக்கள் பள்ளிக்கூடம் முன்பு குவிந்தனர். இதில் 200 பேருக்கு மட்டும் நேற்று காலை 6.30 மணி அளவில் ேடாக்கன் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் வரிசையாக நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். சுகாதார மருத்துவர் பிரியங்கா மற்றும் செவிலியர்கள் தடுப்பூசிகளை போட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜய்நாத் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தார்கள். இதேபோல் சோளக்காளிபாளையத்தில் உள்ள சென்னசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதலில் வந்திருந்த பொதுமக்கள் 200 பேருக்கு சுகாதார ஆய்வாளர் வசந்தகுமார் நேற்று காலை 6.30 மணி அளவில் டோக்கன் கொடுத்தார். பின்னர் அவர்களுக்கு டாக்டர் தீபிகா தடுப்பூசி போட்டார். இங்கு 150 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதையொட்டி கொடுமுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    இதேபோல் சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது. தடுப்பூசி போடுவதற்காக நேற்று அதிகாலை 5 மணிக்கே வந்து பொதுமக்கள் காத்திருந்தனர். இதில் முதலில் வந்த 300 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.

    அதேபோல் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டு், தடுப்பூசி போடப்பட்டது. டோக்கன் கிடைக்காத பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு 150 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 50 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து நேற்று இங்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. தடுப்பூசி போட டோக்கன் பெறுவதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவிலேேய திரளான பொதுமக்கள் ஆஸ்பத்திாிக்கு வந்து காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து முதலில் வந்த 200 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு், தடுப்பூசி போடப்பட்டது. டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நம்பியூர், கெட்டிசெவியூர், எலத்தூர், மலையபாளையம் ஆகிய 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போட அதிகாலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். முதலில் வந்த 200 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

    தடுப்பூசி போடுவதற்கான பணிகளை நம்பியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மொழி செய்திருந்தார். இதையொட்டி நம்பியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அம்மாபேட்டை வட்டாரத்தில் அம்மாபேட்டை, குருவரெட்டியூர், வெள்ளித்திருப்பூர், ஒலகடம், ஆலம்பாளையம், ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக பொதுமக்கள் அதிகாலை முதலே தடுப்பூசி போடும் இடங்களுக்கு சென்று டோக்கன் பெற்றுக்கொண்டனர். பின்னர் வரிசையில் நின்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இருபிரிவுகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதில் அம்மாபேட்டை, குருவரெட்டியூர், வெள்ளித்திருப்பூர், ஒலகடத்தில் தலா 200 பேருக்கும், ஆலாம்பாளையத்தில் 150 ேபருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ×